Skip to content
உபாகமம் 32:1-25

உபாகமம் 32:1-25

1
வானங்களே, செவிகொடுங்கள், நான் பேசுவேன். பூமியே என் வாயின் வார்த்தைகளைக் கேள்.
2
என் போதனை மழைபோலப் பெய்யட்டும். என் வார்த்தைகள் பனிபோல் இறங்கட்டும், அவை பசும்புல்மேல் மழைத்தூறல் போலவும், இளஞ்செடிகளின் மேல் பெருமழைபோலவும் பெய்யட்டும்.
3
நான் யெகோவாவின் பெயரை அறிவிப்பேன். எங்கள் இறைவனின் மகத்துவத்தைத் துதியுங்கள்!
4
அவரே கற்பாறை, அவருடைய செயல்கள் முழு நிறைவானவை. அவரது வழிகளெல்லாம் நீதியானவை. அவர் உண்மையுள்ள இறைவன். அவர் அநியாயம் செய்வதில்லை. அவர் நேர்மையும், நீதியுமானவர்.
5
இஸ்ரயேலரோ அவர்முன் இழிவானவற்றைச் செய்தார்கள். அதனால் அவருடைய பிள்ளைகளாய் இராமல், கபடமும் வஞ்சகமும் உள்ள சந்ததியாய் மாறி வெட்கத்திற்குள்ளானார்கள்.
6
மூடரும், ஞானம் அற்றவர்களுமான மக்களே! நீங்கள் யெகோவாவுக்கு நன்றிக்கடன் செய்வது இவ்விதம் தானோ? உங்களைப் படைத்த தகப்பன் அவரல்லவா? உங்களைப் படைத்து உருவாக்கியவர் அவரல்லவா?
7
பழைய நாட்களை நினைவுகூருங்கள்; கடந்துபோன தலைமுறைகளைப் பற்றிச் சிந்தித்துப் பாருங்கள். உங்கள் தகப்பனிடம் கேளுங்கள் அவர் உங்களுக்குச் சொல்வார், உங்கள் சபைத்தலைவர்களிடம் கேளுங்கள், அவர்கள் உங்களுக்கு விளங்கப்படுத்துவார்கள்.
8
மகா உன்னதமானவர் நாடுகளுக்கு உரிமைச்சொத்தைப் பங்கிட்டபோது, எல்லா மனுக்குலத்தையும் பிரித்தபோது, இஸ்ரயேல் மக்களின் எண்ணிக்கையின்படியே, மக்கள் கூட்டங்களின் எல்லைகளைத் திட்டமிட்டார்.
9
யெகோவாவின் மக்களே அவரின் பங்கு, யாக்கோபே அவருடைய உரிமைச்சொத்து.
10
அவர் அவர்களைப் பாலைவன நாட்டிலே கண்டெடுத்தார்; அதுவோ வறண்டதும், நரி ஊளையிடும் பாழ்நிலமுமாய் இருந்தது. அவர் அவர்களைப் பாதுகாத்துப் பராமரித்தார். அவர் அவர்களைத் தமது கண்மணிபோல் காத்தருளினார்.
11
கழுகு தன் கூட்டைக் கலைத்து, தன் குஞ்சுகளுக்கு மேலாக அசைவாடி, தன் சிறகுகளை விரித்து அவைகளை ஏந்திக்கொண்டு, தன் செட்டைகளின்மேல் சுமந்து செல்வதுபோல,
12
யெகோவா ஒருவரே அவர்களை வழிநடத்தினர், அவர்களுடன் வேறு அந்நிய தெய்வம் இருக்கவில்லை.
13
அவர் அவர்களை நிலத்தின் மேடுகளில் ஏறி நடக்கச் செய்தார். வயலின் பலன்களினால் அவர்களுக்கு உணவு கொடுத்தார். கற்பாறையில் இருந்து எடுத்த தேனினாலும், வைரப்பாறையிலிருந்து வழியும் எண்ணெயினாலும் அவர்களுக்கு ஊட்டமளித்தார்.
14
பசுக்களின் தயிர், ஆடுகளின் பால், கொழுத்த செம்மறியாட்டுக் குட்டிகள், வெள்ளாடுகள், பாசானில் தெரிந்தெடுத்த செம்மறியாட்டுக் கடாக்கள், சிறந்த கோதுமைத்தானியம் ஆகியவற்றாலும் ஊட்டமளித்தார். நுரைக்கும் இரத்தம் போன்ற திராட்சைப்பழத்தின் ரசத்தையும் குடித்தார்கள்.
15
யெஷூரன் கொழுப்பு மிகுந்து அடங்காதவன் ஆனான். அவர்கள் வயிறாரத்தின்று, கொழுத்து, பருத்து, கொழுப்பு அதிகமுடையவர்களானார்கள். அப்பொழுது அவர்கள் தங்களைப் படைத்த இறைவனையே கைவிட்டு, தங்கள் இரட்சிப்பின் கற்பாறையையும் புறக்கணித்தார்கள்.
16
இஸ்ரயேலர் அந்நிய தெய்வங்களைப் பின்பற்றி யெகோவாவுக்கு எரிச்சல்மூட்டி, தங்கள் அருவருப்பான விக்கிரகங்களால் அவருக்குக் கோபம் உண்டாக்கினார்கள்.
17
அவர்கள் பேய்களுக்குப் பலி செலுத்தினார்கள். அவை இறைவன் அல்ல. அவர்கள் முன்பு அறிந்திராத தெய்வங்களே அவை. சமீபத்தில் தோன்றியதும், உங்கள் முற்பிதாக்கள் பயப்படாததுமான தெய்வங்கள்.
18
உங்களை உருவாக்கிய கற்பாறையைக் கைவிட்டு விட்டீர்கள். உங்களைப் பெற்றெடுத்த இறைவனையும் மறந்துபோனீர்கள்.
19
யெகோவா இதைக்கண்டு தனது மகன்களும், மகள்களுமான அவர்களோடு கோபம் கொண்டதனால் அவர்களைப் புறக்கணித்து சொன்னதாவது:
20
“அவர்களுக்கு என் முகத்தை மறைப்பேன்; அவர்களின் முடிவு எப்படியாகும் என பார்ப்பேன். மேலும் அவர், அவர்கள் கொடுமையில் ஊறிய தலைமுறையினர், நம்பிக்கை துரோகம் செய்யும் பிள்ளைகள்.
21
தெய்வம் அல்லாதவற்றால் எனக்கு எரிச்சல்மூட்டி, பயனற்ற விக்கிரகங்களினால் கோபத்தை மூட்டினார்கள். நான் மக்களென மதிக்கப்படாதவர்களால் அவர்களுக்கு எரிச்சல் மூட்டுவேன், பகுத்தறிவு இல்லாத தேசத்தால், நான் அவர்களுக்குக் கோபமூட்டுவேன்.
22
எனது கோபத்தினால் நெருப்பு மூட்டப்பட்டிருக்கிறது, அது பாதாளத்தின்கீழ் முனைவரையும் எரிகிறது. அது பூமியையும், அதன் விளைச்சலையும் எரிக்கும், மலைகளின் அஸ்திபாரங்களையும் கொலித்திவிடும்.
23
“நான் அவர்கள்மேல் பேரழிவுகளைக் குவிப்பேன்; அவர்கள்மேல் என் அம்புகளை கணக்கின்றி எய்வேன்.
24
நான் அவர்களுக்கு எதிராக வாட்டும் பஞ்சத்தை அனுப்புவேன்; விழுங்கும் கொள்ளைநோய்களையும், சாகடிக்கும் வாதைகளையும் அனுப்புவேன். கூரிய பற்களையுடைய காட்டு மிருகங்களையும், புழுதியில் ஊரும் விஷப்பாம்புகளையும் அனுப்புவேன்.
25
வீதிகளிலே, வாளானது அவர்களைப் பிள்ளைகள் அற்றவர்களாக்கும்; அவர்களுடைய வீடுகளில் பயங்கரம் ஆளுகை செய்யும். இளைஞரும், இளம்பெண்களும் அழிவார்கள்; குழந்தைகளும் நரைத்துப்போன கிழவர்களும் அழிவார்கள்.
Settings

Reading style

Typeface

Font size 19px

Reading width 75 chars

Options