circa 6 BC – AD 30
The Life of Jesus
The eternal Son of God enters history: born in Bethlehem, baptized in the Jordan, crucified at Golgotha, raised on the third day.
- மாற்கு 13:28சுமார் கி.பி. 33
“இப்பொழுது அத்திமரத்தின் உவமையிலிருந்து இந்தப் பாடத்தைக் கற்றுக்கொள்ளுங்கள்: அதில் சிறு கிளைகள் தோன்றி இலைகள் வரும்போது, கோடைகாலம் நெருங்குகிறது என்று அறிகிறீர்கள்.
- மாற்கு 13:29சுமார் கி.பி. 33
அவ்வாறே இவற்றையெல்லாம் நீங்கள் காணும்போது, முடிவுகாலம் நெருங்கி வாசலருகே வந்துவிட்டது என்று அறிந்துகொள்ளுங்கள்.
- மாற்கு 13:30சுமார் கி.பி. 33
நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், இந்தக் காரியங்களெல்லாம் நடந்துமுடியும் வரைக்கும், நிச்சயமாகவே இந்தத் தலைமுறை ஒழிந்துபோகாது.
- மாற்கு 13:31சுமார் கி.பி. 33
வானமும், பூமியும் ஒழிந்துபோகும், ஆனால் என் வார்த்தைகளோ ஒருபோதும் ஒழிந்துபோகாது.
- மாற்கு 13:32சுமார் கி.பி. 33
“அந்த நாளையோ, அந்த நேரத்தையோ ஒருவனும் அறியமாட்டான். ஏன், பரலோகத்திலிருக்கிற தூதர்களுக்கும் மானிடமகனாகிய எனக்கும் தெரியாது; ஆனால் பிதா மட்டுமே அதை அறிவார்.
- மாற்கு 13:33சுமார் கி.பி. 33
நீங்கள் கவனமாயிருங்கள்! விழிப்பாயிருங்கள்! அந்நேரம் எப்பொழுது வரும் என்று உங்களுக்குத் தெரியாதே.
- மாற்கு 13:34சுமார் கி.பி. 33
இதுவோ, ஒருவன் தன் வேலைக்காரர் பொறுப்பில், தன் வீட்டை ஒப்படைத்துவிட்டுப் போவதைப்போல் இருக்கிறது. அவன் ஒவ்வொருவருக்கும், அவனவன் வேலையைப் பொறுப்பாய்க் கொடுத்துவிட்டு, வாசலில் இருப்பவனைக் காவல் காக்கும்படி சொல்லிப் போகிறான்.
- மாற்கு 13:35சுமார் கி.பி. 33
“ஆகையால் விழிப்பாயிருங்கள், ஏனெனில் வீட்டுச் சொந்தக்காரன் எப்பொழுது திரும்பிவருவான் என்று உங்களுக்குத் தெரியாதே. அவன் மாலையிலோ, நள்ளிரவிலோ, சேவல் கூவும்போதோ, அல்லது அதிகாலையிலோ, எப்போது வருவான் என்று யாருக்குத் தெரியும்.
- மாற்கு 13:36சுமார் கி.பி. 33
அவன் திடீரென வந்தால், உங்களை நித்திரை செய்கிறவர்களாய் அவன் காணக்கூடாது.
- மாற்கு 13:37சுமார் கி.பி. 33
நான் உங்களுக்குச் சொல்கிறதை எல்லோருக்குமே சொல்கிறேன்: ‘விழிப்பாயிருங்கள்’ ” என்றார்.
- மாற்கு 14:1சுமார் கி.பி. 33
பஸ்கா என்ற பண்டிகையும், புளிப்பில்லாத அப்பப் பண்டிகையும் வருவதற்கு, இன்னும் இரண்டு நாட்களே இருந்தன. தலைமை ஆசாரியர்களும், மோசேயின் சட்ட ஆசிரியர்களும் இயேசுவைக் கைதுசெய்து, அவரைக் கொலைசெய்வதற்கு தந்திரமான ஒரு வழியைத் தேடிக்கொண்டிருந்தார்கள்.
- மாற்கு 14:2சுமார் கி.பி. 33
ஆனால், “பண்டிகை காலத்தில் அப்படிச் செய்யக்கூடாது, செய்தால் மக்களிடையே கலகம் ஏற்படக்கூடும்” என்று அவர்கள் சொல்லிக்கொண்டார்கள்.
- மாற்கு 14:3சுமார் கி.பி. 33
பெத்தானியாவிலே, அவர் குஷ்டவியாதியாயிருந்த சீமோனுடைய வீட்டில் சாப்பாட்டுப் பந்தியில் இருக்கும்போது, ஒரு பெண் அங்கே வந்தாள்; அவள் நளதம் என்னும் விலையுயர்ந்த நறுமணத் தைலமுள்ள, வெள்ளைக்கல் குடுவையைக் கொண்டுவந்தாள். அவள் அதை உடைத்து, அந்த நறுமணத் தைலத்தை அவருடைய தலையின்மேல் ஊற்றினாள்.
- மாற்கு 14:4சுமார் கி.பி. 33
அங்கிருந்தவர்களில் சிலர், “இந்த வாசனைத் தைலத்தை இவ்விதமாய் வீணாக்குவது ஏன்?” என்று கோபத்துடன் ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள்.
- மாற்கு 14:5சுமார் கி.பி. 33
“இதை ஒரு வருட சம்பளத்தைவிடக் கூடுதலான பணத்துக்கு விற்றிருக்கலாமே. அப்பணத்தை ஏழைகளுக்குக் கொடுத்திருக்கலாமே” என்று சொல்லி, அவர்கள் அவளை கடுமையாய் திட்டினார்கள்.
- மாற்கு 14:6சுமார் கி.பி. 33
அப்பொழுது இயேசு அவர்களைப் பார்த்து, “அவளை விடுங்கள். ஏன் அவளுக்குத் தொந்தரவு கொடுக்கிறீர்கள்? அவள் இந்தச் செயலை ஒரு சிறந்த நோக்கத்துடனேயே செய்தாள்.
- மாற்கு 14:7சுமார் கி.பி. 33
ஏழைகள் எப்பொழுதும் உங்களுடன் இருப்பார்கள்; விரும்புகிற போதெல்லாம், நீங்கள் அவர்களுக்கு உதவிசெய்யலாம். ஆனால் நான் எப்பொழுதும் உங்களுடன் இருக்கமாட்டேன்.
- மாற்கு 14:8சுமார் கி.பி. 33
அவள் தன்னால் இயன்றதைச் செய்தாள். என்னை அடக்கம்பண்ணுவதற்கென, முன்னதாகவே ஆயத்தம் செய்யும்படி, அவள் இந்த நறுமணத் தைலத்தை என் உடலின்மேல் ஊற்றினாள்.
- மாற்கு 14:9சுமார் கி.பி. 33
நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், உலகம் முழுவதும் எங்கெல்லாம் நற்செய்தி அறிவிக்கப்படுகிறதோ, அங்கெல்லாம் இவள் செய்ததும், இவளுடைய ஞாபகமாக சொல்லப்படும்” என்றார்.
- மாற்கு 14:10சுமார் கி.பி. 33
அப்பொழுது பன்னிரண்டு சீடர்களில் ஒருவனான யூதாஸ் ஸ்காரியோத்து, தலைமை ஆசாரியர்களுக்கு இயேசுவைக் காட்டிக்கொடுக்கும்படிப் போனான்.
- மாற்கு 14:11சுமார் கி.பி. 33
அவர்கள் அதைக்கேட்டு மகிழ்ச்சியடைந்து, அவனுக்குப் பணம் தருவதென வாக்குறுதி கொடுத்தார்கள். எனவே யூதாஸ் அவரைக் காட்டிக்கொடுப்பதற்கான வாய்ப்பைத் தேடிக்கொண்டிருந்தான்.
- மாற்கு 14:12சுமார் கி.பி. 33
புளிப்பில்லாத அப்பப் பண்டிகையின் முதலாம் நாளிலே, பஸ்கா ஆட்டுக்குட்டியைப் பலியிடுவது வழக்கமாயிருந்தது. எனவே, இயேசுவினுடைய சீடர்கள் அவரைப் பார்த்து, “பஸ்கா உணவைச் சாப்பிடும்படி, நாங்கள் எங்கே உமக்காக ஆயத்தம் பண்ணவேண்டும் என்று விரும்புகிறீர்?” என்று கேட்டார்கள்.
- மாற்கு 14:13சுமார் கி.பி. 33
அப்பொழுது இயேசு, தம்முடைய சீடர்களில் இருவரை அனுப்பி அவர்களிடம், “பட்டணத்திற்குள் போங்கள். தண்ணீர் குடத்தைச் சுமந்து வருகிற ஒருவனைச் சந்திப்பீர்கள். அவனைப் பின்தொடர்ந்து போங்கள்.
- மாற்கு 14:14சுமார் கி.பி. 33
அவன் போகிற வீட்டினுடைய சொந்தக்காரனிடம், ‘என்னுடைய விருந்தினருக்கான அறை எங்கே இருக்கிறது? அங்கு நானும், என்னுடைய சீடர்களும் பஸ்காவைச் சாப்பிடவேண்டும்’ என்று போதகர் கேட்கிறார் என அவனுக்குச் சொல்லுங்கள்.
- மாற்கு 14:15சுமார் கி.பி. 33
அவன் உங்களுக்கு ஒரு பெரிய மேல்வீட்டு அறையைக் காண்பிப்பான். அது கம்பளங்கள் போடப்பட்டு ஆயத்தமாக்கப்பட்டதாய் இருக்கும். அங்கே நாம் சாப்பிடுவதற்கான ஆயத்தங்களைச் செய்யுங்கள்” என்று சொல்லி, அவர்களை அனுப்பினார்.