God
God பற்றிக் குறிப்பிடும் வசனங்கள்
நீர் எனக்கு ஒரு பயங்கரமாக இராதேயும். பேராபத்து வரும்நாளில் நீரே என் அடைக்கலம்.
யெகோவா என்னிடம் சொன்னது இதுவே: “யூதாவின் அரசர்கள் போய்வருகிறதான மக்கள் வாசலருகே போய் நில். எருசலேமின் மற்ற எல்லா வாசல்களிலும் போய் நில்.
அங்கே நீ அவர்களிடம், ‘இந்த வாசல்களில் உட்செல்லும் யூதாவின் அரசர்களே! யூதாவின் மக்களே! எருசலேமில் குடியிருக்கிறவர்களே! நீங்கள் யெகோவாவின் வார்த்தையைக் கேளுங்கள் என்று சொல்.
யெகோவா சொல்வது இதுவே; எருசலேமின் வாசல்களின் வழியே ஓய்வுநாளில் ஒரு சுமையாவது சுமந்து செல்லாதிருக்கவும் அல்லது உள்ளே கொண்டுவராமல் இருக்கவும் கவனமாயிருங்கள்.
நீங்கள் ஓய்வுநாளில் உங்கள் வீடுகளிலிருந்து எந்தச் சுமையையும் கொண்டுவராமலும், எந்த ஒரு வேலையையும் செய்யாமலும் இருங்கள். அந்த நாளை நான் உங்கள் முற்பிதாக்களுக்குக் கட்டளையிட்டபடி, பரிசுத்த நாளாக கைக்கொள்ளுங்கள் என்றேன்.
ஆனால் யெகோவா அறிவிக்கிறதாவது, நீங்கள் எனக்குக் கீழ்ப்படியக் கவனமாயிருந்து, ஓய்வுநாளைப் பரிசுத்தமாய் கைக்கொள்ளுங்கள். அந்நாளில் இந்தப் பட்டணத்து வாசல்களுக்குள்ளே, ஒரு சுமையையும் கொண்டுவராமலும், ஒரு வேலையையும் செய்யாமலும் இருங்கள்.
யூதாவின் பட்டணங்களிலும், எருசலேமைச் சுற்றியுள்ள கிராமங்களிலுமிருந்து மக்கள் வருவார்கள். பென்யமீன் பிரதேசத்திலிருந்தும், மேற்கு மலையடிவாரங்களிலிருந்தும், மலைநாட்டிலும், யூதாவின் தெற்குப் பகுதிகளிலிருந்தும் வருவார்கள். அவர்கள் தகன காணிக்கைகளையும், பலிகளையும், தானிய காணிக்கைகளையும், தூபங்களையும், நன்றியறிதல் காணிக்கைகளையும் யெகோவாவின் ஆலயத்துக்குக் கொண்டுவருவார்கள்.
ஆனால் நீங்கள் எனக்குக் கீழ்ப்படியாமல், ஓய்வுநாளை பரிசுத்தமாகக் கைக்கொள்ளத் தவறி, அந்த நாளில் பாரத்தைச் சுமந்துகொண்டு எருசலேமின் வாசல்களின் வழியே வருவீர்களானால், நான் எருசலேமின் வாசல்களில் அணைக்க முடியாத நெருப்பை மூட்டுவேன். அது எருசலேமின் அரண்களைச் சுட்டெரிக்கும்’ என்று யெகோவா அறிவிக்கிறார்.”
யெகோவாவிடமிருந்து எரேமியாவுக்கு வந்த வார்த்தை இதுவே:
“நீ குயவனுடைய வீட்டிற்குப் போ; அங்கே நான் என்னுடைய வார்த்தைகளை உனக்குத் தெரிவிப்பேன்” என்றார்.
அப்பொழுது யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது:
இஸ்ரயேல் குடும்பத்தாரே! இந்தக் குயவன் செய்வதுபோல, நானும் உங்களுக்குச் செய்யக்கூடாதா? என்று யெகோவா அறிவிக்கிறார். இஸ்ரயேல் குடும்பத்தாரே! குயவனுடைய கையில் களிமண் இருப்பதுபோல, நீங்களும் என் கையில் இருக்கிறீர்கள்.
எப்பொழுதாவது நான் ஒரு நாட்டையோ, அரசையோ குறித்து, அது வேரோடு பிடுங்கப்படும், தள்ளி வீழ்த்தப்படும், அழிக்கப்படும் என்று அறிவிக்கும்போது,
நான் எச்சரித்த அந்த நாடு தன் தீமையைவிட்டு மனந்திரும்பினால், நான் மனமிரங்கி, கொண்டுவரத் திட்டமிட்ட பேராபத்தை அதன்மேல் சுமத்தமாட்டேன்.
இன்னொரு வேளையில் ஒரு நாட்டையோ, அரசையோ குறித்து அது கட்டப்படும் என்றும் நாட்டப்படும் என்றும் அறிவிக்கும்போது,
அந்த நாடு எனக்குக் கீழ்ப்படியாமல், எனது பார்வையில் தீமையை செய்தால், அதற்கு நான் செய்ய எண்ணியிருந்த நன்மைகளைச் செய்வதோ இல்லையோ என திரும்பவும் சிந்திப்பேன்.
ஆகவே, இப்பொழுது நீ யூதா மக்களிடமும், எருசலேமில் வாழ்பவர்களிடமும் சொல்லவேண்டியதாவது: யெகோவா சொல்வது இதுவே: இதோ பாருங்கள், உங்களுக்கு ஒரு பேராபத்தை ஆயத்தப் படுத்துகிறேன்; உங்களுக்கு எதிராக ஒரு திட்டத்தை வகுக்கிறேன். ஆகையால் நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் தீயவழிகளைவிட்டுத் திரும்பி, உங்கள் வழிகளையும், உங்கள் செய்கைகளையும் சீர்திருத்துங்கள் என்று சொல்.
ஆகையால் யெகோவா சொல்வது இதுவே: “இப்படிப்பட்ட ஒரு செயலை யாரும் எப்போதாவது கேட்டதுண்டோ? என்று நாடுகளிடம் விசாரியுங்கள்; இஸ்ரயேல் என்னும் கன்னிகை ஒரு படுமோசமான செயலைச் செய்திருக்கிறாள்.
ஆயினும், என் மக்களோ, என்னை மறந்துவிட்டார்கள். அவர்கள் பயனற்ற விக்கிரகங்களுக்குத் தூபம் எரிக்கிறார்கள். என் மக்களை அவர்களுடைய வழிகளிலும், முற்காலத்து பாதைகளிலும் அவைகளே இடறச்செய்தன. அவைகள் குறுக்கு வழிகளிலும், செப்பனிடாத வீதிகளிலும் அவர்களை நடக்கப்பண்ணின.
கொண்டல் காற்றைப்போல் பகைவரின் முன்பாக அவர்களைச் சிதறடிப்பேன். அவர்களுடைய பேராபத்தின் நாளில் அவர்களுக்கு என்னுடைய முகத்தை அல்ல; என் முதுகையே காட்டுவேன் என்று யெகோவா கூறுகிறார் என்று சொல்” என்றார்.
“யெகோவாவே! எனக்குச் செவிகொடும். என்னைக் குற்றம் சாட்டுகிறவர்கள் சொல்வதையும் கேளும்.
நன்மைக்குப் பதிலாகத் தீமை செய்யப்படலாமோ? அவர்கள் எனக்குக் குழியை வெட்டியிருக்கிறார்களே! நான் உமது முன்னிலையில் நின்று உமது கடுங்கோபத்தை அவர்களிடமிருந்து திருப்பும்படி அவர்களின் சார்பாகப் பேசியதை நினைத்தருளும்.
ஆனாலும் யெகோவாவே! எனக்கெதிராக என்னைக் கொல்வதற்கு அவர்கள் செய்யும் சதித்திட்டங்களை எல்லாம் நீர் அறிவீர். அவர்களுடைய குற்றங்களை மன்னியாமலும், உமது பார்வையிலிருந்து அவர்களுடைய பாவங்களை அகற்றாமலும் இரும். அவர்கள் உமக்கு முன்பாக வீழ்த்தப்படட்டும்; உமது கோபத்தின் வேளையில் இவ்வாறு அவர்களுக்குச் செய்யும்.”
யெகோவா கூறுவது இதுவே: நீ போய் குயவனிடமிருந்து களிமண் ஜாடி ஒன்றை வாங்கு. உன்னுடைய மக்களில் முதியவர்கள் சிலரையும், ஆசாரியர்களில் சிலரையும் கூட்டிக்கொண்டு,
கிழக்கு வாசலின் அருகேயுள்ள பென் இன்னோம் பள்ளத்தாக்கிற்குப் போ. அங்கே நான் உனக்குச் சொல்லும் வார்த்தைகளை அறிவி.