Skip to content
யோசுவா 7:1-12

யோசுவா 7:1-12

1
ஆயினும் யெகோவாவுக்கென்று ஒப்புக்கொடுக்கப்பட்ட பொருட்களின் விஷயத்தில் இஸ்ரயேலர் உண்மையற்றவர்களாய் இருந்தார்கள். கர்மீயின் மகனாகிய ஆகான் அவைகளில் சிலவற்றை எடுத்ததன் மூலம் யெகோவாவின் கட்டளை மீறப்பட்டது. கர்மீ, யூதா கோத்திரத்தைச் சேர்ந்த சேராகின் மகனாகிய சிம்ரியின் மகன். அதனால் இஸ்ரயேலருக்கு எதிராய் யெகோவாவின் கோபம் மூண்டது.
2
அப்பொழுது யோசுவா சில மனிதரை அப்பிரதேசத்தை உளவுபாருங்கள் என்று எரிகோவிலிருந்து ஆயிபட்டணத்திற்கு அனுப்பினான். ஆயி, பட்டணம் பெத்தேலுக்குக் கிழக்கே பெத் ஆவெனுக்கு அருகேயுள்ளது. அப்படியே அவர்கள் போய் ஆயிபட்டணத்தை உளவுபார்த்தார்கள்.
3
அவர்கள் யோசுவாவிடம் திரும்பிவந்து, “ஆயிபட்டணத்தில் ஒருசில மனிதர் மட்டுமே இருக்கிறார்கள். அதனால் எல்லா மக்களும் அதற்கெதிராகப் போகவேண்டிய அவசியமில்லை. எல்லா மக்களையும் கஷ்டப்படுத்தாமல் இரண்டாயிரம் அல்லது மூவாயிரம் மனிதரை அதைக் கைப்பற்றுவதற்காக அனுப்பும்” என்றார்கள்.
4
அப்படியே ஏறக்குறைய மூவாயிரம்பேர் போனார்கள்; ஆனால் ஆயிபட்டணத்தின் மனிதர்களால் இவர்கள் தோற்கடிக்கப்பட்டார்கள்.
5
ஆயிபட்டணத்தார், சுமார் முப்பத்தாறுபேரைக் கொன்றுபோட்டார்கள். அவர்கள் இஸ்ரயேலரை ஆயி பட்டண வாசலிலிருந்து கல் குவாரிகள்வரை துரத்தி, மலைச்சரிவுகளில் அவர்களைத் தாக்கினார்கள். இதனால் இஸ்ரயேலரின் இருதயங்கள் சோர்வுற்று தண்ணீரைப்போலாயிற்று.
6
அப்பொழுது யோசுவா தன் உடைகளைக் கிழித்துக்கொண்டு, யெகோவாவின் உடன்படிக்கைப் பெட்டிக்குமுன் முகங்குப்புற விழுந்து, அன்று மாலைவரை அங்கேயே கிடந்தான். அவ்வாறே இஸ்ரயேல் சபைத்தலைவர்களும் செய்து தங்கள் தலைகள்மேல் புழுதியைக் கொட்டிக்கொண்டு கிடந்தார்கள்.
7
அப்பொழுது யோசுவா, “ஆண்டவராகிய யெகோவாவே, இந்த மக்களை ஏன் யோர்தானைக் கடக்கப்பண்ணி இங்கு கொண்டுவந்தீர்? எங்களை எமோரியர் கையில் ஒப்புக்கொடுத்து அழிப்பதற்காகவோ? நாங்கள் யோர்தானின் மறுகரையில் குடியிருப்பதில் திருப்தியடைந்திருந்தால் நலமாயிருந்திருக்குமே!
8
யெகோவாவே, இப்பொழுது இஸ்ரயேலர் எதிரிகளால் தோற்கடிக்கப்பட்டுவிட்டார்களே! நான் இதற்கு என்ன சொல்வேன்?
9
கானானியரும் அந்த நாட்டின் மற்ற மக்களும் இதைக் கேள்விப்படுவார்கள். அவர்கள் எங்களைச் சுற்றிவளைத்துப் பூமியிலிருந்து எங்கள் பெயரை முழுவதும் அழித்துவிடுவார்களே. அப்பொழுது உம்முடைய மகத்தான பெயருக்காக நீர் என்ன செய்வீர்?” என்றான்.
10
அப்பொழுது யெகோவா யோசுவாவிடம், “எழுந்திரு; முகங்குப்புற விழுந்துகிடந்து என்ன செய்கிறாய்?
11
இஸ்ரயேலர் பாவம் செய்திருக்கிறார்கள்; அவர்கள் கைக்கொள்வதற்காக நான் கட்டளையிட்ட என் உடன்படிக்கையை அவர்கள் மீறிவிட்டார்கள். எனக்கென்று ஒதுக்கப்பட்ட பொருட்களில் சிலவற்றையும் அவர்கள் எடுத்துக்கொண்டார்கள். அவர்கள் களவுசெய்தும், பொய்சொல்லியும் இருக்கிறார்கள். அவற்றைத் தங்கள் சொந்த உடைமைகளோடு சேர்த்துக்கொண்டார்கள்.
12
அதனால்தான் இஸ்ரயேலர்கள் தங்களுடைய பகைவர்கள் முன்னால் எதிர்த்துநிற்க முடியாமல், அவர்கள் எதிரிகளுக்குப் புறமுதுகு காட்டி ஓடினார்கள். ஏனெனில் அவர்கள் தங்கள் அழிவுக்குத் தாங்களே இடங்கொடுத்திருக்கிறார்கள். உங்கள் மத்தியில் இருக்கும் அழிவுக்கு நியமிக்கப்பட்ட எல்லாவற்றையும் அழித்தாலொழிய நான் இனிமேல் உங்களோடு இருக்கமாட்டேன்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Reading Width 45 chars

Options