Skip to content

Self-Will and Stubbornness பற்றிய பைபிள் வசனங்கள்

52 வசனங்கள் · 30 அம்சங்கள்

முக்கிய பைபிள் வசனங்கள்

புத்தகத்தின்படி வடிகட்டு
  1. நான் அவர்களுடைய ஆலோசனைக்கு உடன்படாமலும், அவர்களுடைய கூட்டத்தில் சேராமலும் இருப்பேனாக. ஏனெனில், அவர்கள் தங்கள் கோபத்தினால் மனிதரைக் கொன்றார்கள், தாங்கள் விரும்பியவாறு எருதுகளை முடமாக்கினார்கள்.

  2. மேலும் யெகோவா மோசேயிடம், “இந்த மக்களை நான் கவனித்துப் பார்த்தேன். அவர்களோ பிடிவாத குணமுள்ளவர்களாய் இருக்கிறார்கள்.

  3. அவன், “யெகோவாவே, நான் உம்முடைய கண்களில் தயவு பெற்றிருந்தேன் என்றால், யெகோவாவாகிய நீர் எங்களுடன் வாரும். மக்கள் பிடிவாத குணமுள்ளவர்களாய் இருந்தாலும் எங்கள் கொடுமைகளையும், பாவத்தையும் மன்னித்து, எங்களை உமது உரிமைச்சொத்தாக ஏற்றுக்கொள்ளும்” என்றான்.

  4. உங்கள் இறைவனாகிய யெகோவா இந்த வளமான நாட்டை நீங்கள் உரிமையாக்கிக்கொள்ளும்படி, அதை உங்களுக்குக் கொடுப்பது உங்கள் நேர்மையின் காரணமாக அல்ல என்பதை அறிந்துகொள்ளுங்கள். ஏனெனில் நீங்கள் கீழ்ப்படியாத பிடிவாதமுள்ள மக்கள்.

  5. மேலும் யெகோவா என்னிடம், “இந்த மக்களை நான் பார்த்தேன். உண்மையிலேயே இவர்கள் ஒரு கீழ்ப்படியாத பிடிவாதமுள்ள மக்கள்.

  6. உமது அடியார்களான ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோரை நினைவிற்கொள்ளும். இம்மக்களின் பிடிவாதத்தையும், கொடுமையையும், அவர்களுடைய பாவத்தையும் பொருட்படுத்தாதேயும்.

  7. தாய் தகப்பனுக்குக் கீழ்ப்படியாதவனும், அவர்கள் கண்டித்து நடத்தும்போது, அவர்களுக்குச் செவிகொடாதவனும், பிடிவாதமும், கலகமும் செய்யும் ஒரு மகன் ஒரு மனிதனுக்கு இருக்கக்கூடும்.

  8. அவனுடைய தகப்பனும் தாயும் அவனைப் பிடித்து, தங்கள் பட்டணத்து வாசலிலுள்ள சபைத்தலைவர்களிடம் கொண்டுபோக வேண்டும்.

  9. அப்பொழுது அப்பட்டணத்திலுள்ள மனிதர் எல்லோரும் அவன்மீது கல்லெறிந்து கொல்லவேண்டும். இவ்விதமாய் உங்கள் மத்தியிலுள்ள தீமையை நீங்கள் அகற்றவேண்டும். அப்பொழுது இஸ்ரயேலர் யாவரும் இதைக் கேட்டுப் பயப்படுவார்கள்.

  10. ஏனெனில், நீங்கள் கலகக்காரரும், பிடிவாதக்காரரும் என்பதை நான் அறிவேன். நான் உயிரோடு, உங்களுடன் இருக்கும்போதே யெகோவாவுக்கு விரோதமாகக் கலகம் பண்ணுகிறீர்களே! அப்படியானால் நான் இறந்தபின் எவ்வளவாய்க் கலகம் பண்ணுவீர்கள்?

  11. ஆனால் அந்த நீதிபதி இறந்தவுடன், இஸ்ரயேல் மக்கள் திரும்பவும் தங்கள் முன்னோரைவிட தூய்மையற்ற வழியில் நடந்தார்கள். அந்நிய தெய்வங்களைப் பின்பற்றி வணங்கி அதற்கு சேவை செய்தார்கள். அவர்கள் இப்படி தங்கள் தீய நடத்தைகளிலிருந்தும் பிடிவாதமான வழிகளிலிருந்தும் விடுபட மறுத்தார்கள்.

  12. ஆனாலும் மக்கள் சாமுயேலின் வார்த்தைகளுக்குச் செவிகொடுக்க மறுத்து, அவர்கள்: “அப்படியல்ல, எங்களை ஆள ஒரு அரசன் வேண்டும்.

  13. ஆனால் நீ ஏன் யெகோவாவுக்குக் கீழ்ப்படியவில்லை. நீ ஏன் அந்த கொள்ளைப்பொருட்களை பாய்ந்து எடுத்து யெகோவாவினுடைய பார்வையில் தீமையானதைச் செய்தாய்?” என்று கேட்டான்.

  14. அதற்குச் சவுல் சாமுயேலை நோக்கி, “நான் யெகோவாவுக்குக் கீழ்ப்படிந்தேன். யெகோவா செய்யச் சொன்ன பணியைச் செய்து, அமலேக்கியரை முற்றிலும் அழித்து, அவர்கள் அரசனான ஆகாகையும் சிறைபிடித்து வந்தேன்.

  15. இராணுவவீரர்களோ இறைவனுக்கு அழிக்கப்பட ஒப்புக் கொடுக்கப்பட்டவைகளிலிருந்து சிறந்த செம்மறியாடுகளையும், ஆடுமாடுகளையும் உம்முடைய இறைவனாகிய யெகோவாவுக்கு கில்காலிலே பலியிடுவதற்காகவே கொண்டுவந்தார்கள்” என்றான்.

  16. அதற்கு சாமுயேல் பதிலாகச் சொன்னதாவது: “யெகோவா தனது குரலுக்குக் கீழ்ப்படிவதைப் பார்க்கிலும், தகன காணிக்கைகளிலும் பலிகளிலும் மகிழ்ச்சியடைவாரோ? கீழ்ப்படிதலே, பலி செலுத்துவதிலும் மேலானது; அவருடைய சத்தத்திற்கு செவிகொடுப்பதே, ஆட்டுக்கடாக்களின் கொழுப்பிலும் மேலானது.

  17. கலகம் பண்ணுவது, குறிசொல்லும் பாவத்தைப் போன்றது. அகங்காரம், விக்கிரக வழிபாட்டைப்போல் தீமையானது. நீ யெகோவாவின் வார்த்தையைத் தள்ளிவிட்டபடியால், அவரும் நீ அரசனாய் இராதபடி உன்னைப் புறக்கணித்துவிட்டார்.”

  18. ஆனாலும், அரசனின் வார்த்தைக்கு யோவாபும், தளபதிகளும் கட்டுப்படவேண்டியதால், இஸ்ரயேல் வீரர்களைக் கணக்கிடும்படி அரசனிடமிருந்து சென்றார்கள்.

  19. ஆனால் அவர்கள் அதைக் கேட்க மறுத்து, தங்கள் இறைவனாகிய யெகோவாவிடம் நம்பிக்கை வைக்காத தங்கள் முற்பிதாக்களைப்போல பிடிவாதமுள்ளோராக இருந்தார்கள்.

  20. நீங்கள் உங்கள் முற்பிதாக்கள் இருந்ததுபோல் அடங்காதவர்களாக இருக்கவேண்டாம்; யெகோவாவுக்குக் கீழ்ப்படியுங்கள். என்றென்றைக்குமென அவர் பரிசுத்தப்படுத்திய பரிசுத்த இடத்திற்கு வாருங்கள். உங்கள் இறைவனாகிய யெகோவாவுக்குப் பணிசெய்யுங்கள். அப்பொழுது அவரது கடுங்கோபம் உங்களைவிட்டு நீங்கும்.

  21. ஆயினும் யோசியா அவனைவிட்டுத் திரும்பிப் போகவில்லை. யுத்தத்தில் ஈடுபடுவதற்கு அவன் மாறுவேடம் அணிந்தான். அவன் இறைவனின் கட்டளைப்படி நேகோ கூறியவற்றுக்கு செவிகொடுக்காமல் மெகிதோ சமவெளியில் சண்டையிடப் போனான்.

  22. அத்துடன் இறைவனின் பெயரில் தன்னை ஆணையிடும்படி செய்த அரசன் நேபுகாத்நேச்சாருக்கு விரோதமாக அவன் கலகம் செய்தான். அவன் அடங்காதவனாய் தன் இருதயத்தையும் கடினப்படுத்தி, இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவினிடத்திற்குத் திரும்பாமல் இருந்தான்.

  23. “ஆனால் எங்கள் முற்பிதாக்களான அவர்கள், அகந்தையும் பிடிவாதமும் உள்ளவர்களாய் உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படியவில்லை.

  24. அவர்கள் உமக்குச் செவிகொடுக்க மறுத்து, நீர் அவர்கள் நடுவில் நடப்பித்த அற்புதங்களையும் நினைவிற்கொள்ளத் தவறினார்கள். அவர்கள் பிடிவாதமுள்ளவர்களாகி, கலகம்பண்ணி, தங்கள் அடிமைத்தன வாழ்விற்குத் திரும்பிப்போகும்படி ஒரு தலைவனையும் நியமித்தார்கள். ஆனாலும் நீர் மன்னிக்கிறவரும், கிருபையுள்ளவரும், கருணையுள்ளவரும், கோபிப்பதற்குத் தாமதிப்பவரும், நேர்மையான அன்பில் நிறைந்தவருமான இறைவனாயிருக்கிறீர். அதனால் அவர்களை நீர் கைவிடவில்லை.

  25. “உமது சட்டத்தின்படி நடக்கத் திரும்பும்படி எச்சரித்தீர்; ஆனால் அவர்களோ, மிகவும் இறுமாப்பாய் நடந்து, உமது கட்டளைகளுக்குக் கீழ்ப்படியாமல் போனார்கள். உமது விதிமுறைகளுக்கு ஒருவன் கீழ்ப்படிந்தால், அவன் வாழ்வைப் பெறுவான் என்பதை அறிந்தும், அவர்களோ உமது விதிமுறைகளுக்கு எதிராய் பாவம் செய்தார்கள். பிடிவாதமாய் அவர்கள் தங்கள் முதுகை உமக்குத் திருப்பி அடங்காதவர்களாய் உமக்குச் செவிசாய்க்காமல் போனார்கள்.