Skip to content
எரேமியா 44:15-28

எரேமியா 44:15-28

15
அப்பொழுது தங்கள் மனைவியர் பிற தெய்வங்களுக்கு பலி செலுத்தியதை அறிந்திருந்த எல்லா மனிதரும், அவர்களோடு நின்ற எல்லாப் பெண்களுமான பெரும் கூட்டமும், மேல் எகிப்திலும் கீழ் எகிப்திலும் வாழ்ந்த எல்லா மக்களும் எரேமியாவிடம் கூறியதாவது:
16
“யெகோவாவின் பெயரால் நீ எங்களுக்குக் கூறிய செய்தியை நாங்கள் கேட்கப்போவதில்லை.
17
ஆனால் நாங்கள் எவைகளைச் செய்வோமெனக் கூறினோமோ, அவைகளையே நிச்சயமாகச் செய்வோம். எருசலேமின் தெருக்களிலும், யூதாவின் பட்டணங்களிலும் எங்கள் முற்பிதாக்களும், எங்களுடைய அரசர்களும், அதிகாரிகளும் செய்ததுபோலவே நாங்களும் வான அரசிக்குத் தூபங்காட்டி அவளுக்குப் பானபலிகளையும் வார்ப்போம். அந்த நாட்களில் எங்களுக்குப் போதிய உணவு இருந்தது. எல்லா செல்வாக்குடனும் நாங்கள் இருந்தோம். எந்தவித துன்பத்தையும் நாங்கள் காணவில்லை.
18
ஆனால் வான அரசிக்கு நாங்கள் தூபம் செலுத்துவதையும் பானபலிகள் வார்ப்பதையும் நிறுத்தியதிலிருந்து, நாங்கள் எல்லாவற்றிலும் குறைவடைந்தோம். வாளினாலும், பஞ்சத்தினாலும் அழிந்துகொண்டிருக்கிறோம்” என்றார்கள்.
19
மேலும் அங்கிருந்த பெண்கள், “நாங்கள் வான அரசிக்குத் தூபங்காட்டி, அவளுக்கு பானபலிகளை வார்த்தபோது, நாங்கள் அவளுடைய உருவமுள்ள அப்பங்களைச் சுட்டதையும், அவளுக்குப் பானபலிகளை ஊற்றியதையும் எங்கள் கணவன்மார் அறியாமலா இருந்தார்கள்?” என்று கேட்டார்கள்.
20
அப்பொழுது எரேமியா, தனக்குப் பதில் கொடுத்த ஆண், பெண் உட்பட எல்லா மக்களிடமும்,
21
“யூதாவின் பட்டணங்களிலும், எருசலேமின் தெருக்களிலும், நீங்களும், உங்கள் தந்தையரும், உங்கள் அரசர்களும், உங்கள் அதிகாரிகளும், நாட்டு மக்களும் தூபங்காட்டியதைப் பற்றி யெகோவா தெரியாமலிருந்தாரா?
22
உங்கள் கொடிய செயல்களையும், நீங்கள் செய்த அருவருப்புகளையும் யெகோவாவினால் சகிக்க முடியாமல் போயிற்று. அதனால்தான் யெகோவா உங்கள் நாட்டை இன்று இருப்பதுபோல் குடியில்லாமல் பாழடையச் செய்து, சாபத்திற்குள்ளாக்கினார்.
23
நீங்கள் தூபங்காட்டி, யெகோவாவுக்கு விரோதமாகப் பாவம் செய்தீர்கள். யெகோவாவுக்குக் கீழ்ப்படியாமலும், அவருடைய சட்டங்களையோ அவரது ஒழுங்குவிதிகளையோ அவர் சொன்னவற்றையோ கைக்கொள்ளாமலும் விட்டீர்கள். ஆகையால் இன்று நீங்கள் காணும் பேராபத்து உங்கள்மேல் வந்திருக்கிறது” என்றான்.
24
மேலும் எரேமியா, பெண்கள் உட்பட எல்லா மக்களையும் பார்த்து, “எகிப்திலிருக்கும் மக்களே! யூதாவிலிருக்கும் மக்களே! நீங்கள் எல்லோரும் யெகோவாவின் வார்த்தையைக் கேளுங்கள்.
25
இஸ்ரயேலின் இறைவனாகிய சேனைகளின் யெகோவா கூறுகிறதாவது: ‘வான அரசிக்குத் தூபங்காட்டவும், பானபலிகளை வார்க்கவும், நாங்கள் செய்த வாக்கை நிச்சயமாக நிறைவேற்றுவோம்’ என்று நீங்களும், உங்கள் மனைவியரும் பொருத்தனை செய்தீர்கள். அதை உங்கள் செயல்களினால் காட்டியுமிருக்கிறீர்கள். “உங்கள் வாக்கை தொடர்ந்து செய்துகொண்டே இருங்கள். உங்கள் பொருத்தனைகளைக் கடைப்பிடியுங்கள்.
26
ஆனாலும் எகிப்தில் குடியிருக்கும் யூதா மக்களே! நீங்கள் எல்லோரும் யெகோவாவின் வார்த்தையைக் கேளுங்கள். ‘எனது மகத்தான பெயரால் ஆணையிடுகிறேன்’ என்று யெகோவா சொல்கிறார். ‘யூதாவிலிருந்து வந்து எகிப்தில் எங்கேயாவது வாழும் ஒருவனாவது, இனியொருபோதும், “ஆண்டவராகிய யெகோவா இருப்பது நிச்சயம்போல்” என்று ஆணையிடவோ, எனது பெயரை கூப்பிடவோ மாட்டான்.
27
நான் அவர்களுக்கு நன்மையையல்ல; தீமையைச் செய்யவே காத்துக்கொண்டிருக்கிறேன். எகிப்தில் இருக்கும் யூதா மக்கள் அனைவரும் இல்லாமற்போகும்வரை வாளினாலும், பஞ்சத்தினாலும் அழிவார்கள்.
28
வாளுக்குத் தப்பி எகிப்து நாட்டிலிருந்து யூதா நாட்டுக்குத் திரும்புகிறவர்களோ மிகச் சிலராய் இருப்பார்கள். அப்பொழுது யூதாவில் மீதியாயிருந்து எகிப்தில் குடியிருக்கும்படி போன நீங்கள் அனைவரும், என்னுடைய வார்த்தையோ அல்லது உங்களுடைய வார்த்தையோ எது நிலைநிற்கும் என்பதை அறிந்துகொள்வீர்கள்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options