மத்தேயு 5:29-45
29
உனது வலது கண் உன்னைப் பாவம் செய்யத் தூண்டினால், அதைத்தோண்டி எறிந்துவிடு. உனது முழு உடலும் நரகத்தில் எறியப்படுவதைப் பார்க்கிலும், உனது உடலில் ஒரு பகுதியை நீ இழப்பது நல்லது.
30
உனது வலதுகை உன்னைப் பாவம் செய்யத் தூண்டினால், அதை வெட்டி எறிந்துபோடு. உனது முழு உடலும் நரகத்துக்குள் போவதைப் பார்க்கிலும், உடலின் ஒரு பகுதியை நீ இழப்பது உனக்கு நல்லது.
31
“தனது மனைவியை விவாகரத்து செய்கிறவன், ‘அவளுக்கு விவாகரத்துப் பத்திரத்தைக் கொடுக்கவேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.’
32
ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன் யாராவது ஒருவன், தன் மனைவி விபசாரம் செய்ததினாலன்றி, வேறெந்த காரணத்திற்காகவும் அவளை விவாகரத்து செய்தால், அவன் அவளை விபசாரத்துக்குள்ளாக்குகிறான். விவாகரத்து செய்யப்பட்ட பெண்ணைத் திருமணம் செய்பவனும் விபசாரம் செய்கிறான்.
33
“மேலும், ‘நீங்கள் ஆணையிட்டதை மீற வேண்டாம், கர்த்தருடன் செய்துகொண்ட ஆணைகளை நிறைவேற்றுங்கள் என்று, வெகுகாலத்திற்கு முன்னே முன்னோர்களுக்குச் சொல்லப்பட்டதை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.’
34
ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், நீங்கள் ஒருபோதும் ஆணையிட வேண்டாம்: பரலோகத்தின்மேல் ஆணையிட வேண்டாம், ஏனெனில் அது இறைவனின் அரியணை;
35
பூமியின்மேலும் ஆணையிட வேண்டாம், ஏனெனில் அது இறைவனின் பாதபீடம்; எருசலேமைக்கொண்டும் ஆணையிட வேண்டாம், ஏனெனில், அது பேரரசரின் பட்டணம்.
36
உங்கள் தலையில் கை வைத்தும் ஆணையிட வேண்டாம், ஏனெனில் உங்களால் ஒரு தலைமுடியையாகிலும் வெண்மையாக்கவோ, கருமையாக்கவோ முடியாதே.
37
ஆகவே உங்களிடமிருந்து வரும் பதில், ‘ஆம்’ என்றால் ‘ஆம்’ என்றும், ‘இல்லை’ என்றால் ‘இல்லை’ என்றும் இருக்கட்டும்; இதற்கு மேலாக வருவதெல்லாம் தீயவனிடமிருந்தே வருகிறது.
38
“கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல் என்று சொல்லப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.
39
ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், நீங்கள் உங்களை எதிர்க்கும் தீய நபருடன் போராட வேண்டாம். யாராவது உங்களை வலது கன்னத்தில் அறைந்தால், அவருக்கு மறு கன்னத்தையும் திருப்பிக் காட்டுங்கள்.
40
யாராவது உங்களுடன் வழக்காடி, உங்கள் ஆடையை எடுத்துக்கொள்ளுகிறவர்களுக்கு, உங்கள் மேலுடையையும் கொடுத்துவிடுங்கள்.
41
யாராவது உங்களை ஒரு கிலோமீட்டர் தூரம் வரும்படி வற்புறுத்தினால், அந்த நபரோடு இரண்டு கிலோமீட்டர் தூரம் செல்லுங்கள்.
42
உங்களிடத்தில் கேட்கிறவருக்குக் கொடுங்கள், உங்களிடம் கடன்வாங்க விரும்புகிறவரிடமிருந்து விலகிச்செல்ல வேண்டாம்.
43
“உங்கள் அயலானிடம் அன்பாயிருங்கள், உங்கள் பகைவனுக்குப் பகையைக் காட்டுங்கள் என்று சொல்லப்பட்டிருப்பதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்.
44
ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், உங்கள் பகைவர்களுக்கு அன்பு காட்டுங்கள். உங்களைத் துன்புறுத்துகிறவர்களுக்காக மன்றாடுங்கள்.
45
இப்படிச் செய்வதினால் நீங்கள் பரலோகத்தில் இருக்கும் உங்கள் பிதாவுக்குப் பிள்ளைகளாய் இருப்பீர்கள். அவர் தீயவர்மேலும், நல்லவர்மேலும் தமது சூரியனை உதிக்கச் செய்கிறார். நீதியுள்ளவர்மேலும், அநீதியுள்ளவர்மேலும் மழையை அனுப்புகிறார்.
Settings