உள்ளடக்கத்திற்குச் செல்க
லூக்கா 12:22-40

லூக்கா 12:22-40

22
பின்பு இயேசு தமது சீடர்களிடம் சொன்னதாவது: “ஆதலால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், எதைச் சாப்பிடுவோம் என்று உங்கள் வாழ்வைக்குறித்தும் அல்லது எதை உடுப்போம் என உங்கள் உடலைக்குறித்தும் கவலைப்பட வேண்டாம். ஏனெனில் உங்கள் உயிர் உணவைவிடவும், உங்கள் உடல் உடையைவிடவும் முக்கியமானது.
23
ஏனெனில், வாழ்க்கை உண்பதிலும், உடுத்துவதிலும் மட்டுமல்ல; அதிலும் மேலான காரியங்களைக் கொண்டுள்ளது.
24
காகங்களைக் கவனித்துப் பாருங்கள்: அவை விதைக்கிறதுமில்லை, அறுவடை செய்கிறதுமில்லை. அவற்றிற்கு களஞ்சிய அறையோ, பண்டகசாலையோ இல்லை; ஆனால், இறைவன் அவற்றிற்கு உணவு கொடுக்கிறார். பறவைகளைப் பார்க்கிலும் நீங்கள் எவ்வளவோ மதிப்பு வாய்ந்தவர்களாய் இருக்கிறீர்களே!
25
கவலைப்படுவதால், உங்களில் யார் தன் வாழ்நாளில் ஒருமணி நேரத்தைக் கூட்டுவான்?
26
இல்லையே! இந்தச் சிறிய காரியத்தையே உங்களால் செய்யமுடியாதிருக்கிறதே. அப்படியிருக்க, பெருங்காரியங்களைக் குறித்து நீங்கள் ஏன் கவலைப்படுகிறீர்கள்?
27
“காட்டு மலர்கள் எப்படி வளர்கின்றன என்று கவனித்துப் பாருங்கள். அவை உழைப்பதுமில்லை, நூல் நூற்கிறதுமில்லை; ஆனால் நான் உங்களுக்குச் சொல்கிறேன், சாலொமோன் எல்லாச் சிறப்புடையவனாய் இருந்துங்கூட, இவைகளில் ஒன்றைப்போல் உடை உடுத்தியதில்லை.
28
விசுவாசக் குறைவுள்ளவர்களே! இன்றைக்கு இருந்து நாளைக்கு நெருப்பிலே எறியப்படுகிற காட்டுப் புல்லுக்கே, இறைவன் இவ்வாறு உடுத்துவாரானால், உங்கள் பிதா உங்களுக்கு எவ்வளவு அதிகமாய் அவர் உங்களுக்கு உடுத்துவிப்பார்.
29
விசுவாசம் குறைந்தவர்களே, என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம்; என்று அவைகளிலேயே உங்கள் மனதைச் செலுத்தி, அவற்றைக்குறித்து கவலைப்படாதிருங்கள்.
30
ஏனெனில், இறைவனை அறியாதவர்கள் இவைகளையே தேடி ஓடுகிறார்கள். ஆனால் உங்கள் பிதாவோ, இவை எல்லாம் உங்களுக்குத் தேவை என அறிந்திருக்கிறார்.
31
எனவே முதலாவதாக இறைவனுடைய அரசைத் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குகூடக் கொடுக்கப்படும்.
32
“சிறு மந்தையே, பயப்படாதே. ஏனெனில், உங்கள் பிதா தமது அரசை உங்களுக்குக் கொடுக்கப் பிரியமாய் திட்டமிட்டிருக்கிறார்.
33
உங்கள் உடைமைகளை விற்று, ஏழைகளுக்குக் கொடுங்கள். இவ்விதமாய் பழையதாய்ப் போகாத பணப்பைகளையும் உங்களுக்கென உண்டாக்கிக்கொள்ளுங்கள். குறையாத செல்வத்தையும் பரலோகத்தில் உங்களுக்கென ஏற்படுத்திக்கொள்ளுங்கள். அங்கே திருடர் நெருங்கி வருவதுமில்லை, பூச்சிகள் அவற்றை அழிப்பதுமில்லை.
34
ஏனெனில், உங்கள் செல்வம் எங்கே இருக்கிறதோ, அங்குதான் உங்கள் இருதயமும் இருக்கும்.
35
“பணிசெய்வதற்கு ஆயத்தமாய், உங்கள் உடைகளை உடுத்திக்கொள்ளுங்கள். எரிந்து கொண்டிருக்கும்படி, உங்கள் விளக்குகளை ஏற்றி வையுங்கள்.
36
திருமண விருந்திலிருந்து திரும்பிவரும் தங்கள் எஜமானுக்காகக் காத்துக்கொண்டிருக்கும் வேலைகாரர்களைப் போலிருங்கள். அப்படியிருந்தால்தான், எஜமான் வந்து கதவைத் தட்டும்போது, உடனே அவர்கள் கதவை அவனுக்காகத் திறக்க முடியும்.
37
எஜமான் வரும்போது, அவனுடைய வேலைக்காரர் விழிப்பாயிருப்பதை அவன் கண்டால், அது அவர்களுக்கு நல்லது. நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன், எஜமான் உடையை உடுத்திக்கொண்டு, தன் வேலைக்காரர்களைச் சாப்பாட்டுப் பந்தியில் உட்காரச்செய்து, தானே வந்து அவர்களுக்குப் பணிசெய்வான்.
38
அந்த எஜமான் இரவு ஒன்பது மணிக்கு அல்லது நள்ளிரவு வந்தாலும், அவனுடைய வேலையாட்கள் ஆயத்தமாயிருப்பதை அவன் காண்பானானால், அது அவர்களுக்கு நல்லது.
39
இதை விளங்கிக்கொள்ளுங்கள்: திருடன் எத்தனை மணிக்கு வருவான் என்று வீட்டின் சொந்தக்காரன் அறிந்திருந்தால், தன் வீட்டை திருடன் உடைத்து நுழையாதபடி பார்த்துக்கொள்வானே.
40
நீங்களும் ஆயத்தமாயிருக்க வேண்டும். ஏனெனில் மானிடமகனாகிய நான் நீங்கள் எதிர்பாராத நேரத்திலே வருவேன்” என்றார்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Reading Width 45 chars

Options