உள்ளடக்கத்திற்குச் செல்க

The Law of Moses பற்றிய பைபிள் வசனங்கள்

65 வசனங்கள் · 73 அம்சங்கள்

முக்கிய பைபிள் வசனங்கள்

புத்தகத்தின்படி வடிகட்டு
  1. அவன் தன் தகப்பனையும், தாயையும்பற்றி, ‘நான் அவர்களைக் கவனத்தில் கொள்ளமாட்டேன்’ என்றான். அவன் தன் சகோதரர்களை அங்கீகரிக்கவில்லை. தன் பிள்ளைகளையும் ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் அவன் உம்முடைய வார்த்தையைக் கண்காணித்து, உம்முடைய உடன்படிக்கையைக் காவல்செய்தான்.

  2. அவன் உமது ஒழுங்குவிதிகளை யாக்கோபுக்கும், உமது சட்டத்தை இஸ்ரயேலுக்கும் போதிக்கிறான். உமது முன்னிலையில் தூபங்காட்டுகிறான். உமது பலிபீடத்தில் முழுமையான தகன காணிக்கையைச் செலுத்துகிறான்.

  3. அரசன் சட்டத்தின் வார்த்தைகளைக் கேட்டபோது, தனது ஆடைகளைக் கிழித்தான்.

  4. பின்பு அரசன் இல்க்கியாவுக்கும், சாப்பானின் மகன் அகீக்காமுக்கும், மீகாவின் மகன் அப்தோனுக்கும், செயலாளன் சாப்பானுக்கும், அரச ஏவலாளனான அசாயாவுக்கும் கட்டளையிட்டதாவது:

  5. “நீங்கள் போய் கண்டெடுக்கப்பட்ட இந்த புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளவற்றைப் பற்றி, எனக்காகவும், இஸ்ரயேலிலும், யூதாவிலும் இருக்கிறவர்களுக்காகவும் யெகோவாவிடம் கேளுங்கள். நமது முற்பிதாக்கள் யெகோவாவின் வார்த்தையைக் கைக்கொள்ளாததினால் தானே நம்மேல் ஊற்றப்பட்ட யெகோவாவின் கோபம் பெரிதாயிருக்கிறது. அவர்கள் இந்தப் புத்தகத்தில் எழுதப்பட்டுள்ள எல்லாவற்றின்படியும் செயல்படவில்லையே” என்றான்.

  6. அதே மாதத்தின் இரண்டாம் நாளில் எல்லா குடும்பங்களிலுமுள்ள தலைவர்களும் ஆசாரியருடனும், லேவியருடனும் ஒன்றுசேர்ந்து சட்டத்தின் வார்த்தைகளைக் கவனமாய் கேட்கும்படி, சட்ட ஆசிரியர் எஸ்றாவைச் சுற்றி ஒன்றுகூடினார்கள்.

  7. ஏழாம் மாதத்தின் பண்டிகையைக் கொண்டாடும்போது, இஸ்ரயேலர் யாவரும் கூடாரங்களிலேயே வாழவேண்டும் என்று மோசேயைக் கொண்டு யெகோவா கட்டளையிட்டிருந்ததாக சட்டத்தில் எழுதியிருக்கக் கண்டார்கள்.

  8. அத்துடன் எழுதியிருக்கிறபடி மக்கள் மலைநாட்டிற்குப் போய் ஒலிவமரம், காட்டொலிவமரம், மிருதுச்செடி, பேரீட்சைமரம், அத்திமரம் ஆகியவற்றின் மரக்கொப்புகளை எடுக்கவேண்டும் எனவும், அவற்றினால் கூடாரங்களை அமைக்கும்படி எல்லா பட்டணங்களிலும், எருசலேமிலும் பகிரங்கமாக அறிவிக்கவேண்டும் எனவும் அறிந்துகொண்டார்கள்.

  9. மக்கள் வெளியே போய், மரக்கொப்புகளைக் கொண்டுவந்து அவற்றினால் தங்களுக்கென கூடாரங்களை அமைத்தார்கள்; அவர்கள் வீட்டுக் கூரைகளின்மேலும், வீட்டு முற்றங்களிலும், இறைவனுடைய ஆலய முற்றங்களிலும், தண்ணீர்வாசல் அருகேயுள்ள சதுக்கத்திலும், எப்பிராயீம் வாசல் அருகேயுள்ள சதுக்கத்திலும் தங்களுக்கென கூடாரங்களை அமைத்தார்கள்.

  10. நாடுகடத்தப்பட்டுத் திரும்பி வந்த மக்கள் கூட்டம் முழுவதும் கூடாரங்களைக் கட்டி அங்கே வாழ்ந்தார்கள். நூனின் மகன் யோசுவாவின் நாட்களிலிருந்து அன்றுவரை இஸ்ரயேல் மக்கள் இவ்விதமாகப் பண்டிகையைக் கொண்டாடவில்லை. இப்போதோ அவர்களுடைய மகிழ்ச்சி மிக அதிகமாயிருந்தது.

  11. முதல் நாளிலிருந்து கடைசி நாள்வரை ஒவ்வொரு நாளும் இறைவனின் சட்டப் புத்தகத்திலிருந்து எஸ்றா வாசித்தான். ஏழுநாட்களுக்குக் கூடாரப்பண்டிகையைக் கொண்டாடினார்கள். எட்டாம் நாளில் சட்ட ஒழுங்குவிதியின்படி எல்லோரும் சபைகூடினார்கள்.

  12. எனவே அவர்கள் இரகசியமாக சிலரைத் தூண்டிவிட்டு, “இவன் மோசேக்கும், இறைவனுக்கும் விரோதமாக அவர்களை நிந்தித்துப் பேசியதை நாங்கள் கேட்டோம்” என்று சொல்லச் சொன்னார்கள்.

  13. இப்படி அவர்கள் மக்களையும், யூதரின் தலைவர்களையும், மோசேயின் சட்ட ஆசிரியர்களையும், ஸ்தேவானுக்கு எதிராகக் தூண்டிவிட்டார்கள். அதற்குப் பின்பு அவர்கள் திடீரென வந்து, ஸ்தேவானைப் பிடித்து ஆலோசனைச் சங்கத்திற்கு முன்பாக அவனைக் கொண்டுவந்தார்கள்.

  14. அவர்கள் பொய்ச்சாட்சிகளை நிறுத்தினார்கள். அவர்கள், “இவன், இந்தப் பரிசுத்த இடத்திற்கும், மோசேயின் சட்டத்திற்கும் விரோதமாய்ப் பேசுகிறதை நிறுத்துகிறதில்லை.

  15. நாசரேத்தைச் சேர்ந்த இயேசு இந்த இடத்தை அழிப்பார் என்றும், மோசே நமக்குக் கையளித்த நடைமுறைகளை மாற்றுவார் என்றும் இவன் சொன்னதை நாங்கள் கேட்டோம்” என்றார்கள்.

  16. ஆனால் இஸ்ரயேலரோ, நீதியின் சட்டத்தைக் கடைப்பிடிக்க முயற்சித்தும் நீதியைப் பெறவில்லை.

  17. அவர்கள் ஏன் அதைப் பெறவில்லை? அவர்கள் அதை விசுவாசத்தின்மூலமாய் அல்ல, தங்கள் செயல்களின் மூலம் கடைப்பிடிக்கவே முயற்சித்தார்கள். அப்படி அவர்கள், தடுக்கி விழப்பண்ணும் கல்லில் தடுக்கி விழுந்தார்கள்.

  18. இதைப்பற்றி எழுதப்பட்டுள்ளபடியே நடந்தது: “இதோ, நான் மனிதர்களை இடறச்செய்யும் கல்லையும், அவர்களை வீழ்த்தும் கற்பாறையையும் சீயோனிலே வைக்கிறேன்; ஆனால் அவரில் விசுவாசம் கொண்டிருக்கிற எவரும் ஒருபோதும் வெட்கப்பட்டுப் போகமாட்டார்கள்.”

  19. முதலாம் உடன்படிக்கைக்கென வழிபாட்டு முறைமைகளும் இவ்வுலகிற்குரிய ஒரு பரிசுத்த இடமும் இருந்தன.

  20. அதற்குள் ஒரு கூடாரம் அமைக்கப்பட்டிருந்தது. அதன் முன்பகுதி பரிசுத்த இடம் என்று அழைக்கப்பட்டது. அதினுள்ளேயே குத்துவிளக்கும், மேஜையும், அதன்மீது படைக்கப்பட்ட அப்பங்களும் இருந்தன.

  21. அந்த இரண்டாவது திரைக்குப் பின்னால் மகா பரிசுத்த இடம் என்று அழைக்கப்பட்ட ஒரு இடம் இருந்தது.

  22. அங்கே தங்கத்தால் செய்யப்பட்ட தூபபீடமும், தங்கத்தால் மூடப்பட்ட உடன்படிக்கைப் பெட்டகமும் இருந்தன; இந்தப் பெட்டகத்தினுள்ளே, மன்னா உணவு வைக்கப்பட்ட தங்கச் சாடியும், ஆரோனின் தளிர்த்த கோலும், உடன்படிக்கையின் கற்பலகைகளும் வைக்கப்பட்டிருந்தன.

  23. அந்த பெட்டகத்தின் மேலாக மகிமையின் கேரூபீன்கள் கிருபாசனத்தை நிழலிட்டுக் கொண்டிருந்தன. ஆனால் இவை எல்லாவற்றையும், விரிவாய் சொல்ல இப்பொழுது இயலாது.

  24. இவ்விதமாக அங்குள்ள பொருட்கள் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தபோது, ஆசாரியர்கள் தங்களுடைய ஊழியத்தை செய்வதற்காக, அந்த வெளியறைக்குள் வழக்கமாக நுழைவார்கள்.

  25. ஆனால் பிரதான ஆசாரியன் மட்டுமே, அதுவும் வருடத்திற்கு ஒருமுறை மட்டும், இரத்தமில்லாமல் அல்ல; இரத்தத்துடனேயே மகா பரிசுத்த இடமான உள்ளறைக்குள் சென்று தனக்காகவும், மக்கள் அறியாமல் செய்த பாவங்களுக்காகவும் பலியைச் செலுத்துவான்.