1 இராஜாக்கள் 6:1-22
1
சாலொமோன் தனது ஆட்சியின் நான்காம் வருடம், இரண்டாம் மாதமாகிய சீப் மாதத்தில், யெகோவாவினுடைய ஆலயத்தைக் கட்டத் தொடங்கினான். இது இஸ்ரயேல் மக்கள் எகிப்திலிருந்து புறப்பட்டதிலிருந்து நானூற்று எண்பதாம் வருடமாயிருந்தது.
2
அரசன் சாலொமோன் யெகோவாவுக்கென்று கட்டிய ஆலயம் அறுபதுமுழ நீளமும், இருபதுமுழ அகலமும், முப்பதுமுழ உயரமும் உள்ளதாயிருந்தது.
3
ஆலயத்தின் பிரதான மண்டபத்தின் முன்பாக ஒரு முகப்பு மண்டபம் ஆலய அகலத்தின்படியே இருபதுமுழ நீளமுடையதாய் ஆலயத்தின் முன் பக்கத்திலிருந்து பத்து முழம் நீண்டிருந்தது.
4
அதில் அலங்கார வேலைப்பாடுள்ள ஒடுக்கமான ஜன்னல்களை அமைத்திருந்தான்.
5
பிரதான மண்டபத்தின் சுவர்களுக்கும், பரிசுத்த இடத்தின் உட்பகுதிக்கும் எதிரே கட்டிடத்தைச்சுற்றிப் பக்க அறைகள் உள்ள ஒரு கட்டிடத்தை அமைத்தான்.
6
கீழ்த்தளம் ஐந்துமுழ அகலமும், நடுத்தளம் ஆறுமுழ அகலமும், மூன்றாம் தளம் ஏழு முழ அகலமுமாய் இருந்தன. ஆலய சுவருக்குள் போகாதபடி ஆலயத்தின் வெளிப்புறத்தைச் சுற்றி ஒட்டுச்சுவர்களை அமைத்தான்.
7
ஆலயம் கட்டுவதற்கு கற்குகையில் செதுக்கப்பட்ட கற்பாளங்களே பயன்படுத்தப்பட்டன. அது கட்டப்படும்போது, ஆலயம் கட்டப்படும் இடத்தில் சுத்தியலோ, உளியோ, வேறு எந்த இரும்பு ஆயுதமோ பயன்படுத்தும் சத்தம் கேட்கப்படவில்லை.
8
கீழ்த்தளத்து வாசல் ஆலயத்தின் தெற்கு பக்கத்தில் இருந்தது. நடுத்தளத்துக்கு ஒரு படிக்கட்டு இருந்தது. அங்கிருந்து மூன்றாம் மாடிக்கும் மற்றொரு படிக்கட்டு இருந்தது.
9
சாலொமோன் வளை மரங்களினாலும், கேதுருமரப் பலகைகளினாலும் கூரையை அமைத்து ஆலயத்தைக் கட்டிமுடித்தான்.
10
அவன் ஆலயம் நெடுகிலும் பக்க அறைகளைக் கட்டினான். அறைகள் ஒவ்வொன்றின் உயரம் ஐந்து முழம். அவை கேதுருமர உத்திரங்களினால் ஆலயத்துடன் இணைக்கப்பட்டன.
11
அப்பொழுது யெகோவாவின் வார்த்தை சாலொமோனுக்கு வந்தது.
12
அவர், “நீ கட்டும் ஆலயத்தைக் குறித்தோவெனில், நீ என் விதிமுறைகளைப் பின்பற்றி, சட்டங்களை நடைமுறைப்படுத்தி, எனது கட்டளைகளைக் கைக்கொண்டு அவற்றிற்குக் கீழ்ப்படிந்தால், உன் தகப்பனாகிய தாவீதுக்கு நான் கொடுத்த வாக்குத்தத்தத்தை நிறைவேற்றுவேன்.
13
நான் இஸ்ரயேல் மக்கள் மத்தியில் வாழ்ந்து என் மக்களான இஸ்ரயேலரைக் கைவிடமாட்டேன்” என்றார்.
14
அப்படியே சாலொமோன் ஆலயத்தைக் கட்டிமுடித்தான்.
15
உட்புறச் சுவர்களைக் கேதுரு மரப்பலகைகளினால் தளத்திலிருந்து உட்கூரைவரை மூடினான். ஆலயத்தின் தளத்தை மூடுவதற்காக தேவதாரு பலகைகளைப் பதித்தான்.
16
ஆலயத்தில் உள்ள பிற்பகுதியிலிருந்து இருபதுமுழ தூரத்தைப் பிரித்தெடுத்து, நிலத்திலிருந்து உட்கூரைவரை கேதுருமரப் பலகைகளை நிறுத்தி ஆலயத்தின் உள்ளே ஒரு அறையை ஏற்படுத்தினான். அது உள் பரிசுத்த இடமான மகா பரிசுத்த இடமாகும்.
17
இந்த அறையின் முன் இருந்த பிரதான மண்டபம் நாற்பது முழ நீளமாயிருந்தது.
18
ஆலயத்தின் உட்புறம் முழுவதிலும் கேதுரு மரப்பலகை பதிக்கப்பட்டிருந்தது. அவற்றின் இணைப்பில் விரிந்த பூக்களும், வெள்ளரிக்காய்களும் சித்திர வேலைப்பாடாகச் செதுக்கப்பட்டிருந்தன. எல்லாம் கேதுருமரப் பலகையாகவே இருந்தன. ஒரு கல்லும் வெளியே தெரியவில்லை.
19
ஆலயத்தின் உட்புற பரிசுத்த இடத்தை யெகோவாவின் உடன்படிக்கைப் பெட்டியை வைப்பதற்கென சாலொமோன் ஆயத்தம் பண்ணினான்.
20
உட்புற பரிசுத்த இடம் இருபதுமுழ நீளமும், இருபதுமுழ அகலமும், இருபதுமுழ உயரமுமுள்ளதாயும் இருந்தது. அதன் உட்புறம் முழுவதையும் சுத்தத் தங்கத்தகட்டால் மூடினான். அத்துடன் கேதுருமரப் பலிபீடத்தையும் தங்கத் தகட்டினால் மூடினான்.
21
பின்பு சாலொமோன் ஆலயத்தின் உட்பகுதியை சுத்தத் தங்கத்தகட்டால் மூடி, பரிசுத்த இடத்துக்கு முன்பாக தங்கச் சங்கிலிகளை நீளமாக குறுக்கே தொங்கும்படி அமைத்தான். அதுவும் தங்கத்தால் மூடப்பட்டிருந்தது.
22
இவ்விதமாய் உட்புறம் முழுவதையும் தங்கத்தகட்டால் மூடினான். அத்துடன் உட்புற பரிசுத்த இடத்துக்குரிய பலிபீடத்தையும் தங்கத்தகட்டால் மூடினான்.
Settings