உள்ளடக்கத்திற்குச் செல்க

The Miracles of Christ பற்றிய பைபிள் வசனங்கள்: Devils cast out

24 வசனங்கள் · 30 அம்சங்கள்

Devils cast out பற்றிய வசனங்கள்

  1. இயேசு மறுபக்கத்திலுள்ள கதரேனருடைய நாட்டிற்கு வந்தபோது, பிசாசு பிடித்த இருவர் கல்லறைகளிலிருந்து வந்து அவரைச் சந்தித்தனர். ஒருவரும் அந்த வழியாய்ச் செல்லமுடியாதவாறு, அவர்கள் மிகவும் கொடூரமானவர்களாய் இருந்தார்கள்.

  2. அவர்கள், “இறைவனின் மகனே, உமக்கு எங்களிடம் என்ன வேண்டும்? நியமிக்கப்பட்ட காலம் வருமுன், எங்களைச் சித்திரவதை செய்யவா நீர் இங்கே வந்தீர்?” என உரத்த சத்தமிட்டார்கள்.

  3. அவர்களுக்கு கொஞ்சம் தூரத்தில் பன்றிகள் பெருங்கூட்டமாய் மேய்ந்து கொண்டிருந்தது.

  4. பிசாசுகள் இயேசுவிடம், “நீர் எங்களை வெளியே விரட்டுவதானால், பன்றிக்கூட்டத்திற்குள் அனுப்பிவிடும்” என்று கெஞ்சிக்கேட்டன.

  5. இயேசு அவைகளிடம், “போங்கள்!” என்றார். எனவே அவைகள் வெளியே வந்து, பன்றிகளுக்குள் புகுந்துகொண்டன. அந்த முழுப்பன்றிக்கூட்டமும், மேட்டிலிருந்து விரைந்தோடி, கடலுக்குள் விழுந்து செத்தன.

  6. அவர்கள் வெளியே சென்றுகொண்டிருந்தபோது, பிசாசு பிடித்ததினால் பேச முடியாதிருந்த ஒருவனை இயேசுவிடம் கொண்டுவந்தார்கள்.

  7. அந்த பிசாசு துரத்தப்பட்டபோது, ஊமையாயிருந்தவன் பேசத் தொடங்கினான். மக்கள் கூட்டம் வியப்படைந்து, “இஸ்ரயேலில் இதுபோன்ற எதுவும், ஒருபோதும் காணப்பட்டதில்லை” என்றார்கள்.

  8. அப்பகுதியிலிருந்த ஒரு கானானியப் பெண் அவரிடத்தில் வந்து, “ஆண்டவரே, தாவீதின் மகனே, என்மேல் இரக்கமாயிரும்! எனது மகளுக்குப் பிசாசு பிடித்திருப்பதினால் மிகவும் வேதனைப்படுகிறாள்” என்று கதறினாள்.

  9. ஆனால் இயேசு அதற்குப் பதிலாக ஒரு வார்த்தையும் சொல்லவில்லை. எனவே அவரது சீடர்கள் அவரிடம் வந்து, “இவளை அனுப்பிவிடும் இவள் நமக்குப் பின்னால் கதறிக் கொண்டே வருகிறாளே!” என வேண்டிக்கொண்டார்கள்.

  10. அப்பொழுது இயேசு, “நான் இஸ்ரயேலில் வழிதவறிப்போன ஆடுகளுக்காக மட்டுமே அனுப்பப்பட்டேன்” என்று சொன்னார்.

  11. அந்தப் பெண் வந்து, இயேசுவின்முன் முழங்காற்படியிட்டு, “ஆண்டவரே எனக்கு உதவிசெய்யும்!” என்றாள்.

  12. இயேசு அவளைப் பார்த்து, “பிள்ளைகளின் அப்பத்தை எடுத்து நாய்க்குட்டிகளுக்குப் போடுவது சரியல்ல” என்றார்.

  13. அதற்கு அவள், “ஆம் ஆண்டவரே, ஆனால் நாய்க்குட்டிகள் எஜமானின் மேஜையில் இருந்து விழும் அப்பத்துண்டுகளைத் தின்னுமே” என்றாள்.

  14. அப்பொழுது இயேசு, “பெண்ணே, உன் விசுவாசம் பெரியது! நீ வேண்டியது கொடுக்கப்பட்டது” என்றார். அந்நேரமே, அவளுடைய மகள் சுகமடைந்தாள்.

  15. மக்கள் கூட்டம் இருந்த இடத்திற்கு அவர்கள் வந்தபோது, ஒருவன் இயேசுவுக்கு முன்பாக வந்து, முழங்காற்படியிட்டு,

  16. “ஆண்டவரே எனது மகன்மேல் இரக்கம் காட்டும். அவன் வலிப்பு வியாதியினால் மிகவும் வேதனைப்படுகிறான். அவன் அடிக்கடி நெருப்பிலும், தண்ணீரிலும் விழுந்துவிடுகிறான்.

  17. நான் அவனை உமது சீடர்களிடம் கொண்டுவந்தேன். ஆனால் அவர்களால் அவனைக் குணமாக்க முடியவில்லை” என்றான்.

  18. “விசுவாசமில்லாத மாறுபாடுள்ள தலைமுறையினரே, எவ்வளவு காலத்திற்கு நான் உங்களோடு தங்கியிருப்பேன்? எவ்வளவு காலத்திற்கு நான் உங்களைப் பொறுத்துக்கொள்வேன்? அந்த சிறுவனை இங்கே என்னிடம் கொண்டுவாருங்கள்” என்று இயேசு கூறினார்.

  19. இயேசு பிசாசை அதட்டினார். அது அந்தச் சிறுவனைவிட்டு வெளியே வந்தது. அந்நேரமே அவன் குணம் பெற்றான்.

  20. அப்பொழுது, அந்த ஜெப ஆலயத்தில் தீய ஆவி பிடித்தவனாயிருந்த ஒருவன் சத்தமிட்டு,

  21. “நசரேயனாகிய இயேசுவே, எங்களிடம் உமக்கு என்ன? எங்களை அழிப்பதற்காகவா வந்தீர்? நீர் யார் என்பது எனக்குத் தெரியும், நீர் இறைவனுடைய பரிசுத்தர்!” என்றான்.

  22. “அமைதியாயிரு! இவனைவிட்டு வெளியே போ” என்று இயேசு அவனை அதட்டினார்.

  23. அப்பொழுது தீய ஆவி, அந்த மனிதனை வலிப்புடன் வீழ்த்தி, பெருங்கூச்சலிட்டுக் கொண்டு, அவனைவிட்டு வெளியேறியது.

  24. எல்லோரும் வியப்படைந்து ஒருவரோடொருவர், “இது என்ன? இது அதிகாரமுடைய ஒரு புதிய போதனையாக இருக்கிறதே! இயேசு தீய ஆவிகளுக்குக்கூட கட்டளையிடுகிறார்; அவைகளும் அவருக்குக் கீழ்ப்படிகின்றனவே” என்று பேசிக்கொண்டார்கள்.