Skip to content

Religious Revivals பற்றிய பைபிள் வசனங்கள்

22 வசனங்கள் · 4 அம்சங்கள்

முக்கிய பைபிள் வசனங்கள்

  1. ஏலாவின் மகனான இஸ்ரயேலின் அரசன் ஓசெயாவின் ஆட்சியின் மூன்றாம் வருடத்தில் ஆகாஸின் மகன் எசேக்கியா யூதாவை ஆட்சி செய்யத் தொடங்கினான்.

  2. அவன் அரசனானபோது இருபத்தைந்து வயதுள்ளவனாயிருந்தான். இவன் எருசலேமில் இருபத்தொன்பது வருடங்கள் ஆட்சிசெய்தான். இவனுடைய தாய் சகரியாவின் மகளான அபியாள் என்பவள்.

  3. எசேக்கியா தன் முற்பிதா தாவீது செய்ததுபோல, யெகோவாவின் பார்வையில் சரியானதைச் செய்தான்.

  4. வழிபாட்டு மேடைகளை அகற்றி, புனித தூண்களை நொறுக்கி, அசேரா விக்கிரக தூண்களை வீழ்த்தினான். அத்துடன் மோசே செய்த வெண்கலப் பாம்பைத் துண்டுதுண்டாக உடைத்தான். அன்றுவரை இஸ்ரயேலர்கள் அதற்குத் தூபங்காட்டி வந்தனர். அது நெகுஸ்தான் என்று அழைக்கப்பட்டது.

  5. எசேக்கியா இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவை மிகவும் உறுதியாக நம்பியிருந்தான். யூதா அரசர்களில் அவனைப்போல் ஒருவரும் அவனுக்கு முன்போ, பின்போ இருந்ததில்லை.

  6. அவன் யெகோவாவை உறுதியாகப் பிடித்தவனாக அவரைப் பின்பற்றுவதைவிட்டு ஒருபோதும் விலகியதில்லை. மோசேக்கு யெகோவா கொடுத்த கட்டளைகளைக் கைக்கொண்டு நடந்தான்.

  7. யெகோவா அவனோடுகூட இருந்தார். அவன் எதைச் செய்தாலும் அவனுக்கு வெற்றியாகவே இருந்தது. அவன் அசீரியா அரசனுக்கு எதிராகக் கலகம்பண்ணி, அவனுக்குப் பணிசெய்ய மறுத்தான்.

  8. உன்னதத்திலிருந்து நம்மேல் இறைவனுடைய ஆவியானவர் ஊற்றப்படும்வரையும், பாலைவனம் செழிப்பான வயலாகும்வரையும், செழிப்பான வயல்கள் வனம்போல் காணப்படும்வரையும் இப்படியே இருக்கும்.

  9. “அதன்பின்பு, நான் எல்லா மக்கள்மேலும் என் ஆவியானவரைப் பொழிவேன். உங்கள் மகன்களும், மகள்களும் இறைவாக்கு உரைப்பார்கள்; உங்கள் முதியவர்கள் கனவுகளையும் உங்கள் இளைஞர் தரிசனங்களையும் காண்பார்கள்.

  10. கடைசி நாட்களிலே, யெகோவாவினுடைய ஆலயத்தின் மலை, எல்லா மலைகளுக்குள்ளும் உயர்ந்ததாக நிலைநிறுத்தப்படும்; எல்லா குன்றுகளுக்கு மேலாக உயர்த்தப்படும், எல்லா மக்கள் கூட்டமும் அதை நாடி ஓடி வருவார்கள்.

  11. அநேக நாடுகள் வந்து, “வாருங்கள், நாம் யெகோவாவின் மலைக்கு ஏறிப்போவோம், யாக்கோபின் இறைவனுடைய ஆலயத்திற்குப் போவோம். நாம் அவர் பாதைகளில் நடப்பதற்கு அவர் தம் வழிகளை நமக்கு போதிப்பார்” என்பார்கள். சீயோனிலிருந்து அவரது சட்டமும், எருசலேமிலிருந்து யெகோவாவின் வார்த்தையும் வெளிவரும்.

  12. அநேக மக்கள் கூட்டங்களிடையே அவர் நியாயம் விசாரித்து, எங்கும் பரந்து தூரமாயுள்ள வலிமைமிக்க நாடுகளின் வழக்குகளை அவர் தீர்த்துவைப்பார். அப்பொழுது அவர்கள் தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாகவும், தங்கள் ஈட்டிகளை அரிவாள்களாகவும் அடித்துச் செய்துகொள்வார்கள். அதன்பின் ஒரு நாடு வேறு நாட்டை எதிர்த்து பட்டயத்தை எடுப்பதுமில்லை, போருக்கான பயிற்சியையும் அவர்கள் கற்பதுமில்லை.

  13. ஒவ்வொருவனும் தன் சொந்த திராட்சைக்கொடியின் கீழேயும், தன் சொந்த அத்திமரத்தின் கீழேயும் சுகமாய் இருப்பான். ஒருவரும் அவர்களைப் பயமுறுத்தமாட்டார்கள். ஏனெனில் சேனைகளின் யெகோவாவே இதைச் சொல்லியிருக்கிறார்.

  14. எல்லா மக்கள் கூட்டங்களும் தங்கள் தெய்வங்களின் பெயரில் நடந்தாலும், நாங்களோ எங்கள் இறைவனாகிய யெகோவாவின் பெயரிலேயே என்றென்றும் நடப்போம் என்று சொல்வார்கள்.

  15. யெகோவா அறிவிக்கிறதாவது: “அந்த நாளில் நான் முடவர்களை ஒன்றுசேர்ப்பேன், நாடுகடத்தப்பட்டோரையும், என்னால் துன்பத்திற்கு உட்பட்டோரையும் கூட்டிச்சேர்ப்பேன்.”

  16. நான் எஞ்சியிருக்கும் முடவர்களையும், துரத்தப்பட்டவர்களையும் ஒரு வலிமைமிக்க நாடாக்குவேன். அந்த நாளிலிருந்து என்றென்றைக்குமாக, யெகோவாவாகிய நானே சீயோன் மலையிலிருந்து அவர்களை அரசாளுவேன்.

  17. எருசலேமே, மந்தையின் காவற்கோபுரமே, சீயோன் மகளின் கோட்டையே, உனக்கோவென்றால்: முந்தைய ஆட்சியுரிமை உனக்கே திரும்பக் கொடுக்கப்படும்; அரசுரிமை உன் மகளுக்கே வரும்.

  18. யெகோவாவே, உம்முடைய புகழைப்பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன், யெகோவாவே, நீர் நடப்பித்த உம்முடைய செயல்களின் நிமித்தம் நான் வியப்படைந்து நிற்கிறேன். எங்கள் நாட்களிலும் அவற்றைப் புதுப்பியும், எங்கள் காலத்திலும் அவற்றை அனைவரும் அறியும்படி செய்யும்; உமது கோபத்திலும், எங்களுக்கு இரக்கத்தை நினைத்தருளும்.

  19. மேலும் சேனைகளின் யெகோவா சொல்வதாவது: “பல மக்கள் கூட்டங்களும், பல நகரக் குடிகளும் இன்னும் வருவார்கள்.

  20. அப்பொழுது ஒரு நகரத்தின் குடிகள் இன்னொரு நகரத்திற்குப் போய், ‘சேனைகளின் யெகோவாவைத் தேடவும், யெகோவாவின் தயவுக்காக அவரை மன்றாடவும், நாங்கள் போகிறோம். நீங்களும் வாருங்கள். உடனே போவோம்’ என்று சொல்வார்கள்.

  21. எனவே அநேக மக்கள் கூட்டங்களும், வலிமைவாய்ந்த நாடுகளும் சேனைகளின் யெகோவாவின் சமுகத்தைத் தேடவும், அவரிடம் தயவை நாடி மன்றாடவும் எருசலேமுக்கு வருவார்கள்.”

  22. சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: “அந்நாட்களில் பல மொழிகளைப் பேசுவோரிலும் பல மக்களிலுமிருந்து பத்து மனிதர்கள் ஒரு யூதனின் உடையின் தொங்கலைப் பற்றிப்பிடித்துக்கொண்டு, ‘இறைவன் உம்மோடிருக்கிறார் எனக் கேள்விப்பட்டோம்; அதனால் நாங்களும், உம்முடனே எருசலேமுக்கு வருகிறோம், என்று சொல்வார்கள்.’ ”