Skip to content

Jubilee பற்றிய பைபிள் வசனங்கள்

56 வசனங்கள் · 3 அம்சங்கள்

முக்கிய பைபிள் வசனங்கள்

  1. “ ‘ஏழு ஓய்வு வருடங்களை எண்ணுங்கள். ஏழுமுறை ஏழு வருடங்களாக நாற்பத்தொன்பது வருடங்கள் வரும்வரை ஏழு ஓய்வு வருடங்களை எண்ணுங்கள்.

  2. பின்பு ஏழாம் மாதம் பத்தாம் தேதியிலே, நாடெங்கிலும் எக்காளம் ஊதுங்கள். பாவநிவிர்த்தி நாளிலே, எக்காளத்தை நாடெங்கும் ஊதுங்கள்.

  3. ஐம்பதாம் வருடத்தை அர்ப்பணம் செய்து, நாட்டு மக்கள் அனைவருக்கும், விடுதலையைப் பிரசித்தப்படுத்துங்கள். அது உங்களுக்கான யூபிலி வருடமாயிருக்கும். உங்களில் ஒவ்வொருவனும் தன்தன் குடும்பச் சொத்து உரிமைக்கும், தன்தன் கோத்திரத்திற்கும் திரும்பிச் செல்லவேண்டும்.

  4. ஐம்பதாம் வருடம் உங்களுக்கு ஒரு யூபிலி வருடம். நீங்கள் விதைக்கவோ, தானாய் விளைந்த தானியத்தையாகிலும் திராட்சைப் பழங்களையாகிலும் அறுவடை செய்யவோ வேண்டாம்.

  5. ஏனெனில் அது யூபிலி வருடம்; அது உங்களுக்குப் பரிசுத்தமாயிருக்க வேண்டும். அந்த வருடம் வயல்களில் தானாய் விளைந்தவற்றை மட்டுமே சாப்பிடுங்கள்.

  6. “ ‘இந்த யூபிலி வருடத்தில் நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் முற்பிதாக்களின் இடங்களுக்குத் திரும்பிச் செல்லவேண்டும்.

  7. “ ‘நீங்கள் உங்கள் நாட்டவனுக்கு ஒரு நிலத்தை விற்றாலோ அல்லது அவனிடமிருந்து வாங்கினாலோ ஒருவருக்கொருவர் அநியாயம் செய்யக்கூடாது.

  8. நீங்கள் உங்கள் நாட்டினரிடமிருந்து நிலத்தை வாங்கும்போது, சென்ற யூபிலி வருடத்திலிருந்து கழிந்த வருடங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் வாங்கவேண்டும். அவன் உங்களுக்கு விற்கும்போது விளைச்சலை அறுவடை செய்யவேண்டிய வருடங்களின் எண்ணிக்கையின் அடிப்படையிலேயே அதை விற்கவேண்டும்.

  9. அறுவடை வருடங்கள் அதிகமாக இருந்தால், நீங்கள் விலையையும் அதிகரிக்கவேண்டும். வருடங்கள் குறைவாக இருந்தால் விலையையும் குறைக்கவேண்டும். ஏனெனில், அவன் உங்களுக்கு உண்மையாக விற்பது அறுவடையின் எண்ணிக்கையின் மதிப்பையே.

  10. ஆகவே நீங்கள் ஒருவருக்கொருவர் அநியாயம் செய்யாமல் உங்கள் இறைவனுக்குப் பயந்து நடவுங்கள். நானே உங்கள் இறைவனாகிய யெகோவா.

  11. “ ‘நீங்கள் என்னுடைய விதிமுறைகளைப் பின்பற்றி, என் சட்டங்களுக்குக் கீழ்ப்படிய கவனமாயிருங்கள். அப்பொழுது நீங்கள் உங்கள் நாட்டிலே பாதுகாப்புடன் வாழ்வீர்கள்.

  12. அப்பொழுது நாடு தன் பலனைக் கொடுக்கும். நீங்கள் திருப்தியாகச் சாப்பிட்டு, அதில் பாதுகாப்புடன் வாழ்வீர்கள்.

  13. நீங்கள் ஏழாம் வருடத்தில் விதையாமலும், அறுவடை செய்யாமலும் இருந்து, எதைச் சாப்பிடுவோம் என்று கேட்பீர்களானால்,

  14. ஆறாம் வருடத்தில் நான் உங்களுக்கு அதிக விளைச்சலுள்ள ஆசீர்வாதத்தை அனுப்புவேன். அவ்வருடத்தில் மூன்று வருடங்களுக்கு போதுமான பலனை அந்நிலம் தரும்.

  15. நீங்கள் எட்டாம் வருடத்தில் விதைக்கும் காலத்தில் பழைய விளைச்சலிலிருந்து சாப்பிடுவீர்கள். ஒன்பதாம் வருடத்தில் அறுவடை செய்யும்வரை நீங்கள் அதில் தொடர்ந்து சாப்பிடுவீர்கள்.

  16. “ ‘நிலம் நிரந்தரமாய் விற்கப்படக்கூடாது. நிலம் என்னுடையது. நீங்களோ, பிறநாட்டினரும் குத்தகைக்காரருமாக இருக்கிறீர்கள்.

  17. நீங்கள் சொத்துரிமையாகக் கொண்டிருக்கும் நாடெங்கும் அந்த நிலங்களை மீட்டுக்கொள்வதற்கான முன்னேற்பாடுகளைச் செய்யவேண்டும்.

  18. “ ‘உன் நாட்டினருக்குள் ஒருவன் ஏழையாகி தன் சொத்து நிலத்தில் கொஞ்சத்தை விற்றால், அவனுடைய நெருங்கிய உறவினன் முன்வந்து, தன் நாட்டினன் விற்றுப்போட்டதை மீட்டுக்கொள்ள வேண்டும்.

  19. ஆனாலும், ஒருவனுக்கு அவ்வாறு மீட்கக்கூடிய நெருங்கிய உறவினன் இல்லாமல் இருந்து, அவன் தானே செல்வந்தனாகி, அதை மீட்கத்தக்க வசதியைப் பெற்றிருந்தால்,

  20. அவன் விற்றதிலிருந்து கழிந்த வருடங்களுக்கான மதிப்பை நிர்ணயித்து, தான் ஏற்கெனவே விற்ற விலையிலிருந்து அதைக் கழித்து, மிகுதியை தன்னிடம் வாங்கியவனிடம் திருப்பிக் கொடுக்கவேண்டும். அப்பொழுது அவன் தன் சொத்து நிலத்திற்குத் திரும்பிப்போகலாம்.

  21. ஆனால் தான் விற்றதைத் திருப்பிவாங்க வசதி இல்லாதுபோனால், யூபிலி வருடம் மட்டும் அது வாங்கியவனுக்கு உரிமையாயிருக்கும். ஆனால், யூபிலி வருடத்தில் அது விற்றவனுக்குத் திருப்பிக்கொடுக்கப்பட வேண்டும்.

  22. “ ‘ஒருவன் மதில் சூழ்ந்த பட்டணத்திலுள்ள ஒரு வீட்டை விற்றால், அதை விற்றபின் ஒரு வருடம் நிறைவடைவதற்குள் அதை மீட்க அவனுக்கு உரிமை உண்டு. அந்தக் காலத்திற்குள் அவன் அதை மீட்கலாம்.

  23. ஒரு வருடம் நிறைவடையுமுன் அவன் அதைத் திருப்பி மீட்காவிட்டால், மதில் சூழ்ந்த பட்டணத்தில் இருக்கும் அவ்வீடு வாங்கியவனுக்கும், அவன் பின்வரும் சந்ததிக்கும் நிரந்தர உரிமையாகும். அது யூபிலி வருடத்தில் திருப்பிக்கொடுக்கப்பட வேண்டியதில்லை.

  24. ஆனால் மதில் சூழப்படாத கிராமப் பகுதிகளிலுள்ள வீடுகள், நாட்டின் நிலங்களைப்போல் கருதப்படும். அவை மீட்கப்படலாம். யூபிலி வருடத்தில் அவை திருப்பி கொடுக்கப்படவேண்டும்.

  25. “ ‘ஆனால் லேவியர்களோ, லேவியருடைய நகரங்களிலிருக்கிற தங்களுடைய வீடுகளை மீட்க எப்பொழுதும் உரிமையுடையவர்களாய் இருக்கிறார்கள். அவை அவர்களுடைய உரிமைச்சொத்துக்கள்.