நியாயாதிபதிகள் 18:1-16
1
அந்த நாட்களில் இஸ்ரயேலில் அரசன் இருக்கவில்லை. அந்நாட்களில் தாண் கோத்திரம் நிரந்தரமாக குடியேறுவதற்கு ஒரு சொந்த இடத்தை இன்னும் தேடிக்கொண்டிருந்தது. ஏனெனில் இஸ்ரயேல் கோத்திரங்களுக்குள் தாண் கோத்திரத்திற்கு இன்னும் உரிமைச்சொத்து கிடைக்கவில்லை.
2
எனவே, தாண் கோத்திரத்தினர் சோரா, எஸ்தாவோலிலுள்ள தங்கள் எல்லா வம்சத்திலுமிருந்து ஐந்து வீரரைத் தங்கள் பிரதிநிதிகளாக அனுப்பினார்கள். அவர்கள் அந்த மனிதரிடம், “நீங்கள் போய் எப்பிராயீம் மலைநாட்டை ஆராய்ந்துபார்த்து வாருங்கள்” என்று சொன்னார்கள். அதன்படி அந்த மனிதர்கள் எப்பிராயீம் மலைநாட்டிற்கு வந்து, அங்கே மீகாவின் வீட்டில் இரவு தங்கினார்கள்.
3
அவர்கள் மீகாவின் வீட்டில் இருக்கும்போது, அந்த லேவியனின் குரலால் அவனை அடையாளம் கண்டுகொண்டார்கள். எனவே அவர்கள் அப்பக்கமாய்ப் போய் அவனிடம், “உன்னை இங்கு கொண்டுவந்தவன் யார்? இந்த இடத்தில் நீ என்ன செய்கிறாய்? ஏன் இங்கு இருக்கிறாய்?” என்று கேட்டார்கள்.
4
அதற்கு அவன் மீகா தனக்குச் செய்த எல்லாவற்றையும் அவர்களுக்குச் சொல்லி, “அவன் என்னைக் கூலிக்கு அமர்த்தியிருக்கிறான். நான் அவனுடைய பூசாரியாக இருக்கிறேன்” என்றும் சொன்னான்.
5
அப்பொழுது அவர்கள் அவனிடம், “நாங்கள் வந்த பயணம் வெற்றியாய் முடியுமா என நாங்கள் அறிவதற்கு தயவுசெய்து, இறைவனிடம் விசாரி” என்று சொன்னார்கள்.
6
அதற்கு பூசாரி, “சமாதானத்தோடு போங்கள். உங்கள் பிரயாணம் யெகோவாவினால் அனுமதிக்கப்பட்டுள்ளது” எனப் பதிலளித்தான்.
7
எனவே அந்த ஐந்து மனிதரும் அவ்விடத்தைவிட்டு லாயீசுக்குப் போனார்கள். அங்குள்ள மக்கள் சீதோனியரைப்போல பாதுகாப்பாகவும், தன்னம்பிக்கையுடனும் இருப்பதைக் கண்டார்கள். நாடு வளமாயிருந்தபடியால், அவர்கள் செல்வச்செழிப்பாக வாழ்ந்து கொண்டிருந்தார்கள். மேலும் அவர்கள் சீதோனியர்களிலிருந்து வெகுதொலைவில் வாழ்ந்தார்கள். வேறு எவருடனும் அவர்களுக்கு எந்தத் தொடர்பு இல்லாதிருப்பதையும் கண்டார்கள்.
8
அவர்கள் சோராவுக்கும், எஸ்தாவோலுக்கும் திரும்பிவந்தபோது, அவர்கள் சகோதரர்கள் அவர்களிடம், “அங்கு எப்படியிருக்கக் கண்டீர்கள்” எனக் கேட்டார்கள்.
9
அதற்கு அவர்கள், “வாருங்கள்! நாம் அவர்களைத் தாக்குவோம்; அந்த நாடு மிகவும் செழிப்புள்ளதெனக் கண்டோம். நீங்கள் ஒன்றும் செய்யாமல் இருக்கப்போகிறீர்களோ? அங்குபோய் அதைக் கைப்பற்றத் தயங்கவேண்டாம்.
10
நீங்கள் அங்கு போனபின்பு அங்குள்ள மக்கள் உங்கள்மேல் சந்தேகப்படாதவர்களாய் இருப்பதையும், விசாலமான நிலத்தை இறைவன் உங்கள் கையில் ஒப்படைத்துவிட்டார் என்பதையும் காண்பீர்கள். அது ஒன்றிலும் குறைவில்லாத நாடு” என்று சொன்னார்கள்.
11
அப்பொழுது தாண் வம்சத்திலிருந்து அறுநூறு ஆயுதம் தரித்த மனிதர் யுத்தம் செய்வதற்காக சோராவிலும், எஸ்தாவோலிலிருந்தும் போனார்கள்.
12
அவர்கள் போகும் வழியில் யூதாவிலுள்ள கீரியாத்யாரீமின் அருகிலே ஒரு முகாமிட்டார்கள். இதனாலேயே கீரியாத்யாரீமுக்கு மேற்கேயுள்ள இடம் மஹனே தாண் என இன்றுவரை அழைக்கப்படுகிறது.
13
அங்கிருந்து அவர்கள் எப்பிராயீமிலுள்ள மலைநாட்டிற்குச் சென்று மீகாவின் வீட்டிற்கு வந்தார்கள்.
14
அப்பொழுது லாயீசை உளவுபார்த்து வந்த அந்த ஐந்து மனிதர்களும் தங்கள் சகோதரர்களிடம், “இந்த வீடுகளில் ஒன்றில் ஏபோத்தும், வீட்டு தெய்வங்களும், செதுக்கப்பட்ட உருவச்சிலையும் வார்க்கப்பட்ட விக்கிரகமும் இருக்கின்றன என்று உங்களுக்குத் தெரியுமா? இப்பொழுது உங்களுக்கு என்ன செய்யவேண்டும் என்று தெரியும்தானே” என்று சொன்னார்கள்.
15
எனவே அவர்கள் வாலிபனான லேவியன் இருந்த மீகாவின் வீட்டின் பக்கம் சென்று அவனை வாழ்த்தினார்கள்.
16
அப்பொழுது தாணிலிருந்து யுத்த ஆயுதந்தரித்த அறுநூறு வீரர்களும் அந்த நுழைவாசலில் நின்றனர்.
வேதாகம உரை: Biblica® Open Indian Tamil Contemporary Version™, © 2005, 2020, 2022 Biblica, Inc. · CC BY-SA 4.0“Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc., used with permission.
Settings