circa 800–400 BC
The Hebrew Prophets
God speaks through Isaiah, Jeremiah, and the minor prophets—calling Israel to repentance and foretelling the coming Messiah.
- எரேமியா 50:14சுமார் கி.மு. 595
வில் பிடிக்கிறவர்களே! நீங்கள் யாவரும் பாபிலோனைச் சுற்றி நிலைகொள்ளுங்கள். ஒரு அம்பையேனும் விட்டுவைக்காமல் எல்லாவற்றையும் அவள்மேல் எய்திடுங்கள். ஏனெனில் அவள் யெகோவாவுக்கு எதிராகப் பாவம் செய்திருக்கிறாள்.
- எரேமியா 50:15சுமார் கி.மு. 595
எல்லாப் பக்கங்களிலுமிருந்து அவளுக்கு விரோதமாகச் சத்தமிடுங்கள். அவள் சரணடைகிறாள். அவளது கோபுரங்கள் விழுகின்றன. மதில்கள் இடித்து வீழ்த்தப்படுகின்றன. இது யெகோவாவின் பழிவாங்குதல். ஆதலால் அவளிடத்தில் பழிவாங்குங்கள். அவள் மற்றவர்களுக்குச் செய்ததுபோலவே, அவளுக்கும் செய்யுங்கள்.
- எரேமியா 50:16சுமார் கி.மு. 595
விதைப்பவனை பாபிலோனிலிருந்து வெட்டிப்போடுங்கள். அறுப்புக் காலத்தில் அறுப்பவனை அவனுடைய அரிவாளுடன் வெட்டிப்போடுங்கள். ஒடுக்குகிறவனுடைய வாளின் நிமித்தம் ஒவ்வொருவனும் தன் சொந்த மக்களிடம் திரும்பிப் போகட்டும், ஒவ்வொருவனும் தன் சொந்த நாட்டிற்குத் தப்பியோடட்டும்.
- எரேமியா 50:17சுமார் கி.மு. 595
இஸ்ரயேல் சிங்கங்களால் துரத்துண்டு சிதறுகிற ஆட்டைப்போல் இருக்கிறது. முதலில் அசீரிய அரசனே அதை விழுங்கியவன். கடைசியாக பாபிலோன் அரசனான நேபுகாத்நேச்சாரே அவனுடைய எலும்புகளை நொறுக்கியவன்.
- எரேமியா 50:18சுமார் கி.மு. 595
ஆகவே இஸ்ரயேலின் இறைவனாகிய சேனைகளின் யெகோவா கூறுவது இதுவே: அசீரிய அரசனைத் தண்டித்ததுபோல, நான் பாபிலோன் அரசனையும் அவனுடைய நாட்டையும் தண்டிப்பேன்.
- எரேமியா 50:19சுமார் கி.மு. 595
இஸ்ரயேலையோ நான் திரும்பவும் அவனுடைய சொந்த மேய்ச்சலிடத்துக்குக் கொண்டுவருவேன்; அவன் கர்மேலிலும், பாசானிலும் மேய்வான். எப்பிராயீம் மலைநாட்டிலும், கீலேயாத்திலும் தன் பசியைத் தீர்ப்பான்.
- எரேமியா 50:20சுமார் கி.மு. 595
அந்தக் காலத்தில், அந்த நாட்களிலே இஸ்ரயேலின் குற்றம் தேடப்படும். அங்கு ஒன்றும் இராது. யூதாவின் பாவங்களும் தேடிப்பார்க்கப்படும். ஒன்றும் காணப்படமாட்டாது. ஏனெனில் நான் தப்பவைத்து மீந்திருப்பவர்களை மன்னிப்பேன் என்று யெகோவா அறிவிக்கிறார்.
- எரேமியா 50:21சுமார் கி.மு. 595
மெரதாயீம் நாட்டையும் பேகோதில் வாழ்கிறவர்களையும் தாக்குங்கள். அவர்களை தொடர்ந்து சென்று, கொன்று முற்றிலும் அழித்துவிடுங்கள் என்று யெகோவா அறிவிக்கிறார். நான் உங்களுக்குக் கட்டளையிட்டதையெல்லாம் செய்யுங்கள்.
- எரேமியா 50:22சுமார் கி.மு. 595
நாட்டில் யுத்த சத்தம் உண்டாயிருக்கிறது. அது ஒரு பேரழிவின் சத்தம்.
- எரேமியா 50:23சுமார் கி.மு. 595
முழு பூமியையும் அடித்த சம்மட்டி இப்பொழுது எவ்வளவாய் உடைந்து நொறுங்கிப் போயிற்று. நாடுகளுக்குள் எவ்வளவாய் பாபிலோன் கைவிடப்பட்டிருக்கிறது?
- எரேமியா 50:24சுமார் கி.மு. 595
பாபிலோனே! நான் உனக்கு ஒரு பொறி வைத்தேன். நீ அதை அறியும் முன்னே அகப்பட்டாய். நீ யெகோவாவுக்கு எதிர்த்து நின்றபடியினால் கண்டுபிடிக்கப்பட்டுக் கைதியாக்கப்பட்டாய்.
- எரேமியா 50:25சுமார் கி.மு. 595
யெகோவா தம்முடைய ஆயுதசாலையைத் திறந்து, தமது கோபத்தின் ஆயுதங்களை வெளியே கொண்டுவந்துள்ளார். ஏனெனில் பாபிலோன் நாட்டில் ஆண்டவராகிய சேனைகளின் யெகோவாவுக்கு செய்வதற்கு ஒரு வேலை உண்டு.
- எரேமியா 50:26சுமார் கி.மு. 595
வெகுதூரத்திலிருந்து அதற்கு விரோதமாய் வாருங்கள். அவளது தானிய களஞ்சியங்களை உடைத்துத் திறவுங்கள். அவளைத் தானியக் குவியலைப்போல் குவித்துவிடுங்கள். ஒன்றும் மீந்திராதபடி அவளை முழுவதுமாக அழித்துவிடுங்கள்.
- எரேமியா 50:27சுமார் கி.மு. 595
அவளுடைய இளங்காளைகள் எல்லாவற்றையும் கொன்றுவிடுங்கள். அவை வெட்டப்படுவதற்குக் கொண்டுபோகப்படட்டும். அவற்றிற்கு ஐயோ கேடு! ஏனெனில் அவைகளின் நாள் வந்துவிட்டது. அவைகளைத் தண்டிக்கும் வேளை வந்துவிட்டது.
- எரேமியா 50:28சுமார் கி.மு. 595
பாபிலோனிலிருந்து தப்பி வந்தவர்களும், அகதிகளும் சீயோனில் அறிவிக்கிறதைக் கேளுங்கள். “எங்களுடைய இறைவனாகிய யெகோவா தம்முடைய ஆலயத்திற்காகப் பழிவாங்க எப்படிப் பழி தீர்த்துள்ளார்?” என்கிறார்கள்.
- எரேமியா 50:29சுமார் கி.மு. 595
வில்வீரர்களை அழைப்பியுங்கள். வில் வளைக்கும் யாவரையும் பாபிலோனுக்கு விரோதமாக அழைப்பியுங்கள். அவளைச்சுற்றி முகாமிட்டு ஒருவரையும் தப்பவிடாதிருங்கள். அவள் செய்த செய்கைகளுக்குத்தக்க பலனைக் கொடுங்கள்; அவள் செய்தவாறே அவளுக்கும் செய்யுங்கள். ஏனெனில் இஸ்ரயேலின் பரிசுத்தரான யெகோவாவுக்கு விரோதமாய் அவள் எதிர்த்து நின்றாள்.
- எரேமியா 50:30சுமார் கி.மு. 595
ஆதலால் அவளுடைய வாலிபர் வீதிகளில் விழுவார்கள். அப்பட்டணத்தின் எல்லா இராணுவவீரரும் அந்த நாளில் அழிந்துபோவார்கள் என்று யெகோவா அறிவிக்கிறார்.
- எரேமியா 50:31சுமார் கி.மு. 595
“பார்! அகங்காரம் கொண்டவளே! நான் உனக்கு விரோதமாயிருக்கிறேன்!” என்று யெகோவா, சேனைகளின் யெகோவா கூறுகிறார். “உன் நாள் வந்துவிட்டது; நீ தண்டிக்கப்படும் வேளை வந்துவிட்டது.
- எரேமியா 50:32சுமார் கி.மு. 595
அகங்காரி இடறி விழுவாள்; அவள் எழுந்திருக்க ஒருவரும் உதவமாட்டார்கள். நான் அவளுடைய பட்டணங்களில் நெருப்பு வைப்பேன். அது அவளைச் சுற்றியுள்ள யாவரையும் எரித்துப்போடும்.”
- எரேமியா 50:33சுமார் கி.மு. 595
மேலும் சேனைகளின் யெகோவா கூறுவதாவது: இஸ்ரயேல் மக்களோடு யூதா மக்களும் ஒடுக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களைச் சிறைப்படுத்தினோர் யாவரும் அவர்களைப் போகவிட மறுத்து, இறுகப் பிடித்துக்கொள்கிறார்கள்.
- எரேமியா 50:34சுமார் கி.மு. 595
ஆயினும் அவர்களுடைய மீட்பர் பலம் மிக்கவர். சேனைகளின் வல்லமையுள்ள யெகோவா என்பது அவருடைய பெயர். அவர்களுடைய நிலத்திற்கு ஆறுதலையும், பாபிலோனில் வாழ்பவர்களுக்கோ ஓய்வின்மையையும் கொண்டுவரும்படி, அவர்கள் சார்பாக உறுதியாய் வழக்காடுவார்.
- எரேமியா 50:35சுமார் கி.மு. 595
பாபிலோனியருக்கு விரோதமாக ஒரு வாள் வரும் என்று யெகோவா அறிவிக்கிறார். பாபிலோனில் வாழ்பவர்களுக்கும், அவளுடைய அதிகாரிகளுக்கும், அவளுடைய ஞானிகளுக்கும் விரோதமாக ஒரு வாள் வரும்.
- எரேமியா 50:36சுமார் கி.மு. 595
அவளுடைய பொய்யான இறைவாக்கினருக்கு விரோதமாகவும் வாள் வரும். அவர்கள் மூடர்களாவார்கள். அவளுடைய போர்வீரருக்கு விரோதமாகவும் வாள் வரும். அவர்கள் பயங்கரத்தால் நிரப்பப்படுவார்கள்.
- எரேமியா 50:37சுமார் கி.மு. 595
அவளுடைய குதிரைகளுக்கும் தேர்களுக்கும் விரோதமாகவும், அவளுடைய படைப் பிரிவில் இருக்கும் பிறநாட்டினருக்கு விரோதமாகவும் வாள் வரும். அவர்கள் பெண்களைப் போலாவார்கள். அவளுடைய செல்வங்களுக்கு விரோதமாகவும் வாள் வரும். அவை சூறையாடப்படும்.
- எரேமியா 50:38சுமார் கி.மு. 595
அவளுடைய நீர்நிலைகளின்மேல் வறட்சி வரும். அவை வறண்டுபோகும். ஏனெனில் அது விக்கிரகங்கள் நிறைந்த ஒரு நாடு. அந்த விக்கிரகங்கள் பயங்கரத்தினால் பைத்தியம் பிடித்தவையாகும்.