Skip to content

Select Readings பற்றிய பைபிள் வசனங்கள்

802 வசனங்கள் · 47 அம்சங்கள்

முக்கிய பைபிள் வசனங்கள்

புத்தகத்தின்படி வடிகட்டு
  1. நான் உன்னை உன் சொந்த மக்களிடமிருந்தும், யூதரல்லாதவர்களிடமிருந்தும் காப்பாற்றுவேன்.

  2. நீ அவர்களை இருளிலிருந்து வெளிச்சத்திற்கும், சாத்தானின் அதிகாரத்திலிருந்து இறைவனிடத்திற்கும் திரும்பும்படி அவர்களுடைய கண்களைத் திறக்கவும், அவர்கள் தங்களுடைய பாவமன்னிப்பைப் பெற்று, என்மேலுள்ள விசுவாசத்தினால் பரிசுத்தமாக்கப்பட்டவர்களுடன் இடத்தைப் பெற்றுக்கொள்ளும்படியாகவே, நான் உன்னை அனுப்புகிறேன்’ என்றார்.

  3. “அகிரிப்பா அரசே, ஆகவே அந்த பரலோக தரிசனத்திற்கு நான் கீழ்ப்படியாதவனாய் இருக்கவில்லை.

  4. எனவே முதலாவது தமஸ்குவில் இருந்தவர்களுக்கும், பின்பு எருசலேமிலும் முழு யூதேயாவில் இருந்தவர்களுக்கும், யூதரல்லாதவர்களுக்கும்கூட நான் பிரசங்கித்தேன். அவர்கள் மனந்திரும்பி இறைவனிடம் திரும்பவேண்டும் என்றும், தங்களுடைய மனந்திரும்புதலை அவர்கள் தங்கள் செயல்களினால் நிரூபிக்கவேண்டும் என்றும் அறிவித்தேன்.

  5. இதனாலேயே யூதர்கள், ஆலய முற்றத்தில் இருந்த என்னைப் பிடித்துக் கொலைசெய்ய முயற்சித்தார்கள்.

  6. ஆனால், இன்றுவரை, நான் இறைவனுடைய உதவியைப் பெற்றவனாய், இங்கே நின்று சிறியவர்கள் பெரியவர்கள் எல்லோருக்கும் சாட்சி கொடுக்கிறேன். இறைவாக்கினரும், மோசேயும் என்ன நடக்கும் என்று சொன்னார்களோ, அதையேதான் நானும் சொல்கிறேன். வேறு எதையும் நான் சொல்லவில்லை.

  7. கிறிஸ்து வேதனைகள் அனுபவித்து, பின் இறந்தவர்களிலிருந்து முதலாவதாய் எழுந்திருப்பவராய், தனது சொந்த மக்களுக்கும், யூதரல்லாதவர்களுக்கும் ஒளியைப் பிரசித்தப்படுத்துவார் என்றே அவர்களும் சொன்னார்கள்” என்றார்.

  8. அந்நேரத்தில் பெஸ்து குறுக்கிட்டு பவுலிடம், “பவுலே, உனக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது!” உனது அதிக படிப்பினால் “உனக்கு மூளை குழம்பிவிட்டது” என்று சத்தமிட்டுச் சொன்னான்.

  9. அதற்குப் பவுல், “மதிப்புக்குரிய பெஸ்து அவர்களே, எனக்கு மூளை குழம்பவில்லை. நான் சொல்வது உண்மையும், நியாயமானதுமாய் இருக்கிறது.

  10. அரசர் இவற்றையெல்லாம் அறிந்திருக்கிறார். அதனால்தான் நான் அவருடன் தாராளமாய் பேசுகிறேன். நான் பேசும் இவை ஒன்றும் அவருக்குத் தெரியாமல் நடந்தவை அல்ல என்பது எனக்குத் தெரியும். ஏனெனில், இவை மூலைமுடுக்கில் நடந்தவை அல்ல.

  11. அகிரிப்பா அரசே, நீர் இறைவாக்கினரை நம்புகிறீரா? நீர் நம்புகிறீர் என்று எனக்குத் தெரியும்” என்றான்.

  12. அப்பொழுது அகிரிப்பா பவுலிடம், “என்ன! இந்தக் கொஞ்ச நேரத்திலே, நீ என்னைக் கிறிஸ்துவை பின்பற்றுகிறவனாக்க நினைக்கிறாயா?” என்றான்.

  13. அதற்குப் பவுல், “கொஞ்ச நேரமோ, அதிக நேரமோ, நீர் மட்டுமல்ல, இன்று நான் சொல்வதைக் கேட்கும் அனைவரும், என்னைப்போல் ஆகவேண்டும்; ஆனால் இவ்விதம் சங்கிலிகளால் மட்டும் கட்டப்படக்கூடாது என்றே இறைவனிடம் மன்றாடுகிறேன்” என்றான்.

  14. அரசன் தன் இடத்தைவிட்டு எழுந்தான். அவனுடன் ஆளுநரும், பெர்னிக்கேயாளும், அவர்களுடன் இருந்தவர்களுங்கூட இருக்கைகளை விட்டு எழுந்தார்கள்.

  15. அவர்கள் அவ்விடத்தை விட்டுப்போகையில் ஒருவரோடொருவர், “இவன் மரணதண்டனையையோ, சிறைத் தண்டனையையோ பெறுவதற்கான எதையும் செய்யவில்லை” என்று பேசிக்கொண்டார்கள்.

  16. அப்பொழுது அகிரிப்பா பெஸ்துவிடம், “இவன் ரோமப் பேரரசனுக்கு மேல்முறையீடு செய்யாமல் இருந்திருந்தால், இவனை விடுவித்திருக்கலாம்” என்றான்.

  17. நான் மனிதரின் மொழிகளிலும், இறைத்தூதரின் மொழிகளிலும் பேசினாலும், அன்புள்ளவனாய் இராவிட்டால், நான் வெறும் பேரொலி எழுப்பும் வெண்கலத் தாளமாகவும், இசையில்லாமல் ஓசையெழுப்பும் கைத்தாளமாகவுமே இருப்பேன்.

  18. நான் இறைவாக்கு உரைக்கும் வரத்தை உடையவனாய் இருந்தாலும், எல்லா இரகசியங்களையும், எல்லா அறிவையும் விளங்கிக்கொள்ளும் ஆற்றல் உடையவனாய் இருந்தாலும், அத்துடன் மலைகளை இடம் பெயரச் செய்யத்தக்க விசுவாசமுடையவனாய் இருந்தாலும், அன்பு உள்ளவனாய் இராவிட்டால், நான் ஒன்றுமில்லை.

  19. எனது உடைமைகளை நான் ஏழைகளுக்குக் கொடுத்தாலும், எனது உடலையே நெருப்பில் எரிக்கப்படும்படி ஒப்புக்கொடுத்தாலும், நான் அன்பு உள்ளவனாய் இராவிட்டால், அதனால் எனக்கு எவ்விதப் பயனும் இல்லை.

  20. அன்பு பொறுமையுள்ளது. அன்பு தயவுள்ளது. அன்புக்குப் பொறாமை இல்லை; அது தற்பெருமையுடன் பேசாது. அது அகந்தைகொள்ளாது.

  21. அன்பு இறுமாப்பு கொள்ளாது. அது சுயநலம் தேடுகிறதாய் இருக்காது. அது இலகுவில் கோபமடையாது. அன்பு மற்றவர்கள் தனக்குச் செய்த பிழைகளை நினைவில் வைக்காது.

  22. அன்பு தீமையில் மகிழ்ச்சியடையாது. ஆனால் உண்மையில் மகிழ்ச்சியடையும்.

  23. அன்பு எப்பொழுதும் குற்றங்களைச் சகிக்கும். அது எப்பொழுதும் மற்றவர்கள் மீதுள்ள நம்பிக்கையை இழக்காது. எப்பொழுதும் எதிர்பார்ப்பு உடையதாயிருக்கும். எப்பொழுதும் மனவுறுதியாய் இருக்கும்.

  24. அன்பு ஒருபோதும் தோல்வியடையாது. ஒருபோதும் அழியாது. எங்கே இறைவாக்குகள் இருக்கின்றனவோ, அவை முடிவுக்கு வரும்; எங்கே ஆவியானவர் கொடுக்கும் பல்வகையான வேற்று மொழிகள் பேசப்படுகின்றனவோ, அவை ஓய்ந்து போகும்; எங்கே அறிவு இருக்கிறதோ, அது இல்லாமல் போய்விடும்.

  25. ஏனெனில் நமது அறிவும் அரைகுறையானது. இறைவாக்கு உரைத்தலும் அரைகுறையானது.