Skip to content
எரேமியா 51:35-59

எரேமியா 51:35-59

35
“எங்களுக்கும் எங்கள் பிள்ளைகளுக்கும் செய்யப்பட்ட கொடுமை பாபிலோன்மீது சுமரட்டும்” என்று சீயோனில் குடியிருப்பவர்கள் கூறுகிறார்கள். “எங்கள் இரத்தப்பழி பாபிலோனில் குடியிருப்பவர்கள்மேல் சுமரட்டும்” என்று எருசலேம் கூறுகிறாள்.
36
ஆகையால் யெகோவா கூறுவது இதுவே: “பார், நான் உனக்காக வழக்காடிப் பழிவாங்குவேன். அவளின் கடலை வற்றச்செய்து, ஊற்றுகளையும் வறண்டு போகப்பண்ணுவேன்.
37
பாபிலோன் இடிபாடுகளின் குவியலாகி, நரிகளின் உறைவிடமாகும். அது பயங்கரத்திற்கும், நிந்தைக்கும் உரிய பொருளும், ஒருவரும் குடியிராத இடமுமாகும்.
38
அவளுடைய குடிமக்கள் யாவரும் இளம் சிங்கங்களைப்போல் கர்ஜிக்கிறார்கள்; சிங்கக் குட்டிகளைப்போலச் சத்தமிடுவார்கள்.
39
ஆயினும் அவர்கள் கொதித்தெழுந்தவர்களாய் இருக்கும்வேளையில், நான் அவர்களுக்கு வித்தியாசமான ஒரு விருந்தை ஆயத்தம்பண்ணி, அவர்களை வெறிக்கப் பண்ணுவேன். அதனால் அவர்கள் உரத்த சத்தமிட்டுச் சிரிப்பார்கள். அதன்பின் அவர்கள் என்றுமே எழும்பாதபடி நித்திரையடைவார்கள்” என்று யெகோவா அறிவிக்கிறார்.
40
“வெட்டுவதற்குக் கொண்டுபோகப்படும் ஆட்டுக்குட்டிகளைப்போலவும், செம்மறியாட்டுக் கடாக்களைப்போலவும், வெள்ளாடுகளைப்போலவும் அவர்களைக் கொண்டுபோவேன்.
41
“சேசாக்கு எப்படிக் கைப்பற்றப்பட்டது? முழு பூமியினுடைய பெருமை எப்படிப் பிடிபட்டது? நாடுகளுக்குள் பாபிலோன் எவ்வளவு பயங்கரமாயிருக்கப் போகிறது.
42
பாபிலோனுக்கு மேலாக கடல் புரண்டு எழும்பும். அதன் கொந்தளிக்கும் அலைகள் அதை மூடும்.
43
அதன் பட்டணங்கள் பாழாகி, வறண்டு பாலைவனமாகும். அங்கு ஒருவரும் குடியிருக்கமாட்டார்கள். அதின் வழியாக ஒருவனும் பயணம் செய்யவுமாட்டான்.
44
நான் பாபிலோனில் இருக்கிற பேல் தெய்வத்தைத் தண்டிப்பேன். அவன் விழுங்கியதைத் துப்பும்படி செய்வேன். பிறநாடுகள் இனிமேல் அவன் பின்னால் அணி அணியாகப் போகமாட்டார்கள். பாபிலோனின் மதிலும் விழுந்துவிடும்.
45
“என் மக்களே! அவளிடத்திலிருந்து வெளியேறுங்கள். உங்கள் உயிர் தப்ப ஓடுங்கள். யெகோவாவின் கடுங்கோபத்திலிருந்து விலகி ஓடுங்கள்.
46
நாட்டில் வதந்திகள் பரவும்போது நீங்கள் கலங்கவோ, பயப்படவோ வேண்டாம். இந்த வருடத்தில் ஒரு வதந்தியும், மற்ற வருடத்தில் இன்னொரு வதந்தியும் வரும். நாட்டில் வன்செயல் பற்றிய வதந்திகளும், ஆள்பவனுக்கு விரோதமாக ஆள்பவன் எழும்புகிறான் என்ற வதந்திகளும் வரும்.
47
ஆகையால் நான் பாபிலோனின் விக்கிரங்களை தண்டிக்கும் காலம் நிச்சயமாய் வரும். அவளுடைய முழு நாடும் அவமானப்படும். அங்கு கொலைசெய்யப்படும் யாவரும் அவளின் நடுவிலேயே விழுந்து கிடப்பார்கள்.
48
அப்பொழுது வானமும், பூமியும் அவைகளிலுள்ள யாவும் பாபிலோனைப் பார்த்து மகிழ்வுடன் ஆர்ப்பரிக்கும். ஏனெனில், அழிக்கிறவர்கள் வடக்கிலிருந்து வந்து, அவளைத் தாக்குவார்கள்” என்று யெகோவா அறிவிக்கிறார்.
49
“பாபிலோனின் நிமித்தம் பூமியெங்கும் வெட்டப்பட்டவர்கள் விழுந்ததுபோல், இஸ்ரயேலில் வெட்டப்பட்டவர்களின் நிமித்தம் பாபிலோனும் விழவேண்டும்.
50
வாளுக்குத் தப்பியவர்களே! நீங்கள் தாமதியாதீர்கள்; புறப்படுங்கள்; நீங்கள் தூரதேசத்திலிருந்து யெகோவாவை நினைவுகூருங்கள். எருசலேமையும் நினைத்துக்கொள்ளுங்கள்.”
51
“நிந்திக்கப்பட்டதால் நாங்கள் அவமானத்துக்குள்ளானோம். வெட்கம் எங்கள் முகங்களை மூடுகிறது. ஏனெனில், அந்நியர்கள் யெகோவாவின் ஆலயத்தின் பரிசுத்த இடத்திற்குள் புகுந்து விட்டார்கள்.”
52
“ஆனாலும் நாட்கள் வருகின்றன” என்று யெகோவா அறிவிக்கிறார். “அப்பொழுது நான் பாபிலோனுடைய விக்கிரகங்களை தண்டிப்பேன். பாபிலோன் நாடு முழுவதிலும் காயப்பட்டோர் கதறுவார்கள்.
53
பாபிலோன், ஆகாயம்வரை எட்டினாலும், உயர்ந்த தன் கோட்டைகளைப் பலப்படுத்தினாலும், நான் அவளுக்கு விரோதமாக அழிக்கிறவர்களை அனுப்புவேன்” என்று யெகோவா அறிவிக்கிறார்.
54
“பாபிலோனிலிருந்து ஒரு அழுகையின் சத்தம் வருகிறது. அது பாபிலோனியரின் நாட்டிலிருந்து வரும் பேரழிவின் கூக்குரல்.
55
யெகோவா பாபிலோனை அழிப்பார்; அதன் பலத்த அமளியை அடக்குவார். எதிரிகள் அலையலையாய் வெள்ளம்போல கொந்தளித்து எழும்புவார்கள். அவர்களின் குரல்களின் இரைச்சல் எதிரொலிக்கும்.
56
பாபிலோனுக்கு விரோதமாக அழிக்கிறவன் ஒருவன் வருவான்; அவளுடைய போர்வீரர் பிடிக்கப்படுவார்கள். அவர்களுடைய வில்லுகளும் முறிக்கப்படும். ஏனெனில் யெகோவா பழிவாங்கும் இறைவன்; அவர் முழுமையாகப் பதில் செய்வார்.
57
நான் அவளுடைய அலுவலர்களையும், ஞானிகளையும், ஆளுநர்களையும், அதிகாரிகளையும், போர்வீரர்களையும் வெறிக்கப் பண்ணுவேன். அவர்கள் விழித்தெழாமல் என்றென்றைக்கும் நித்திரையாயிருப்பார்கள்” என்று சேனைகளின் யெகோவா என்ற பெயருடைய அரசர் கூறுகிறார்.
58
சேனைகளின் யெகோவா கூறுவது இதுவே: “பாபிலோனின் அகன்ற மதில் தரைமட்டமாக்கப்படும். அவளது உயர்ந்த வாசல்கள் தீக்கிரையாகும். மக்கள் வீணாகவே பிரயாசப்படுகிறார்கள். நாடுகளின் உழைப்பும் நெருப்புக்கு எரிபொருளாகிறது.”
59
மாசெயாவின் பேரனும் நேரியாவின் மகனுமான உயர் அதிகாரி செராயாவுக்கு இறைவாக்கினன் எரேமியா கொடுத்த செய்தி இதுவே: இது யூதாவின் அரசன் சிதேக்கியாவின் ஆட்சியின் நான்காம் வருடத்தில் செராயா, சிதேக்கியாவிடம் பாபிலோனுக்குப் போனபோது கொடுக்கப்பட்டது.
Settings

Reading style

Typeface

Font size 19px

Reading width 75 chars

Options