உள்ளடக்கத்திற்குச் செல்க

Courts of Justice பற்றிய பைபிள் வசனங்கள்

68 வசனங்கள் · 64 அம்சங்கள்

முக்கிய பைபிள் வசனங்கள்

புத்தகத்தின்படி வடிகட்டு
  1. ஏனெனில் சிலகாலத்திற்கு முன்பு, தெயுதாஸ் என்பவன் முன்வந்து, தன்னை ஒரு பெரிய ஆளாக எல்லோருக்கும் காண்பித்தான், கிட்டத்தட்ட நானூறுபேர் அவனுடன் சேர்ந்துகொண்டார்கள். ஆனால் அவன் கொல்லப்பட்டான்; அவனைப் பின்பற்றிய அனைவரும் சிதறிப்போனார்கள். அந்தக் கூட்டத்தினர் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டனர்.

  2. அவனுக்குப்பின்பு, குடிமதிப்பு எடுக்கப்பட்ட காலத்தில் கலிலேயனான யூதாஸ் என்பவன் முன்வந்து, அவனும் ஒரு மக்கள் குழுவை கலகத்திற்கு வழிநடத்தினான். ஆனால் அவனும் கொல்லப்பட்டான்; அவனைப் பின்பற்றியவர்களும் சிதறடிக்கப்பட்டார்கள்.

  3. எனவே, இப்பொழுது இந்த விஷயத்திலும்கூட, நான் கூறும் ஆலோசனை இதுவே: இவர்களை விட்டுவிடுங்கள்! இவர்கள் போகட்டும்! ஏனெனில் இந்தத் திட்டமும், இந்த செயலும் மனிதரிடமிருந்து வந்ததானால், இது இல்லாமற்போகும்.

  4. ஆனால் இது இறைவனிடமிருந்து வந்ததானால், உங்களால் இவர்களை நிறுத்தமுடியாது; அப்படி முயன்றால், நீங்கள் இறைவனுக்கு விரோதமாக யுத்தம் செய்கிறவர்களாய் இருப்பீர்களே” என்றான்.

  5. அங்கிருந்தவர்கள் கமாலியேல் சொன்னதற்கு இணங்கினார்கள். அப்பொழுது அவர்கள் அப்போஸ்தலரை உள்ளே கூப்பிட்டு, அவர்களைச் சவுக்கினால் அடித்தார்கள். பின்பு அவர்கள், இயேசுவின் பெயரினால் பேசக்கூடாது என்று கட்டளையிட்டு, அவர்களைப் போகவிட்டார்கள்.

  6. அந்த அடிமைப் பெண்ணுடைய எஜமானர், பணம் சம்பாதிக்கும் தங்கள் எதிர்பார்ப்பு போய்விட்டது என்று அறிந்தபோது, அவர்கள் பவுலையும் சீலாவையும் பிடித்து, சந்தைகூடும் இடத்தில் அதிகாரிகளிடம் இழுத்துக்கொண்டு வந்தார்கள்.

  7. அவர்கள் இவர்களை தலைமை நீதிபதிகளுக்கு முன்பாகக் கொண்டுவந்து, “இவர்கள் யூதர்கள், இந்த மனிதர் நமது பட்டணத்தில் குழப்பம் உண்டாக்குகிறார்கள்,

  8. ரோமராகிய நாம் ஏற்றுக்கொள்ளவோ, நடைமுறைப்படுத்தவோ முடியாத, சட்டத்திற்கு முரணான முறைமைகளை இவர்கள் போதிக்கிறார்கள்” என்றார்கள்.

  9. அவர்கள் அவனைச் சவுக்கால் அடிப்பதற்காக வாரினால் இழுத்துக் கட்டியபோது, பவுல் அங்கு நின்ற நூற்றுக்குத் தலைவனைப் பார்த்து, “குற்றவாளியாகக் காணப்படாத ரோம குடிமகன் ஒருவனை சவுக்கால் அடிப்பது சட்டபூர்வமானதா?” என்று கேட்டான்.

  10. இதைக் கேட்ட நூற்றுக்குத் தலைவன், படைத்தளபதியிடம் சென்று இதை அறிவித்தான். அவன் அந்தத் தலைவனிடம், “நீர் என்ன செய்யப்போகிறீர்? இவன் ஒரு ரோம குடிமகன்” என்றான்.

  11. அப்பொழுது அந்த படைத்தளபதி பவுலிடம் போய், “நீ ஒரு ரோம குடிமகனா? அதை எனக்குச் சொல்” என்றான் அதற்குப் பவுல். “ஆம், நான் ஒரு ரோம குடிமகன்தான்” என்றான்.

  12. அப்பொழுது அந்த படைத்தளபதி பவுலிடம், “நான் பெருந்தொகைப் பணத்தைச் செலுத்தியே என் குடியுரிமையைப் பெற்றுக்கொண்டேன்” என்றான். அதற்கு பவுல், “நானோ இந்தக் குடியுரிமை உடையவனாகவே பிறந்தேன்” என்றான்.

  13. பவுலை விசாரிக்க இருந்தவர்கள், உடனே அவனைவிட்டு விலகிச்சென்றார்கள். தான், ஒரு ரோம குடிமகனான பவுலை சங்கிலிகளால் கட்டுவித்ததை உணர்ந்தபோது, அந்த படைத்தளபதியும் பயமடைந்தான்.

  14. அரசாங்கத்தின் அதிகாரத்திற்கு ஒவ்வொருவரும் அடங்கி நடவுங்கள். ஏனெனில் இறைவன் அனுமதிக்காமல் எந்த அதிகாரமும் இல்லை. இப்பொழுது ஏற்படுத்தப்பட்டிருக்கிற அதிகாரங்கள் இறைவனாலேயே நிலைநிறுத்தப்பட்டு இருக்கின்றன.

  15. ஆகையால் அதிகாரத்தை எதிர்த்துக் கலகம் விளைவிக்கிறவன், இறைவன் நியமித்ததையே எதிர்த்துக் கலகம் விளைவிக்கிறான். அவ்விதம் எதிர்த்து நிற்கிறவர்கள் தங்கள் மேலேயே தண்டனையை விளைவித்துக்கொள்கிறார்கள்.

  16. ஏனெனில், சரியானதைச் செய்கிறவர்கள் ஆளுகை செய்கிறவர்களைப் பார்த்து பயப்பட வேண்டியதில்லை. தீமை செய்கிறவர்களே பயப்படவேண்டும். அதிகாரத்தில் இருக்கிறவர்களுக்கு நீங்கள் பயப்படாமல் இருக்க விரும்புகிறீர்களா? அப்படியானால் சரியானதைச் செய்யுங்கள். அப்பொழுது அவர்கள் உங்களைப் பாராட்டுவார்கள்.

  17. ஏனெனில் அவர்கள் உங்களுக்கு நன்மைச் செய்யும்படி இறைவனுடைய வேலைக்காரர்களாக இருக்கிறார்கள். ஆனால் நீங்கள் தவறு செய்தால், அவர்களுக்குப் பயப்படவேண்டும். அவர்கள் அதிகாரத்தை வீணாகப் பிடித்துக் கொண்டிருக்கவில்லை. அவர்கள் இறைவனுடைய வேலைக்காரர்கள், தீமை செய்கிறவர்களுக்குத் தண்டனை கொடுத்து, இறைவனுடைய கடுங்கோபத்தைக் காண்பிக்கும் பிரதிநிதிகள்.

  18. ஆகையால் அதிகாரிகளுக்கு அடங்கி நடப்பதே அவசியம். தண்டனை கிடைக்குமே என்பதற்காக மட்டும் அல்ல, நம்முடைய மனசாட்சியின் நிமித்தமும் அடங்கி நடக்கவேண்டும்.