The Excellency and Glory of Christ பற்றிய பைபிள் வசனங்கள்
முக்கிய பைபிள் வசனங்கள்
உசியா அரசன் இறந்த வருடத்தில், யெகோவா உயரமும் உன்னதமுமான சிங்காசனத்தின்மேல் அமர்ந்திருப்பதை நான் கண்டேன். அவருடைய நீண்டிருந்த மேலுடை ஆலயத்தை நிரப்பியிருந்தது.
அவருக்கு மேலாக சேராபீன்கள் இருந்தன. அவை ஒவ்வொன்றுக்கும் ஆறு சிறகுகள் இருந்தன. அவை இரு சிறகுகளால் தங்கள் முகங்களை மூடிக்கொண்டும், இரு சிறகுகளால் தங்கள் பாதங்களை மூடிக்கொண்டும், இரு சிறகுகளால் பறந்துகொண்டும் இருந்தன.
அவை ஒன்றையொன்று அழைத்து இவ்வாறு கூறியது: “எல்லாம் வல்ல யெகோவா, பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர், பூமி முழுவதும் அவரது மகிமையால் நிறைந்திருக்கிறது.”
அவைகளுடைய குரல்களின் சத்தத்தினால் ஆலயக் கதவு நிலைகளும், வாசற்படிகளும் அதிர்ந்தன, ஆலயம் புகையினாலும் நிரம்பியது.
அப்பொழுது நான், “எனக்கு ஐயோ, நான் அழிந்தேன்! நானோ அசுத்த உதடுகளுள்ள மனிதன், அசுத்த உதடுகள் உள்ள மக்கள் மத்தியில் வாழ்கிறேன். என் கண்கள், எல்லாம் வல்ல யெகோவாவாகிய அரசரைக் கண்டுவிட்டனவே” என்று சொன்னேன்.
ஏதோமிலிருந்து வருகிற இவர் யார்? கருஞ்சிவப்பு கறைபடிந்த உடையுடன் போஸ்றா பட்டணத்திலிருந்து வருகிற இவர் யார்? தனது சிறப்பான அங்கியுடன் தமது வல்லமையின் மகத்துவத்தில் எழுந்தருளி வருகிற இவர் யார்? “நான்தான் அவர்! நியாயமாய் பேசி, இரட்சிக்க வல்லவர்.”
உமது உடைகள் சிவப்பாய், திராட்சையைப் பிழியும் ஆலையில் மிதிக்கிறவனுடைய உடையைப்போல் இருப்பது ஏன்?
“நான் தனியாய் திராட்சைப் பிழியும் ஆலையை மிதித்தேன்; மக்கள் கூட்டங்களில் ஒருவனும் என்னுடன் இருந்ததில்லை. அவர்களை என் கோபத்தில் மிதித்து, என் கடுங்கோபத்தில் அவர்களை நசுக்கினேன்; அவர்களுடைய இரத்தம் என் ஆடைகளின்மேல் தெறித்தது, என் உடைகளெல்லாம் கறைப்பட்டன.
ஆரம்பத்தில் வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை இறைவனுடன் இருந்தது, அந்த வார்த்தை இறைவனாயிருந்தது.
அந்த வார்த்தையானவர் ஆரம்பத்திலேயே இறைவனோடு இருந்தார்.
அந்த வார்த்தையானவர் மூலமாகவே எல்லாம் படைக்கப்பட்டன; படைக்கப்பட்டிருப்பவைகளில் எதுவுமே அவரில்லாமல் படைக்கப்படவில்லை.
அவரில் ஜீவன் இருந்தது; அந்த ஜீவனே எல்லா மனிதருக்கும் வெளிச்சமாயிருந்தது.
அந்த வெளிச்சம் இருளிலே பிரகாசிக்கிறது, ஆனால் இருள் அதை ஒருபோதும் மேற்கொள்ளவில்லை.
இறைவன் மேலும் சொன்னதாவது, “நீர் ஆதியிலே பூமிக்கு அஸ்திபாரங்களை அமைத்தீர்; வானங்களும் உமது கரங்களின் வேலைப்பாடாய் இருக்கின்றன.
அவை அழிந்துபோகும்; நீரோ நிலைத்திருப்பீர்; அவையெல்லாம் உடையைப்போல பழமையாய்ப்போகும்.
அவற்றை ஒரு மேலுடையைப்போல் நீர் சுருட்டிவைப்பீர்; அவை ஒரு உடையைப்போல் மாற்றப்படும். நீரோ மாறாதவராய் நிலைத்திருக்கிறீர். உம்முடைய வருடங்கள் ஒருபோதும் முடிந்து போவதில்லை.”
இப்படிப்பட்ட பிரதான ஆசாரியர், நமது தேவைக்குப் பொருத்தமானவராகவே இருக்கிறார். இவர் பரிசுத்தமுள்ளவரும், குற்றம் சாட்டப்படாதவரும், தூய்மையானவரும், பாவிகளிடமிருந்து பிரித்து எடுக்கப்பட்டவரும், வானங்களுக்கு மேலாக உயர்த்தப்பட்டவருமாக இருக்கிறார்.
மற்ற பிரதான ஆசாரியர்கள், முதலாவது தங்களுடைய பாவங்களுக்காகவும், பின்பு மனிதருடைய பாவங்களுக்காகவும் ஒவ்வொரு நாளும் பலிகளைச் செலுத்தினார்கள். ஆனால் அவர்களைப்போல், அப்படி இயேசு பலிசெலுத்த வேண்டியதில்லை. இவரோ தம்மைத்தாமே ஒப்புக்கொடுத்தபோது, அவர்களுடைய பாவங்களுக்காக ஒரேமுறை பலியானார்.
ஏனெனில் பலவீனமுள்ள மனிதர்களையே, மோசேயின் சட்டம் பிரதான ஆசாரியர்களாக நியமிக்கிறது; ஆனால் மோசேயின் சட்டத்தின் பின்னர் வந்த இறைவனுடைய ஆணையின் வார்த்தையோ, என்றென்றும் பூரணரான மகனையே நியமித்தது.
நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் வல்லமையையையும் அவருடைய வருகையையும் நாங்கள் உங்களுக்குச் சொன்னபோது, தந்திரமான கட்டுக்கதைகளை நாங்கள் கைக்கொள்ளவில்லை. நாங்களோ அவருடைய மகத்துவத்தைக் கண்ணால் கண்ட சாட்சிகளாயிருக்கிறோம்.
“இவர் என் மகன், இவரில் நான் அன்பாயிருக்கிறேன்” என்று சொல்லுகிற குரல் உன்னதமான மகிமையிலிருந்து அவருக்கு உண்டாகி, பிதாவாகிய இறைவனிடமிருந்து அவர் கனத்தையும் மகிமையையும் பெற்றுக்கொண்டார்.
அந்த புனிதமான மலையின்மேல் நாங்கள் அவருடன் இருந்தபோது, பரலோகத்திலிருந்து வந்த அந்தக் குரலை நாங்களும் கேட்டோம்.
அவர் அதை எடுத்துக்கொண்டதும் அந்த நான்கு உயிரினங்களும், அந்த இருபத்து நான்கு சபைத்தலைவர்களும் ஆட்டுக்குட்டியானவருக்கு முன்பாகக் கீழே விழுந்தார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் ஒரு வீணை வாத்தியத்தை வைத்திருந்தார்கள். அவர்கள் தூபம் நிறைந்த தங்கக் கிண்ணங்களையும் வைத்திருந்தார்கள்; அவை பரிசுத்தவான்களின் மன்றாட்டுகள்.
அந்தச் சபைத்தலைவர்கள் ஒரு புதிய பாடலைப் பாடினார்கள்: “நீர் அந்தப் புத்தகத்தை எடுக்கவும், அதன் முத்திரைகளைத் திறக்கவும் தகுதியுள்ளவர். ஏனெனில் நீர் கொல்லப்பட்டீர். உம்முடைய இரத்தத்தினாலே மனிதர்களை ஒவ்வொரு பின்னணியிலிருந்தும், ஒவ்வொரு மொழியைப் பேசுகிறவர்களிலிருந்தும், ஒவ்வொரு நாட்டு மக்களிலிருந்தும், ஒவ்வொரு பகுதியிலிருந்தும் இறைவனுக்கென்று விலைகொடுத்து வாங்கிக்கொண்டீர்.
நீர் அவர்களை நமது இறைவனுக்கு ஊழியம் செய்யும்படி, ஒரு அரசாயும் ஆசாரியராயும் ஆக்கியிருக்கிறீர்; அவர்கள் பூமியிலே ஆளுகை செய்வார்கள்.”