எரேமியா 52:1-11
1
சிதேக்கியா அரசனானபோது இருபத்தொரு வயதுள்ளவனாயிருந்தான். அவன் எருசலேமில் பதினோரு வருடங்கள் ஆட்சிசெய்தான். அவனுடைய தாயின் பெயர் அமூத்தாள். அவள் லிப்னா ஊரைச்சேர்ந்த எரேமியாவின் மகள்.
2
சிதேக்கியாவும் யோயாக்கீம் செய்ததுபோலவே, யெகோவாவின் பார்வையில் தீமையானதைச் செய்தான்.
3
யெகோவாவின் கோபத்தினாலேயே எருசலேமுக்கும் யூதாவுக்கும் இவையெல்லாம் நடந்தன. முடிவில் அவர்களை தமது சமுகத்திலிருந்து அகற்றிவிட்டார். இந்த நேரத்தில் சிதேக்கியா பாபிலோன் அரசனுக்கு எதிராக கலகம் செய்தான்.
4
எனவே சிதேக்கியா அரசாண்ட ஒன்பதாம் வருடம், பத்தாம் மாதம், பத்தாம் தேதி பாபிலோன் அரசன் நேபுகாத்நேச்சார் தன் எல்லாப் படைகளுடனும், எருசலேமுக்கு விரோதமாக அணிவகுத்து வந்தான். அவர்கள் நகரத்துக்கு வெளியே முகாமிட்டு, அதைச் சுற்றிலும் கொத்தளங்களை அமைத்தார்கள்.
5
சிதேக்கியா அரசனின் ஆட்சியில் பதினோராம் வருடம்வரை, பட்டணம் முற்றுகை போடப்பட்டிருந்தது.
6
நான்காம் மாதம் ஒன்பதாம் நாளில், பட்டணத்தில் பஞ்சம் மிகவும் கொடியதாய் இருந்ததினால், அங்கிருந்த மக்களுக்கு சாப்பிடுவதற்கு உணவு இல்லாதிருந்தது.
7
அப்பொழுது பட்டணத்து மதில் உடைக்கப்பட்டது. முழு இராணுவமும் தப்பி ஓடியது. பாபிலோனியர் பட்டணத்தைச் சூழ்ந்துகொண்டிருந்த போதிலும், அரசனின் தோட்டத்தின் அருகே இரு சுவர்களுக்கும் இடையில் இருந்த வாசல் வழியாக, இரவு நேரத்தில் அவர்கள் பட்டணத்தைவிட்டு ஓடினார்கள். அவர்கள் யோர்தான் பள்ளத்தாக்கை நோக்கித் தப்பி ஓடினார்கள்.
8
ஆனால் பாபிலோனியப் படைகள் சிதேக்கியா அரசனைப் பின்தொடர்ந்து சென்று, எரிகோவின் சமவெளியில் அவனைப் பிடித்தார்கள். அவனுடைய எல்லா இராணுவவீரரும் அவனிடமிருந்து பிரிக்கப்பட்டு சிதறடிக்கப்பட்டதால், சிதேக்கியா பிடிபட்டான்.
9
அவன் ஆமாத் நாட்டிலுள்ள ரிப்லாவில் இருந்த பாபிலோன் அரசனிடம் கொண்டுபோகப்பட்டான். அங்கே பாபிலோன் அரசன் அவனுக்குத் தீர்ப்பளித்தான்.
10
ரிப்லாவிலே பாபிலோன் அரசன், சிதேக்கியாவின் மகன்களை அவனுடைய கண்களுக்கு முன்பாகவே கொலைசெய்தான். யூதாவின் எல்லா அலுவலர்களையும் கொலைசெய்தான்.
11
பின்பு பாபிலோனின் அரசன் சிதேக்கியாவின் கண்களைப் பிடுங்கி, வெண்கலச் சங்கிலிகளால் கட்டி, அவனைப் பாபிலோனுக்குக் கொண்டுபோனான். அங்கே அவன் சாகும் நாள்வரை சிறையில் வைக்கப்பட்டிருந்தான்.
Settings