Skip to content
2 நாளாகமம் 29:1-19

2 நாளாகமம் 29:1-19

1
எசேக்கியா அரசனானபோது இருபத்தைந்து வயதுள்ளவனாயிருந்தான். இவன் எருசலேமில் இருபத்தொன்பது வருடங்கள் ஆட்சிசெய்தான். இவனுடைய தாய் சகரியாவின் மகளான அபியாள் என்பவள்.
2
அவன் தனது முற்பிதா தாவீது செய்ததுபோல, யெகோவாவின் பார்வையில் சரியானதைச் செய்தான்.
3
அவனுடைய ஆட்சியின் முதலாம் வருடம், முதல் மாதத்தில் அவன் யெகோவாவின் ஆலயத்தின் கதவுகளைத் திறந்து அவற்றைப் பழுதுபார்த்தான்.
4
அவன் ஆசாரியர்களையும், லேவியர்களையும் கொண்டுவந்து, கிழக்குப் பக்கத்திலுள்ள சதுக்கத்தில் அவர்களை ஒன்றுகூட்டினான்.
5
அவர்களிடம், “லேவியர்களே, எனக்கு செவிகொடுங்கள். நீங்கள் இப்பொழுது உங்களைப் பரிசுத்தப்படுத்துங்கள்; அத்துடன் உங்கள் முற்பிதாக்களின் இறைவனாகிய யெகோவாவின் ஆலயத்தையும் பரிசுத்தப்படுத்துங்கள். பரிசுத்த இடத்திலிருந்து எல்லா அசுத்தத்தையும் அகற்றிப்போடுங்கள்.
6
எனது முற்பிதாக்கள் உண்மையற்றவர்களாய் இருந்தார்கள். அவர்கள் எங்கள் இறைவனாகிய யெகோவாவின் பார்வையில் தீமையானதைச் செய்து, அவரைவிட்டு விலகினார்கள். அவர்கள் யெகோவாவின் உறைவிடத்திற்கு தங்கள் முகத்தை விலக்கி, அவருக்குத் தங்கள் முதுகைக் காட்டினார்கள்.
7
அத்துடன் அவர்கள் ஆலயத்தின் முன்மண்டபக் கதவுகளையும் பூட்டி, விளக்குகளை அணைத்துப் போட்டார்கள். அவர்கள் இஸ்ரயேலின் இறைவனின் பரிசுத்த இடத்தில் தூபங்காட்டவோ, தகன காணிக்கைகளைச் செலுத்தவோ இல்லை.
8
அதனால் யெகோவாவின் கோபம் யூதாவின்மேலும், எருசலேமின்மேலும் இறங்கியது. அவர் அவர்களைப் பயங்கரத்திற்கும், திகிலிற்கும், இகழ்ச்சிக்கும் உரிய பொருளாக வைத்திருக்கிறார். அதையே இன்று நீங்கள் உங்கள் சொந்தக் கண்களால் காண்கிறீர்கள்.
9
இதனாலேயே நமது தந்தையர்கள் வாளினால் மடிந்தார்கள்; நம்முடைய மகன்களும், மகள்களும், நம்முடைய மனைவிகளும் சிறைபிடிக்கப்பட்டிருக்கிறார்கள்.
10
இப்பொழுது நான் இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவுடன் ஒரு உடன்படிக்கையை செய்ய எண்ணியுள்ளேன். அப்பொழுதுதான் அவரது கோபம் நம்மைவிட்டுத் திரும்பும்.
11
என் மகன்களே, இப்பொழுது நீங்கள் அசட்டையாய் இராதீர்கள். ஏனெனில் அவர் முன்நின்று அவருக்குப் பணிசெய்வதற்கும் அவர் முன்னிலையில் ஊழியம் செய்து தூபங்காட்டுவதற்குமே யெகோவா உங்களைத் தெரிந்துகொண்டிருக்கிறார்” என்றான்.
12
எனவே வேலையைச் செய்யத் தொடங்கிய லேவியர்கள்: கோகாத்தியரிலிருந்து: அமசாயின் மகன் மாகாத், அசரியாவின் மகன் யோயேல்; மெராரியரிலிருந்து: அப்தியின் மகன் கீஷ், எகலேலின் மகன் அசரியா; கெர்சோனியரிலிருந்து: சிம்மாவின் மகன் யோவா, யோவாவின் மகன் ஏதேன்.
13
எலிசாபானின் சந்ததிகளிலிருந்து: சிம்ரி, ஏயேல்; ஆசாப்பின் சந்ததிகளிலிருந்து: சகரியா, மத்தனியா;
14
ஏமானின் சந்ததிகளிலிருந்து: யெகியேல், சிமேயி; எதுத்தூனின் சந்ததிகளிலிருந்து: செமாயா, ஊசியேல்.
15
இந்த லேவியர்கள் தங்கள் சகோதரர்களை ஒன்றுசேர்த்து, அவர்களைச் சுத்திகரித்தபின் யெகோவாவின் வார்த்தையைப் பின்பற்றி அரசன் கட்டளையிட்டபடியே, யெகோவாவின் ஆலயத்தை தூய்மைப்படுத்துவதற்காக உள்ளே சென்றனர்.
16
ஆசாரியர்கள் யெகோவாவின் பரிசுத்த இடத்தை தூய்மைப்படுத்துவதற்காக அதற்குள்ளே சென்றார்கள். அவர்கள் யெகோவாவின் ஆலயத்திற்குள் அசுத்தமாகக் கண்ட யாவற்றையும் யெகோவாவின் ஆலயத்தின் வெளிமுற்றத்திற்குக் கொண்டுவந்தார்கள். அதை லேவியர்கள் எடுத்து கீதரோன் பள்ளத்தாக்கிற்கு சுமந்துகொண்டு போனார்கள்.
17
அவர்கள் தங்கள் சுத்திகரிப்பு வேலையை முதலாம் மாதம், முதலாம் நாளில் ஆரம்பித்து, மாதத்தின் எட்டாம் நாளில் யெகோவாவுக்குமுன் மண்டபத்திற்கு வந்தார்கள். யெகோவாவினுடைய ஆலயத்தை இன்னும் எட்டு நாட்களுக்கு பரிசுத்தப்படுத்தினார்கள். இவ்வாறு அதை முதலாம் மாதம் பதினாறாம் நாளில் செய்துமுடித்தனர்.
18
அதன்பின்பு அவர்கள் எசேக்கியா அரசனிடம் போய், “நாங்கள் யெகோவாவின் ஆலயம் முழுவதையும் தூய்மைப்படுத்திவிட்டோம். தகன பலிபீடம், அதன் பாத்திரங்கள், இறைசமுக அப்பங்களை ஒழுங்குபடுத்தும் மேஜை, அதன் பொருட்கள் ஆகியவற்றைத் தூய்மைப்படுத்திவிட்டோம்.
19
அத்துடன் ஆகாஸ் அரசன் தான் அரசனாயிருந்த காலத்தில் உண்மையற்றவனாய் அவன் அகற்றிப்போட்ட பொருட்களையெல்லாம் கொண்டுவந்து, பரிசுத்தப்படுத்தி இருக்கிறோம். அவை இப்பொழுது யெகோவாவின் பீடத்தின்முன் இருக்கின்றன” என்று அறிவித்தார்கள்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options