Skip to content

Lending பற்றிய பைபிள் வசனங்கள்: General references

42 வசனங்கள் · 1 அம்சம்

General references பற்றிய வசனங்கள்

புத்தகத்தின்படி வடிகட்டு
  1. “என் மக்களில் வறுமையான ஒருவனுக்கு யாராவது பணம் கொடுத்திருந்தால், வட்டிக்குப் பணம் கொடுப்பவனைப்போல அவனிடம் வட்டியை வாங்கக்கூடாது.

  2. உங்கள் அயலானுடைய மேலங்கியை அடகுப்பொருளாக வாங்கியிருந்தால், சூரியன் மறையும் முன்பே அதை அவனுக்குத் திருப்பிக் கொடுத்துவிடவேண்டும்.

  3. ஏனெனில், அதுமட்டுமே அவனுடைய உடலை மூடும் போர்வையாயிருக்கிறது. அவன் படுக்கும்போது, வேறு எதனால் அவன் தன்னை மூடிக்கொள்வான்? அவன் என்னிடம் அழும்போது நான் கேட்பேன். ஏனெனில் நான் கருணையுள்ளவர்.

  4. “ ‘உங்கள் நாட்டினருக்குள் ஒருவன் ஏழையாகி, தன்னைத்தானே பராமரிக்க இயலாத வேளையில், ஒரு பிறநாட்டினனுக்கோ, தற்காலிக குடியிருப்பாளனுக்கோ உதவுவதுபோல் நீங்கள் அவனுக்கு உதவிசெய்யுங்கள். அவ்வாறு உங்கள் மத்தியில் அவன் தொடர்ந்து வாழலாம்.

  5. அவனிடம் எவ்வித வட்டியையும் வாங்கவேண்டாம். ஆனால் உங்கள் இறைவனுக்குப் பயந்து நடவுங்கள். இப்படியாக உங்கள் நாட்டினன் உங்கள் மத்தியில் தொடர்ந்து வாழலாம்.

  6. நீங்கள் அவனுக்கு வட்டிக்குக் கடன் கொடுக்கக்கூடாது. இலாபத்திற்கு அவனுக்கு உணவும் விற்கக்கூடாது.

  7. ஏழாம் வருடத்தின் முடிவிலே கடன்களை ரத்துச்செய்யுங்கள்.

  8. நீங்கள் செய்யவேண்டிய விதம் இதுவே: கடன்களை ரத்துச்செய்வதற்கான யெகோவாவின் வேளை அறிவிக்கப்பட்டிருப்பதால், தன் சகோதர இஸ்ரயேலனுக்கு கடன்கொடுத்த எவனும், அந்தக்கடனை தள்ளுபடிசெய்யவேண்டும். அவன் அந்த இஸ்ரயேலனிடமிருந்தோ அல்லது சகோதரனிடமிருந்தோ கடனைத் திருப்பித்தரும்படி கேட்கக்கூடாது.

  9. அந்நியனிடமிருந்து கடனைத் தரும்படி நீங்கள் கேட்கலாம். ஆனால் உங்கள் சகோதரன் உங்களுக்குத் தரவேண்டிய கடனை நீங்கள் ரத்துச்செய்யவேண்டும்.

  10. உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்கு உரிமையாகக் கொடுக்கும் நாட்டிலே, உங்களை நிறைவாய் ஆசீர்வதிப்பார். அதனால் உங்கள் மத்தியில் ஏழைகள் இருக்கக்கூடாது.

  11. நீங்கள் உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்கு முற்றிலும் கீழ்படிந்து, இன்று நான் உங்களுக்குக் கொடுக்கும் இந்த எல்லா கட்டளைகளையும் பின்பற்றக் கவனமாய் இருந்தால்மட்டுமே, அப்படி ஆசீர்வதிப்பார்.

  12. உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்கு வாக்குக் கொடுத்தபடி உங்களை ஆசீர்வதிப்பார். அதனால் நீங்கள் பல நாடுகளுக்குக் கடன்கொடுப்பீர்கள். நீங்களோ ஒருவரிடமிருந்தும் கடன் வாங்கமாட்டீர்கள். நீங்கள் நாடுகளை ஆளுவீர்கள். ஆனால் உங்களை ஒருவரும் ஆளமாட்டார்கள்.

  13. உங்கள் இறைவனாகிய யெகோவா உங்களுக்குக் கொடுக்கும் நாட்டிலுள்ள பட்டணங்கள் ஒன்றில், உங்கள் சகோதரருக்குள் ஏழை ஒருவன் இருந்தால், அந்த ஏழைச் சகோதரனிடத்தில் இருதயக் கடினத்துடனோ, சுயதன்மையுடனோ நடந்துகொள்ளாதீர்கள்.

  14. அவனுடைய தேவைகளுக்கேற்றபடி தாராள மனதுடன் போதிய அளவு கடன்கொடுங்கள்.

  15. விடுதலை வருடமாகிய ஏழாம் வருடம் நெருங்கிவிட்டதனால் தேவையுள்ள சகோதரனுக்குக் கரிசனை காட்டாமலும், ஒன்றும் கொடுக்காமலும் விடவேண்டாம். அப்படியான கொடிய எண்ணம் உங்களுக்கு வராதபடி கவனமாய் இருங்கள். ஏனெனில், அவன் யெகோவாவிடம் உங்களுக்கு எதிராக முறையிடும்பொழுது நீங்கள் பாவம் செய்த குற்றவாளிகளாகக் கணிக்கப்படுவீர்கள்.

  16. மனம்கோணாமல் அவனுக்குத் தாராளமாய்க் கொடுங்கள். அப்பொழுது இதன் நிமித்தம் இறைவனாகிய யெகோவா, உங்கள் முயற்சிகள் யாவற்றையும் நீங்கள் கையிட்டுசெய்யும் எல்லாவற்றையும் ஆசீர்வதிப்பார்.

  17. நாட்டிலே எக்காலத்திலும் ஏழைகள் இருப்பார்கள். ஆகையால் உங்கள் நாட்டிலுள்ள உங்கள் சகோதரருக்கும், ஏழைகளுக்கும், வறியவர்களுக்கும் தாராள மனதுடன் கொடுக்கும்படி நான் உங்களுக்குக் கட்டளையிடுகிறேன்.

  18. நீங்கள் உங்கள் சகோதரனிடம் வட்டி வசூலிக்கக்கூடாது. வட்டிக்குக் கடனாகக் கொடுக்கக்கூடிய பணத்திற்கோ, உணவுப்பொருளுக்கோ, வேறு எதற்கோ வட்டி வசூலிக்கவேண்டாம்.

  19. நீங்கள் அந்நியனிடம் வட்டிவாங்கலாம். ஆனால் உங்கள் சகோதர இஸ்ரயேலனிடம் வட்டி வசூலிக்கவேண்டாம். அப்படிச் செய்யும்போது, உங்கள் இறைவனாகிய யெகோவா நீங்கள் உரிமையாக்கிக்கொள்ளும்படி போகும் அந்நாட்டில், நீங்கள் கையிட்டுசெய்யும் எல்லாவற்றையும் ஆசீர்வதிப்பார்.

  20. நீங்கள் உங்கள் அயலானுக்கு எந்த விதமான கடனையும் கொடுக்கும்போது, அவன் அடகுப்பொருளாகக் கொடுப்பதை எடுக்கும்படி அவனுடைய வீட்டின் உள்ளே போகவேண்டாம்.

  21. நீங்கள் அவன் வீட்டின் வெளியே நில்லுங்கள். நீங்கள் கடன்கொடுக்கும் மனிதனே அந்த அடகுப்பொருளை வெளியே உங்களிடம் கொண்டுவரட்டும்.

  22. ஒருவன் ஏழையாயிருந்து தனது மேலுடையை அடகாகத் தந்திருந்தால், நீங்கள் அதை வைத்துக்கொண்டு படுக்கைக்குப் போகவேண்டாம்.

  23. சூரியன் மறையும்போதே அவனுடைய மேலுடையை திருப்பிக் கொடுத்துவிடுங்கள். அவன் தன் அங்கியைப் போட்டுக்கொண்டு படுக்கட்டும். அப்பொழுது அவன் உனக்கு நன்றி செலுத்துவான். அது உங்கள் இறைவனாகிய யெகோவாவின் பார்வையில் நியாயமான செயலாகக் காணப்படும்.

  24. அப்பொழுது அநேகரும் அவர்களுடைய மனைவிகளும் தங்கள் யூத சகோதரருக்கு எதிராகக் கூக்குரல் எழுப்பினார்கள்.

  25. சிலர், “நாங்களும், எங்கள் மகன்களும், மகள்களும் அநேகராயிருக்கிறோம், நாங்கள் சாப்பிட்டு உயிருடன் வாழ்வதற்குத் தானியம் பெற்றுக்கொள்ள வேண்டும்” என்றார்கள்.