2 சாமுயேல் 20:4-13
4
அதன்பின் அரசன் அமாசாவிடம், “இன்னும் மூன்று நாட்களுக்குள் யூதா மக்களை என்னிடம் அழைப்பித்து, அத்துடன் நீயும் என்னுடன் இருக்கவேண்டும்” எனச் சொன்னான்.
5
ஆனால் யூதா மக்களை அழைத்துவரும்படி சென்ற அமாசா, அரசன் தனக்குக் குறிப்பிட்ட காலத்தையும்விட அதிக காலத்தை எடுத்தான்.
6
எனவே தாவீது அபிசாயிடம், “அப்சலோம் நமக்குச் செய்த தீங்கிலும் அதிக தீங்கை இப்பொழுது பிக்கிரியின் மகன் சேபா செய்வான். எனவே நீ உனது எஜமானின் மனிதரைக் கூட்டிக்கொண்டு அவனைத் துரத்திக்கொண்டு போ. இல்லையெனில் அவன் அரணான பட்டணங்களைத் தேடி எங்களிடமிருந்து தப்பிவிடுவான்” என்றான்.
7
அதன்படியே யோவாபின் வீரரும், கிரேத்தியரும், பிலேத்தியரும் எல்லா வலிமைமிக்க வீரரும் அபிசாயின் தலைமையில் புறப்பட்டார்கள். அவர்கள் பிக்கிரியின் மகன் சேபாவைத் துரத்திப்பிடிக்கும்படி எருசலேமிலிருந்து அணிவகுத்துச் சென்றார்கள்.
8
கிபியோனிலுள்ள பெரும் கற்பாறை அருகே அவர்கள் இருந்தபோது, அமாசா அவர்களைச் சந்திக்க வந்தான். அப்பொழுது யோவாப் இராணுவ சீருடையை அணிந்திருந்தான். அதன்மேல் அவனுடைய இடுப்புப்பட்டியில் ஒரு குறுவாள் கட்டப்பட்டிருந்தது. அவன் முன்னால் அடியெடுத்து வைத்தபோது அது உறையிலிருந்து கீழே விழுந்தது.
9
அப்பொழுது யோவாப் அமாசாவிடம், “சகோதரனே எப்படியிருக்கிறாய்?” என்று கேட்டு அவனை முத்தமிடுவதற்காக தன் வலதுகையால் அவன் தாடியைப் பிடித்து இழுத்தான்.
10
அமாசாவோ யோவாபின் இடதுகையில் இருந்த குறுவாளைக் குறித்து எச்சரிக்கையாக இருக்கவில்லை. அப்பொழுது யோவாப் அவனுடைய வயிற்றில் குத்தினான். அமாசாவின் குடல் தரையில் விழுந்தது. மீண்டும் குத்தப்படாமலேயே அமாசா இறந்தான். அதன்பின் யோவாபும் அவன் சகோதரன் அபிசாயும் பிக்கிரியின் மகன் சேபாவை பிடிக்க தொடர்ந்து போனார்கள்.
11
அப்பொழுது யோவாபின் வீரர்களிலொருவன் அமாசாவின் உடலருகே நின்று, “யோவாபை ஆதரிக்கும் எவனும், தாவீதின் பக்கம் இருக்கும் எவனும் யோவாபைப் பின்தொடரட்டும்” என்றான்.
12
அமாசா நடுவழியில் இரத்தத்தில் மூழ்கிக்கிடந்தான். அங்கு வந்த படைவீரர் அமாசாவின் உடலைப் பார்க்க தாமதித்து நிற்பதை அவன் கண்டான். அதனால் அமாசாவின் உடலை வழியிலிருந்து இழுத்து வயலுக்குள் போட்டு அதை ஒரு துணியால் மூடினான்.
13
அமாசாவின் உடல் வழியில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டபின், படைவீரர் அனைவரும் பிக்கிரியின் மகன் சேபாவை துரத்திப்பிடிக்கும்படி யோவாபுடன் போனார்கள்.
Settings