Skip to content
எரேமியா 51:34-44

எரேமியா 51:34-44

34
பாபிலோன் அரசனான நேபுகாத்நேச்சார் எங்களை விழுங்கிப்போட்டான். எங்களை அவன் குழப்பத்திற்குள்ளாக்கி, எங்களை வெறுமையான ஜாடியாக்கி விட்டான். இராட்சத பாம்பைப்போல எங்களை விழுங்கி, எங்கள் சுவையான உணவுகளால் தன் வயிற்றை நிரப்பிக்கொண்டு எங்களை வெளியே துரத்திவிட்டான்.
35
“எங்களுக்கும் எங்கள் பிள்ளைகளுக்கும் செய்யப்பட்ட கொடுமை பாபிலோன்மீது சுமரட்டும்” என்று சீயோனில் குடியிருப்பவர்கள் கூறுகிறார்கள். “எங்கள் இரத்தப்பழி பாபிலோனில் குடியிருப்பவர்கள்மேல் சுமரட்டும்” என்று எருசலேம் கூறுகிறாள்.
36
ஆகையால் யெகோவா கூறுவது இதுவே: “பார், நான் உனக்காக வழக்காடிப் பழிவாங்குவேன். அவளின் கடலை வற்றச்செய்து, ஊற்றுகளையும் வறண்டு போகப்பண்ணுவேன்.
37
பாபிலோன் இடிபாடுகளின் குவியலாகி, நரிகளின் உறைவிடமாகும். அது பயங்கரத்திற்கும், நிந்தைக்கும் உரிய பொருளும், ஒருவரும் குடியிராத இடமுமாகும்.
38
அவளுடைய குடிமக்கள் யாவரும் இளம் சிங்கங்களைப்போல் கர்ஜிக்கிறார்கள்; சிங்கக் குட்டிகளைப்போலச் சத்தமிடுவார்கள்.
39
ஆயினும் அவர்கள் கொதித்தெழுந்தவர்களாய் இருக்கும்வேளையில், நான் அவர்களுக்கு வித்தியாசமான ஒரு விருந்தை ஆயத்தம்பண்ணி, அவர்களை வெறிக்கப் பண்ணுவேன். அதனால் அவர்கள் உரத்த சத்தமிட்டுச் சிரிப்பார்கள். அதன்பின் அவர்கள் என்றுமே எழும்பாதபடி நித்திரையடைவார்கள்” என்று யெகோவா அறிவிக்கிறார்.
40
“வெட்டுவதற்குக் கொண்டுபோகப்படும் ஆட்டுக்குட்டிகளைப்போலவும், செம்மறியாட்டுக் கடாக்களைப்போலவும், வெள்ளாடுகளைப்போலவும் அவர்களைக் கொண்டுபோவேன்.
41
“சேசாக்கு எப்படிக் கைப்பற்றப்பட்டது? முழு பூமியினுடைய பெருமை எப்படிப் பிடிபட்டது? நாடுகளுக்குள் பாபிலோன் எவ்வளவு பயங்கரமாயிருக்கப் போகிறது.
42
பாபிலோனுக்கு மேலாக கடல் புரண்டு எழும்பும். அதன் கொந்தளிக்கும் அலைகள் அதை மூடும்.
43
அதன் பட்டணங்கள் பாழாகி, வறண்டு பாலைவனமாகும். அங்கு ஒருவரும் குடியிருக்கமாட்டார்கள். அதின் வழியாக ஒருவனும் பயணம் செய்யவுமாட்டான்.
44
நான் பாபிலோனில் இருக்கிற பேல் தெய்வத்தைத் தண்டிப்பேன். அவன் விழுங்கியதைத் துப்பும்படி செய்வேன். பிறநாடுகள் இனிமேல் அவன் பின்னால் அணி அணியாகப் போகமாட்டார்கள். பாபிலோனின் மதிலும் விழுந்துவிடும்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options