உள்ளடக்கத்திற்குச் செல்க

Dedication பற்றிய பைபிள் வசனங்கள்: Temple of Solomon

63 வசனங்கள் · 28 அம்சங்கள்

Temple of Solomon பற்றிய வசனங்கள்

  1. சாலொமோன் அரசன் தாவீதின் பட்டணமான சீயோனிலிருந்து யெகோவாவின் உடன்படிக்கைப் பெட்டியைக் கொண்டுவருவதற்காக, இஸ்ரயேலின் முதியவர்களையும், எல்லா கோத்திரத் தலைவர்களையும், இஸ்ரயேல் குடும்பத் தலைவர்களையும் எருசலேமில் ஒன்றுகூடும்படி தன்னிடம் வரவழைத்தான்.

  2. ஏழாம் மாதமாகிய ஏத்தானீம் மாதம் பண்டிகைக் காலத்தில் இஸ்ரயேல் மனிதர் யாவரும் சாலொமோன் அரசனிடம் ஒன்றுகூடி வந்தார்கள்.

  3. இஸ்ரயேலின் முதியவர்கள் எல்லோரும் வந்துசேர்ந்ததும் ஆசாரியர்கள் உடன்படிக்கைப் பெட்டியைத் தூக்கினார்கள்.

  4. அவர்கள் யெகோவாவின் பெட்டியையும், சபைக் கூடாரத்தையும், அதனுள்ளிருந்த பரிசுத்த பொருட்களையும் தூக்கிக்கொண்டு வந்தனர். ஆசாரியரும் லேவியரும் அதைத் தூக்கிக்கொண்டு சென்றார்கள்.

  5. அரசன் சாலொமோனும் பெட்டிக்கு முன்னால் அவனோடே கூடிநின்ற இஸ்ரயேலின் முழுசபையும் உடன்படிக்கைப் பெட்டியின்முன் வந்து, அநேக செம்மறியாடுகளையும், ஆடுமாடுகளையும் பலியிட்டனர். அவற்றின் எண்ணிக்கையை கணக்கிடவோ குறித்துவைக்கவோ அவர்களால் முடியவில்லை.

  6. அதன்பின் ஆசாரியர்கள் யெகோவாவின் உடன்படிக்கைப் பெட்டியை எடுத்து, ஆலயத்தின் உட்புற பரிசுத்த இடமான மகா பரிசுத்த இடத்துக்குக் கொண்டுபோய், அங்கிருந்த கேருபீன்களின் செட்டைகளின்கீழ் வைத்தார்கள்.

  7. விரிக்கப்பட்ட கேருபீன்களின் சிறகுகள் உடன்படிக்கைப் பெட்டிக்கும் அதைத் தூக்கும் கம்புகளுக்கும் மேலாக நிழலிட்டுக் கொண்டிருந்தன.

  8. இந்தக் கம்புகள் மிகவும் நீளமாயிருந்தன. அவற்றின் நுனிகள் பரிசுத்த இடத்திற்கு முன்பாக மகா பரிசுத்த இடத்திலிருந்து பார்க்கக்கூடியதாயிருந்து. ஆனால் பரிசுத்த இடத்திற்கு வெளியிலிருந்து பார்க்கும்போது அவை தெரியப்படவில்லை. இன்றுவரை அவ்வாறே இருக்கின்றன.

  9. அந்தப் பெட்டிக்குள் ஓரேப் மலையில் மோசே வைத்த இரண்டு கற்பலகைகளைத்தவிர வேறெதுவும் இருக்கவில்லை. அங்குதான் இஸ்ரயேலர் எகிப்தைவிட்டு வந்தபின்பு யெகோவா அவர்களுடன் ஒரு உடன்படிக்கை செய்திருந்தார்.

  10. ஆசாரியர்கள் பரிசுத்த இடத்தைவிட்டு வெளியே வந்தபோது, யெகோவாவின் ஆலயத்தை மேகம் நிரப்பியது.

  11. அந்த மேகத்தின் நிமித்தம் ஆசாரியர்கள் தாங்கள் செய்யவேண்டிய பணிகளைச் செய்யமுடியாமல் இருந்தார்கள். ஏனெனில் யெகோவாவின் மகிமை அவருடைய ஆலயத்தை நிரப்பியது.

  12. அப்பொழுது சாலொமோன், “நான் கார்மேகத்தில் தங்கியிருப்பேன் என யெகோவா சொன்னார்;

  13. நானோ உமக்காக நீர் என்றென்றும் குடியிருக்க ஒரு மேன்மையான ஆலயத்தைக் கட்டியிருக்கிறேன் என்றும்” சொன்னான்.

  14. இஸ்ரயேல் மக்கள் நின்றுகொண்டிருக்கையில், அரசன் அவர்கள் பக்கம் திரும்பிப்பார்த்து அவர்களை ஆசீர்வதித்தான்.

  15. அவன் சொன்னதாவது: “இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவுக்குத் துதி உண்டாகட்டும். அவர் எனது தகப்பன் தாவீதுக்கு தமது சொந்த வாயினால் வாக்குப்பண்ணியதை, தமது சொந்த கரங்களினால் நிறைவேற்றியிருக்கிறார்.

  16. அவர், ‘எகிப்திலிருந்து என் மக்களாகிய இஸ்ரயேலரை நான் கொண்டுவந்த நாளிலிருந்து, என் பெயர் விளங்கும்படி ஒரு ஆலயத்தைக் கட்டுவதற்கு, இஸ்ரயேலின் எந்தக் கோத்திரத்திலாகிலும் ஒரு பட்டணத்தை நான் தெரிந்துகொள்ளவில்லை. ஆனால் எனது மக்களாகிய இஸ்ரயேலை ஆள்வதற்கு தாவீதைத் தெரிந்துகொண்டேன்’ என்றார்.

  17. “இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவின் பெயருக்கு ஒரு ஆலயத்தைக் கட்டவேண்டும் என்ற விருப்பம் எனது தகப்பன் தாவீதின் இருதயத்தில் இருந்தது.

  18. ஆனால் யெகோவா என் தகப்பனாகிய தாவீதைப் பார்த்து, ‘என் பெயருக்காக ஒரு ஆலயத்தை நீ கட்ட விரும்பினாய். இவ்வாறு நீ நினைத்தது நல்லதுதான்.

  19. அப்படியிருந்தும் ஆலயத்தைக் கட்டவேண்டியது நீயல்ல. உனக்குப் பிறக்கும் உன் மகனே என்னுடைய பெயருக்கென்று ஆலயத்தைக் கட்டுவான்’ என்று கூறினார்.

  20. “இப்பொழுது யெகோவா தாம் கூறிய வாக்கை நிறைவேற்றினார். யெகோவா வாக்குப்பண்ணியபடியே என் தகப்பன் தாவீதுக்குப் பின் நான் இஸ்ரயேலின் அரியணையில் அமர்ந்திருக்கிறேன். நான் இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவின் பெயருக்கு இந்த ஆலயத்தையும் கட்டியிருக்கிறேன்.

  21. எகிப்திலிருந்து எங்கள் முற்பிதாக்களை யெகோவா கொண்டுவந்த காலத்தில், அவர்களுடன் அவர் செய்த யெகோவாவினுடைய உடன்படிக்கையை வைத்திருக்கும் பெட்டியை வைப்பதற்காக, ஆலயத்தில் ஒரு இடத்தையும் கொடுத்திருக்கிறேன்.”

  22. அதன்பின் சாலொமோன், இஸ்ரயேலின் சபையார் எல்லோருக்கும் முன்பாக, யெகோவாவின் பலிபீடத்தின் முன்நின்று வானத்தை நோக்கித் தன் கைகளை விரித்தான்.

  23. அவன் சொன்னதாவது: “இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவே, மேலே வானத்திலும், கீழே பூமியிலும் உம்மைப்போல் இறைவன் இல்லை. உமது வழியில் முழுமனதோடு தொடர்ந்து நடக்கிற உமது அடியவர்களுடன் உமது அன்பின் உடன்படிக்கையின்படி செயலாற்றுகிறவர் நீரே.

  24. உமது அடியானாகிய என் தகப்பன் தாவீதுக்கு நீர் கொடுத்த வாக்கை நிறைவேற்றினீர். உமது வாயினால் நீர் வாக்குப்பண்ணியதை உமது கையினால் இன்று இருப்பதுபோல் நிறைவேற்றினீர்.

  25. “இப்பொழுது இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவாவே! உமது அடியானாகிய என் தகப்பன் தாவீதுக்கு நீர் கொடுத்த வாக்குத்தத்தங்களைக் காத்துக்கொள்ளும். நீர் அவரிடம், ‘நீ செய்ததுபோலவே உன் மகன்களும் எனக்கு முன்பாக உண்மையாக நடக்கும்படி தாங்கள் செய்வதெல்லாவற்றிலும் கவனமாயிருந்தால், இஸ்ரயேலின் அரியணையில் எனக்கு முன்பாக இருப்பதற்கு உனக்கு ஒரு மகன் இல்லாமல் போவதில்லை’ என்று சொன்னீரே.