2 சாமுயேல் 13:1-20
1
சிறிதுகாலம் சென்றபின் தாவீதின் மகன் அம்னோன், தாமார் மீது காதல் கொண்டான். இந்த அழகான தாமார் தாவீதின் இன்னொரு மகனான அப்சலோமின் சகோதரி.
2
அம்னோன் தன்னுடைய சகோதரி தாமாரின் நிமித்தம் நோயுற்றான். ஏனெனில் அவன் சகோதரி தாமார் கன்னிகையாக இருந்தபடியால், அவளை அவனால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
3
அம்னோனுக்குத் தாவீதின் சகோதரன் சிமெயாவின் மகன் யோனதாப் நண்பனாயிருந்தான்; யோனதாப் மிகவும் தந்திரமுள்ளவன்.
4
யோனதாப் அம்னோனிடம், “அரசனின் மகனான நீ நாளுக்குநாள் மெலிந்துபோவதேன்? எனக்கு சொல்லமாட்டாயா?” என்றான். அதற்கு அம்னோன் அவனிடம், “என் சகோதரன் அப்சலோமின் சகோதரி தாமாரின்மேல் நான் ஆசை வைத்திருக்கிறேன்” என்றான்.
5
அப்பொழுது யோனதாப் அவனிடம், “நீ படுக்கைக்குப்போய் நோயாளியைப்போல பாசாங்கு செய்” என்றான். “உன் தகப்பன் உன்னைப் பார்க்க வரும்போது அவரிடம், ‘என் சகோதரி தாமார் வந்து, நான் சாப்பிட ஏதாவது கொடுக்கவேண்டும் என நான் விரும்புகிறேன். நான் அவளைப் பார்த்துக்கொண்டிருந்து அவள் கையால் சாப்பிடும்படிக்கு, எனக்கு முன்பாக அவள் உணவை தயாரிக்கட்டும்’ என்று சொல்” என்றான்.
6
அவன் சொன்னபடியே அம்னோன் படுத்துக்கொண்டு நோயாளியைப்போல பாசாங்கு செய்தான். அரசன் அவனைப் பார்க்க வந்தபோது அம்னோன் அரசனிடம், “என் சகோதரி தாமாரின் கையினால் நான் சாப்பிடும்படி அவள் வந்து என் கண்களுக்கு முன்பாக விசேஷமான உணவை செய்யவேண்டும்” என்று கேட்டான்.
7
தாவீது அரண்மனையிலிருந்த தாமாரிடம், “உன்னுடைய சகோதரன் அம்னோனின் வீட்டிற்குப்போய் அவனுக்கு உணவு தயாரித்துக் கொடு” என்று சொல்லி அனுப்பினான்.
8
தாமார் தன் சகோதரன் அம்னோனின் வீட்டுக்குப்போனபோது அவன் படுத்திருந்தான்; அவள் மாவை எடுத்துப் பிசைந்து அவன் கண்முன்னே அப்பங்களைச் சுட்டாள்.
9
பின்பு அப்பங்களை எடுத்து அவனுக்குப் பரிமாறினாள், அவனோ சாப்பிட மறுத்தான். அம்னோன், “எல்லோரையும் வெளியே அனுப்புங்கள்” என்றான். எனவே எல்லோரும் வெளியே போனார்கள்.
10
அதன்பின் அம்னோன் தாமாரிடம், “நான் உன் கையால் சாப்பிடும்படி உணவை என் படுக்கையறைக்குக் கொண்டுவா” என்றான். அவ்வாறே தாமார் தான் தயாரித்த அப்பங்களை எடுத்துக்கொண்டு தன் சகோதரன் அம்னோனிடம் அவனுடைய படுக்கையறைக்குப் போனாள்.
11
அவள் அவற்றை அவன் சாப்பிடும்படி அவனிடம் கொண்டுபோனபோது, அவன் அவள் கையைப் பிடித்து, “சகோதரியே, என்னுடன் படுக்கைக்கு வா” என்றான்.
12
அதற்கு தாமார், “வேண்டாம் என் சகோதரனே, என்னைப் பலவந்தப்படுத்தாதே. இஸ்ரயேலில் இப்படியான ஒரு செயல் நடைபெறக் கூடாது. இப்படிப்பட்ட கொடிய செயலை செய்யாதே.
13
அப்படிச் செய்தால் என் நிலை என்ன? எங்கு போய் இந்த அவமானத்தை நீக்குவேன்? உன் நிலை என்னவாகும்? நீ இஸ்ரயேலிலுள்ள கொடிய மூடர்களில் ஒருவனைப்போலாவாயே; தயவுசெய்து நீ அரசரிடம் பேசு, உனக்கு என்னைத் திருமணம் செய்துகொடுக்க அவர் தடைசெய்யமாட்டார்” என்றாள்.
14
அவனோ அவள் சொன்னதைக் கேட்கவில்லை. அம்னோன் தாமாரைவிட பலசாலி என்பதால் அவளைப் பலவந்தமாய் பிடித்து கற்பழித்தான்.
15
அதன்பின் அம்னோன் அவள்மேல் கடுமையான வெறுப்புகொண்டான். அவளை அவன் நேசித்த அளவைவிட, அதிகமாய் அவளை வெறுத்தான். எனவே அம்னோன், “எழும்பு, இங்கிருந்து வெளியே போய்விடு” என்று அவளிடம் கண்டிப்பாய் சொன்னான்.
16
அதற்கு அவள், “வேண்டாம்; இப்பொழுது நீ எனக்கு செய்த அநியாயத்தைப் பார்க்கிலும், என்னை வெளியே துரத்திவிடுவது பெரிய அநியாயமாய் இருக்கும்” என்றாள். ஆனாலும் அவள் சொன்னதை அவன் கேட்க மறுத்தான்.
17
அவன் தன் தனிப்பட்ட பணியாளனை அழைத்து அவனிடம், “இந்தப் பெண்ணை இங்கிருந்து வெளியே துரத்தி கதவைப் பூட்டு” என்று கட்டளையிட்டான்.
18
எனவே அவனுடைய பணியாள் அவளை வெளியேதள்ளிக் கதவைப் பூட்டினான். அப்பொழுது அரச குடும்பத்து கன்னிப்பெண்கள் அணியும் மிக அலங்காரமான அங்கியை தாமார் அணிந்திருந்தாள்.
19
தாமார் தன் தலைமேல் சாம்பலைப்போட்டு தான் அணிந்திருந்த அலங்கரிக்கப்பட்ட மேலங்கியைக் கிழித்து, தன் கைகளைத் தலையின்மேல் வைத்து சத்தமிட்டு அழுதுகொண்டே போனாள்.
20
இதைக் கேள்விப்பட்ட அவள் சகோதரன் அப்சலோம் அவளிடம் வந்து, “உன் சகோதரன் அம்னோன் உன்னுடன் உறவு கொண்டானா? ஆனாலும் என் சகோதரியே, இப்பொழுது அமைதியாயிரு. எப்படியாயினும் அவன் உன் சகோதரன் அல்லவா? அதைக்குறித்து மனம் வருந்தாதே” என்றான். தாமார் துயருற்றவளாய் தன் சகோதரன் அப்சலோம் வீட்டில் தங்கினாள்.
Settings