உள்ளடக்கத்திற்குச் செல்க

Apostles பற்றிய பைபிள் வசனங்கள்

90 வசனங்கள் · 11 அம்சங்கள்

முக்கிய பைபிள் வசனங்கள்

புத்தகத்தின்படி வடிகட்டு
  1. இயேசு கலிலேயா கடற்கரையில் நடந்து போகும்போது, பேதுரு என அழைக்கப்பட்ட சீமோன், அவன் சகோதரன் அந்திரேயா ஆகிய இரண்டு சகோதரரைக் கண்டார். மீனவர்களான அவர்கள் கடலில் வலை வீசிக்கொண்டிருந்தார்கள்.

  2. இயேசு அவர்களிடம், “வாருங்கள், என்னைப் பின்பற்றுங்கள். நான் உங்களை இறைவனுடைய வழியில் மனிதரை நடத்துகிறவர்களாக மாற்றுவேன்” என்றார்.

  3. உடனே அவர்கள் தங்கள் வலைகளை விட்டுவிட்டு இயேசுவைப் பின்பற்றினார்கள்.

  4. இயேசு அங்கேயிருந்து போய்க்கொண்டிருக்கையில், வேறு இரண்டு சகோதரர்களான செபெதேயுவின் மகன் யாக்கோபையும், அவனுடைய சகோதரன் யோவானையும் கண்டார். அவர்கள் தங்கள் தகப்பன் செபதேயுவுடன் ஒரு படகில் இருந்து, தங்கள் வலைகளை ஆயத்தப்படுத்திக் கொண்டிருந்தார்கள். இயேசு அவர்களையும் கூப்பிட்டார்.

  5. உடனே அவர்கள் படகையும், தங்கள் தகப்பனையும் விட்டுவிட்டு இயேசுவைப் பின்பற்றினார்கள்.

  6. சீடர்கள் இயேசுவிடம் வந்து, அவரை எழுப்பி, “ஆண்டவரே, எங்களைக் காப்பாற்றும்! நாங்கள் தண்ணீரில் மூழ்கப்போகிறோம்!” என்று அவரிடம் சொன்னார்கள்.

  7. அதற்கு இயேசு, “விசுவாசக் குறைவுள்ளவர்களே! நீங்கள் ஏன் இவ்வளவாய் பயப்படுகிறீர்கள்?” எனக் கேட்டார். பின்பு அவர் எழுந்து காற்றையும் அலைகளையும் கடிந்துகொண்டார். அப்பொழுது மிகுந்த அமைதி உண்டாயிற்று.

  8. அதைக் கண்டவர்கள் வியப்படைந்து, “இவர் எப்படிப்பட்டவரோ? காற்றும் அலைகளுங்கூட இவருக்குக் கீழ்ப்படிகிறதே!” என்று பேசிக்கொண்டார்கள்.

  9. இயேசு அங்கிருந்து போகும்போது, மத்தேயு என்னும் பெயருடைய ஒருவன் வரி வசூலிக்கிறவர்களுடைய அலுவலகத்தில் உட்கார்ந்திருப்பதைக் கண்டார். அவர் அவனிடம், “என்னைப் பின்பற்றி வா” என்றார். அவன் எழுந்து அவரைப் பின்பற்றிச் சென்றான்.

  10. பின்பு இயேசு, மத்தேயுவின் வீட்டில் விருந்து சாப்பிடும்போது, வரி வசூலிக்கிறவர்களும், பாவிகளும் அநேகர் வந்து, அவருடனும் அவருடைய சீடர்களுடனும் சாப்பிட்டார்கள்.

  11. இவை அந்தப் பன்னிரண்டு அப்போஸ்தலர்களின் பெயர்கள்: முதலாவது, பேதுரு என அழைக்கப்பட்ட சீமோன், அவனுடைய சகோதரன் அந்திரேயா; செபெதேயுவின் மகன் யாக்கோபு, அவனுடைய சகோதரன் யோவான்;

  12. பிலிப்பு, பர்தொலொமேயு; தோமா, வரி வசூலிப்பவனான மத்தேயு, அல்பேயுவின் மகன் யாக்கோபு, ததேயு,

  13. கானானியனாகிய சீமோன், இயேசுவைக் காட்டிக்கொடுத்த யூதாஸ்காரியோத்து ஆகியோரே.

  14. அவர்கள் தங்களுக்குள்ளே பேசிக்கொள்வதை அறிந்த இயேசு அவர்களிடம், “விசுவாசம் குறைந்தவர்களே, அப்பம் இல்லாததைக் குறித்து நீங்கள் ஏன் உங்களுக்குள்ளே பேசுகிறீர்கள்.

  15. நீங்கள் இன்னும் விளங்கிக்கொள்ளவில்லையா? உங்களுக்கு நினைவில்லையா? ஐந்து அப்பங்களை ஐயாயிரம் பேருக்குக் கொடுத்து, மீதியானதை எத்தனை கூடைகள் நிறையச் சேர்த்தீர்கள்?

  16. அல்லது ஏழு அப்பங்களை நாலாயிரம் பேருக்குக் கொடுத்து, மீதியானதை எத்தனை கூடைகளில் சேர்த்தீர்கள்?

  17. இப்படியிருக்க நான் அப்பத்தைப் பற்றிச் சொல்லவில்லை என்று நீங்கள் விளங்கிக்கொள்ளாதது எப்படி? ஆனால், பரிசேயர் சதுசேயரின் புளிப்பூட்டும் பொருளைக் குறித்து விழிப்பாயிருங்கள்” என்றார்.

  18. அப்பத்தைப் புளிப்பூட்டும் பொருளைக் குறித்து அல்ல, பரிசேயர், சதுசேயரின் போதனையைக்குறித்து விழிப்பாயிருக்கும்படியே அதைச் சொன்னார் என்று அப்பொழுதுதான் சீடர்கள் விளங்கிக்கொண்டார்கள்.

  19. அதற்கு இயேசு, “யோனாவின் மகனாகிய சீமோனே, நீ ஆசீர்வதிக்கப்பட்டவன். ஏனெனில், இது உனக்கு மனிதனால் வெளிப்படுத்தப்படவில்லை. பரலோகத்திலிருக்கிற எனது பிதாவினாலேயே வெளிப்படுத்தப்பட்டது.

  20. எனவே நான் உனக்குச் சொல்கிறேன்: நீ பேதுரு, இந்தப் பாறையின்மேல், நான் என் சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்ளமாட்டாது.

  21. நான் உனக்கு பரலோக அரசின் திறவுகோல்களைத் தருவேன்; நீ பூமியில் எதைக் கட்டுகிறாயோ, அது பரலோகத்திலும் கட்டப்படும். நீ பூமியில் எதைக் கட்டவிழ்க்கிறாயோ, அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்படும்” என்றார்.

  22. அந்த வேளையிலிருந்து, இயேசு தம்முடைய சீடர்களுக்கு தாம் எருசலேமுக்குப் போகவேண்டும் என்றும், மக்கள் யூதரின் தலைவராலும், தலைமை ஆசாரியர்களாலும், மோசேயின் சட்ட ஆசிரியர்களாலும் அநேக துன்பங்களை அனுபவிக்கவேண்டும் என்றும், அத்துடன் தாம் கொல்லப்பட்டு, மூன்றாம் நாளில் உயிரோடு எழுப்பப்பட வேண்டும் என்றும் சொல்லத் தொடங்கினார்.

  23. அப்பொழுது பேதுரு, இயேசுவை தனியே அழைத்துக் கொண்டுபோய், “ஆண்டவரே, இது ஒருபோதும் நடக்கக்கூடாது! இது ஒருபோதும் உமக்கு நேரிடாது” என்று அவரைக் கண்டிக்கத் தொடங்கினான்.

  24. அப்பொழுது செபெதேயுவின் பிள்ளைகளின் தாய் தனது மகன்களைக் கூட்டிக்கொண்டு இயேசுவிடம் வந்தாள். அவள் முழங்காற்படியிட்டு, அவரிடம் ஒரு உதவியைக் கேட்டாள்.

  25. “நீ விரும்புவது என்ன?” என்று அவர் அவளிடம் கேட்டார். அதற்கு அவள், “உமது அரசில் எனது இரு மகன்களில் ஒருவன் உமது வலதுபக்கத்திலும், மற்றவன் உமது இடது பக்கத்திலும் உட்காரும்படி அனுமதிக்கவேண்டும்” என்றாள்.