Skip to content
1 இராஜாக்கள் 9:1-14

1 இராஜாக்கள் 9:1-14

1
சாலொமோன் யெகோவாவின் ஆலயத்தையும், அரச அரண்மனையையும் மற்றும் அவன் செய்யவேண்டுமென்று மனதில் விரும்பிய எல்லாவற்றையும் செய்துமுடித்தான்.
2
அப்பொழுது, முன்பு கிபியோனில் தோன்றியதுபோல யெகோவா இரண்டாம் முறையும் சாலொமோனுக்குத் தோன்றினார்.
3
யெகோவா அவனிடம் சொன்னதாவது: “நீ எனக்கு முன்பாகச் செய்த மன்றாட்டையும், விண்ணப்பத்தையும் கேட்டேன். என் பெயர் என்றைக்கும் நிலைக்கும்படியாக நீ கட்டிய இந்த ஆலயத்தை நான் பரிசுத்தப்படுத்தியிருக்கிறேன். என் கண்களும், என் இருதயமும் எப்பொழுதும் அங்கேயிருக்கும்.
4
“நீயோ உனது தகப்பன் தாவீது செய்ததுபோல் உத்தமத்தோடும், நேர்மையோடும் எனக்கு முன்பாக நடந்து, நான் கட்டளையிட்டவற்றை எல்லாம் செய்து, எனது விதிமுறைகளையும் சட்டங்களையும் கைக்கொள்வாயானால்,
5
நான் உனது தகப்பன் தாவீதிடம், ‘இஸ்ரயேலின் அரியணையில் உட்கார உனது மகன்களில் ஒருவனாவது ஒருபோதும் இல்லாமல் போகமாட்டான்,’ என்று வாக்குப்பண்ணியபடியே, இஸ்ரயேலில் உனது அரச அரியணையை என்றைக்கும் நிலைநிறுத்துவேன்.
6
“ஆனால் நீங்களோ உங்கள் சந்ததிகளோ, என்னைவிட்டுத் திரும்பி நான் உங்களுக்குக் கொடுத்த கட்டளைகளையும், விதிமுறைகளையும் கைக்கொள்ளாமல், வேறே தெய்வங்களுக்குப் பணிசெய்து அவைகளை வழிபடும்படி விலகிப்போனால்,
7
நான் இஸ்ரயேலருக்குக் கொடுத்த நாட்டிலிருந்து அவர்களை அகற்றிவிடுவேன். நான் என் பெயருக்கென்று பரிசுத்தமாக்கிய இந்த ஆலயத்தையும் புறக்கணித்து விடுவேன். அப்பொழுது இஸ்ரயேலர் எல்லா மக்கள் கூட்டங்கள் மத்தியிலும் ஒரு பழிச்சொல்லாகவும், கேலிப்பொருளாகவும் இருப்பார்கள்.
8
இந்த ஆலயம் அழிவின் குவியலாக மாறும். இதைக் கடந்து போகிறவர்கள் இதைக்கண்டு திகைத்து, கேலிபண்ணி, ‘இந்த நாட்டுக்கும் இந்த ஆலயத்துக்கும் யெகோவா ஏன் இப்படி செய்தார்?’ என்பார்கள்.
9
அப்பொழுது மக்கள், ‘எகிப்திலிருந்து அவர்களுடைய முற்பிதாக்களை மீட்டுக் கொண்டுவந்த அவர்களுடைய இறைவனாகிய யெகோவாவைக் கைவிட்டார்கள். அவர்கள் வேறே தெய்வங்களைப் பின்பற்றி, அவற்றை வழிபட்டு, அவற்றிற்குப் பணிசெய்தார்கள். இதனால்தான் யெகோவா அவர்கள்மீது இந்த பேரழிவைக் கொண்டுவந்தார்’ என்பார்கள்.”
10
சாலொமோன் யெகோவாவின் ஆலயம், அரச அரண்மனை ஆகிய இரண்டையும் கட்டிமுடிக்க இருபது வருடம் ஆனபின்பு,
11
அவன் விரும்பிய அளவு கேதுரு மரங்களையும், தேவதாரு மரங்களையும், தங்கத்தையும் தீருவின் அரசனாகிய ஈராம் கொடுத்தபடியினால், சாலொமோன் கலிலேயா நாட்டில் இருபது பட்டணங்களை ஈராமுக்குக் கொடுத்தான்.
12
ஆனால் சாலொமோன் கொடுத்த பட்டணங்களைப் பார்ப்பதற்கு ஈராம் தீருவிலிருந்து போனபோது, அவற்றில் அவன் மகிழ்ச்சியடையவில்லை.
13
அதனால் அவன் சாலொமோனைப் பார்த்து, “என் சகோதரனே இவை என்ன? நீ தந்திருக்கும் பட்டணங்கள் எப்படிப்பட்டவை?” என்று கேட்டான். அதை அவன், “காபூல் நாடு” என அழைத்தான். அந்தப் பட்டணங்கள் இன்றுவரை அந்தப் பெயராலேயே அழைக்கப்படுகின்றன.
14
ஈராம் சாலொமோன் அரசனுக்கு நூற்றிருபது தாலந்து நிறையுள்ள தங்கத்தை அனுப்பியிருந்தான்.

வேதாகம உரை: Biblica® Open Indian Tamil Contemporary Version™, © 2005, 2020, 2022 Biblica, Inc. · CC BY-SA 4.0“Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc., used with permission.

Settings

Reading style

Typeface

Font size 19px

Reading width 75 chars

Options