Skip to content

Absalom பற்றிய பைபிள் வசனங்கள்

65 வசனங்கள் · 10 அம்சங்கள்

முக்கிய பைபிள் வசனங்கள்

புத்தகத்தின்படி வடிகட்டு
  1. அதன்பின் நாபாலின் மனைவியாயிருந்த கர்மேல் ஊரைச்சேர்ந்த அபிகாயில், கீலேயாப் என்னும் அவனுடைய இரண்டாவது மகனைப் பெற்றாள். கேசூரின் அரசன் தல்மாயின் மகள் மாக்காள் தாவீதின் மூன்றாவது மகன் அப்சலோமைப் பெற்றாள்.

  2. அப்சலோம் நன்மையாகவோ, தீமையாகவோ அம்னோனுடன் ஒரு வார்த்தையும் பேசவில்லை. ஆனால் தன் சகோதரி தாமாரை அம்னோன் அவமானப்படுத்தியபடியால் அப்சலோம் அவனை வெறுத்தான்.

  3. இரண்டு வருடங்களுக்குப் பின்பு எப்பிராயீமின் எல்லைக்கு அருகே உள்ள பாகால் காசோரிலே அப்சலோமின் ஆடுகளின் மயிர் கத்தரிப்பவர்கள் இருந்தார்கள். அங்கே அரசனுடைய எல்லா மகன்களையும் வரும்படி அப்சலோம் அழைத்திருந்தான்.

  4. அப்சலோம் அரசனிடம் சென்று, “உம்முடைய அடியான் ஆடுகளுக்கு மயிர் கத்தரிப்பவர்களை வேலைக்கு அழைத்திருக்கிறேன். அரசரும் அவர் அதிகாரிகளும் அவ்விடத்திற்கு என்னிடம் வரும்படி தயவாய் அழைக்கிறேன்” என்றான்.

  5. அதற்கு அரசன், “வேண்டாம் என் மகனே; நாங்கள் எல்லோரும் வரக்கூடாது. நாங்கள் உனக்குப் பாரமாக மட்டுமே இருப்போம்” என்றான். அப்சலோம் எவ்வளவு வற்புறுத்தியும் அரசன் போக மறுத்துவிட்டான். ஆனாலும் அவனை ஆசீர்வதித்தான்.

  6. அப்பொழுது அப்சலோம் அரசனிடம், “அப்படி நீங்கள் வரமுடியாவிட்டால் என் சகோதரன் அம்னோனையாவது எங்களோடு வருவதற்கு உத்தரவு கொடுங்கள்” என்றான். அதற்கு அரசன், “அவன் உன்னுடன் ஏன் வரவேண்டும்” எனக் கேட்டான்.

  7. ஆனாலும் அப்சலோம் அரசனை வற்புறுத்தினபடியால் அரசன் அம்னோனையும், மற்ற மகன்களையும் அவனோடு அனுப்பினான்.

  8. அப்பொழுது அப்சலோம் தன் மனிதரிடம், “கேளுங்கள். அம்னோன் திராட்சைமது குடித்து மகிழ்ந்திருக்கும் வேளையில் நான் உங்களிடம் அம்னோனை வெட்டி வீழ்த்துங்கள் என்று சொல்வேன். அப்பொழுது நீங்கள் பயப்படாமல் அவனைக் கொல்லவேண்டும். உங்களுக்கு உத்தரவிடுவது நான் அல்லவா? பலமும் தைரியமுமுள்ளவர்களாய் இருங்கள்” என்று கட்டளையிட்டான்.

  9. அப்சலோம் கட்டளையிட்டபடியே அவனுடைய மனிதர் அம்னோனுக்குச் செய்தார்கள். இதைக் கண்ட அரசனின் மகன்கள் அவரவர் கோவேறு கழுதைகளில் ஏறி தப்பிப் போனார்கள்.

  10. அப்சலோமோ கேசூரின் அரசனான அம்மியூதின் மகன் தல்மாயிடம் தப்பி ஓடிப்போனான். ஆனால் தாவீது அரசனோ தன் மகனுக்காக நாள்தோறும் துக்கங்கொண்டாடினான்.

  11. அப்சலோம் கேசூருக்குத் தப்பி ஓடிப்போனபின், அங்கே மூன்று வருடங்கள் தங்கியிருந்தான்.

  12. தாவீது அரசனின் இருதயம் அப்சலோமுக்காக ஏங்கிக்கொண்டிருக்கிறது என்பதை செருயாவின் மகன் யோவாப் அறிந்துகொண்டான்.

  13. எனவே யோவாப் தெக்கோவாவுக்கு ஆளனுப்பி அங்கேயுள்ள ஞானமுள்ள ஒரு பெண்ணை அழைத்தான். அவள் வந்தபோது யோவாப் அவளிடம், “நீ துக்கங்கொண்டாடும் பெண்ணைப்போல் பாசாங்கு செய்து துக்கவுடை உடுத்திக்கொள். தலைக்கு எண்ணெய் ஒன்றும் பூசாதே. இறந்துபோனவர்களுக்காக நெடுநாட்களாக துக்கங்கொண்டாடுகிறவளைப் போல நடிக்கவேண்டும்.

  14. பின் அரசனிடம் போய் இவ்விதமாய் நீ பேசவேண்டும்” என்றான். அவ்வாறே யோவாப் அவள் பேசவேண்டியதை அவளுக்குச் சொல்லிக் கொடுத்தான்.

  15. அதன்படி தெக்கோவா ஊராளான அப்பெண் அரசனிடம் சென்று, தரையில் முகங்குப்புற விழுந்து வணங்கி, “அரசே, எனக்கு உதவும்” என்றாள்.

  16. அப்பொழுது அரசன் அவளிடம், “உனக்கு என்ன துன்பம் நேரிட்டது?” என்று கேட்டான். அதற்கு அவள், “எனது கணவர் இறந்துவிட்டார். நான் ஒரு விதவை.

  17. உம்முடைய அடியாளாகிய எனக்கு இரண்டு மகன்கள் இருந்தார்கள். அவர்கள் இருவரும் வயல்வெளியில் சண்டையிட்டார்கள். அவர்களை விலக்கிவிட ஒருவரும் இல்லாதபடியால், ஒருவன் மற்றவனை அடித்துக் கொன்றுவிட்டான்.

  18. இப்பொழுது எங்கள் வம்சம் எல்லாம் உமது அடியாளுக்கு எதிராக எழும்பி, ‘தன் சகோதரனைக் கொன்றவனை எங்களிடம் கொண்டுவா. அவன் கொலைசெய்த அவனுடைய சகோதரனின் உயிருக்காக அவனைக் கொலைசெய்யவேண்டும். சொத்துக்கு உரிமையாளனையும் அழிப்போம்’ என்கிறார்கள். இவ்வாறாக எனக்கு மிஞ்சியிருக்கும் அந்த ஒரே விளக்கை அணைத்து, என் கணவருக்கு பூமியின்மேல் பெயரும் சந்ததியும் இல்லாதபடி செய்வார்கள்” என்றாள்.

  19. அப்பொழுது அரசன் அவளிடம், “நீ வீட்டிற்கு போ; நான் உன் சார்பில் ஒரு கட்டளை அனுப்புவேன்” என்றான்.

  20. ஆனாலும் அந்த தெக்கோவா பெண் அரசனிடம், “என் தலைவனாகிய அரசே, இந்த குற்றம் என்மேலும் என் தகப்பன் குடும்பத்தின்மேலும் சுமருவதாக; அரசனும், அவரது சிங்காசனமும் குற்றமின்றி இருக்கட்டும்” என்றாள்.

  21. அதற்கு அரசன், “உனக்கு யாராவது ஏதாவது சொன்னால் என்னிடம் கொண்டுவா; அவன் உன்னை மறுபடியும் தொந்தரவு செய்யமாட்டான்” என்றான்.

  22. தொடர்ந்து அவள், “இரத்தப்பழிவாங்குகிறவன் அழிவுடன் அழிவைக் கூட்டாமல் தடுக்கும்படி, அரசர் தம் இறைவனாகிய யெகோவாவை வேண்டிக்கொள்வாராக. அப்பொழுது என் மகன் சாகமாட்டான்” என்றாள். அதற்கு தாவீது அரசன் அவளிடம், “யெகோவா இருப்பது நிச்சயமெனில் உன் மகனின் தலைமயிரில் ஒன்றாவது தரையில் விழாது என்பதும் நிச்சயம்” என்றான்.

  23. பின்பும் அவள், “என் தலைவனாகிய அரசரிடம் உமது அடியவள் இன்னும் ஒன்றைக் கேட்கலாமா?” என்றாள். அதற்கு அரசன், “சரி கேள்” என்றான்.

  24. எனவே அந்த பெண், “அப்படியானால் ஏன் இறைவனின் மக்களுக்கு விரோதமாக இப்படியொரு செயலைத் திட்டமிடுகிறீர். அரசன் இப்படிச் சொல்லும்போது நாடுகடத்தப்பட்ட தன் மகனைத் திருப்பிக் கொண்டுவராததினால் தன்னைத்தானே குற்றவாளியாக்குகிறார் அல்லவா?

  25. நிலத்தில் சிந்திய தண்ணீரைத் திருப்பி எடுக்க முடியாததுபோல, நாங்கள் எல்லோரும் சாகவேண்டும். ஆனால் இறைவன் உயிர்களை அப்படி எடுக்கிறவர் அல்ல. அதற்குப் பதிலாகத் தன்னை விட்டுத் தூரமாய் போனவர்களைத் திரும்பவும் தன்னிடம் கொண்டுவர அவர் வழிகளை வகுக்கிறார்.