Skip to content
ஆதியாகமம் 42:29-38

ஆதியாகமம் 42:29-38

29
அவர்கள் கானான் நாட்டுக்குத் தங்கள் தகப்பன் யாக்கோபிடம் வந்தபோது, தங்களுக்கு நடந்ததையெல்லாம் அவனுக்குச் சொன்னார்கள்.
30
“எகிப்தில் அதிகாரியாய் இருப்பவன் எங்களுடன் மிகவும் கடுமையாகப் பேசி, எங்களை உளவு பார்ப்பவர்களைப் போல் நடத்தினான்.
31
ஆனால் நாங்கள் அவனிடம், ‘நாங்கள் நீதியானவர்கள்; உளவாளிகள் அல்ல.
32
நாங்கள் பன்னிரண்டு சகோதரர், ஒரே தகப்பனின் பிள்ளைகள், ஒருவன் இறந்துவிட்டான்; இப்பொழுது இளையவன் எங்கள் தகப்பனோடு கானான் நாட்டில் இருக்கிறான்’ என்று சொன்னோம்.
33
“அப்பொழுது அந்நாட்டின் அதிபதியானவன் எங்களிடம், ‘நீங்கள் நீதியானவர்கள் என்று நான் அறிய உங்கள் சகோதரரில் ஒருவனை இங்கே என்னுடன் விட்டுவிட்டு, மற்றவர்கள் பட்டினியாய் இருக்கும் உங்கள் குடும்பத்துக்குத் தானியத்தை எடுத்துக்கொண்டு போங்கள்.
34
ஆனால், நீங்கள் உளவாளிகள் அல்ல, நீதியானவர்கள் என நான் அறியும்படி, உங்கள் இளைய சகோதரனை என்னிடம் கொண்டுவாருங்கள். அப்பொழுது உங்கள் சகோதரனை உங்களிடம் திருப்பி ஒப்படைப்பேன், நீங்களும் இந்நாட்டில் வியாபாரம் செய்யலாம் என்று சொன்னான்’ ” என்றார்கள்.
35
அவர்கள் தங்கள் சாக்குகளிலுள்ள தானியத்தைக் கொட்டியபோது, ஒவ்வொருவனுடைய சாக்கிலும் அவனவனுடைய பணப்பை இருந்தது! அவர்களும், அவர்கள் தகப்பனும் அவற்றைக் கண்டபோது பயந்தார்கள்.
36
அவர்கள் தகப்பன் யாக்கோபு அவர்களிடம், “நீங்கள் எனக்கு என் பிள்ளைகளை இல்லாமல் செய்துவிட்டீர்கள். யோசேப்பும் இல்லை, சிமியோனும் இல்லை, இப்போது பென்யமீனையும் கொண்டு போகப்போகிறீர்கள். எல்லாமே எனக்கு விரோதமாய் இருக்கின்றதே!” என்று சொல்லிக் கலங்கினான்.
37
அப்பொழுது ரூபன் தன் தகப்பனிடம், “நான் பென்யமீனை உம்மிடம் மறுபடியும் கொண்டுவராவிட்டால், என்னுடைய இரண்டு மகன்களையும் நீர் கொன்றுவிடலாம். அவனை என்னுடைய பாதுகாப்பிலேயே விட்டுவிடும், அவனை மறுபடியும் உம்மிடம் கொண்டுவருவேன்” என்றான்.
38
ஆனால் யாக்கோபு, “என் மகன் உங்களுடன் அங்கு வரமாட்டான்; அவன் சகோதரன் இறந்துபோனான், இவன் ஒருவன் மட்டுமே எஞ்சியிருக்கிறான். நீங்கள் போகும் பயணத்தில் இவனுக்கும் தீமையேதும் சம்பவித்தால், நரைத்த கிழவனாகிய என்னைத் துக்கத்துடனேயே சவக்குழிக்குள் போகச்செய்வீர்கள்” என்றான்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options