Skip to content
எண்ணாகமம் 13:18-26

எண்ணாகமம் 13:18-26

18
போய், அந்த நாடு எப்படிப்பட்டதுதென்றும், அங்கே வாழும் மக்கள் பலசாலிகளா, பலவீனர்களா, அதிகமானவர்களா, குறைவானவர்களா என்றும் பாருங்கள்.
19
அவர்கள் வாழும் நிலம் எப்படிப்பட்டது? நல்லதோ? கெட்டதோ? அவர்கள் வாழும் பட்டணங்கள் எப்படிப்பட்டவை? அரண் அற்றவையோ? அரணுள்ளவையோ?
20
மண் எப்படிப்பட்டது? அது வளமுள்ளதா, வளமற்றதா? மரங்கள் இருக்கின்றனவா, இல்லையா? என்றும் பாருங்கள். அந்த நாட்டின் பழங்களில் சிலவற்றைக் கொண்டுவரவும் முயற்சி செய்யுங்கள்” என்றான். அது திராட்சை முதற்பழம் பழுக்கும் காலமாய் இருந்தது.
21
அவர்கள் போய் சீன் பாலைவனம்தொடங்கி, லேபோ ஆமாத்துக்கு முன்பாக உள்ள ரேகோப் வரையும் நாட்டை ஆராய்ந்து பார்த்தார்கள்.
22
அவர்கள் தெற்கு பக்கத்தின் வழியாகப்போய் எப்ரோனுக்கு வந்தார்கள். அங்கே அகீமான், சேசாய், தல்மாய் ஆகிய ஏனாக்கின் சந்ததியினர் வாழ்ந்தார்கள். எப்ரோன் எகிப்திலுள்ள சோவான் கட்டப்படுவதற்கு ஏழு வருடத்திற்கு முன்பே கட்டப்பட்டது.
23
அவர்கள் எஸ்கோல் பள்ளத்தாக்கை வந்தடைந்தபோது, ஒரு தனி திராட்சைப்பழக் குலையுடைய ஒரு கிளையை வெட்டினார்கள். அதனுடன் சில மாதுளம் பழங்களையும், அத்திப்பழங்களையும் ஒரு தடியில்போட்டு, இரண்டுபேர் தூக்கிக்கொண்டு போனார்கள்.
24
அங்கே இஸ்ரயேலர் திராட்சைக் குலையை வெட்டியதனால் அந்த இடம், “எஸ்கோல்” பள்ளத்தாக்கு என்று அழைக்கப்பட்டது.
25
அவர்கள் நாற்பது நாட்களுக்கு நாட்டை ஆராய்ந்துபார்த்து பின்பு திரும்பி வந்தார்கள்.
26
அவர்கள் பாரான் பாலைவனத்திலுள்ள காதேசில் இருந்த மோசே, ஆரோன் மற்றும் இஸ்ரயேலின் முழு சமுதாயத்தினரிடமும் வந்தார்கள். தாம் ஆராய்ந்து அறிந்தவற்றை அவர்களுக்கும், சபையார் அனைவருக்கும் சொன்னதோடு, அந்நாட்டிலிருந்து கொண்டுவந்திருந்த பழங்களையும் அவர்களுக்குக் காட்டினார்கள்.
Settings

Reading style

Typeface

Font size 19px

Reading width 75 chars

Options