எண்ணாகமம் 11:18-34
18
“எனவே நீ மக்களிடம்: ‘நீங்கள் நாளைய தினத்திற்கு ஆயத்தமாக உங்களை அர்ப்பணம் செய்யுங்கள், நாளைக்கே நீங்கள் இறைச்சியைச் சாப்பிடுவீர்கள். “நாங்கள் சாப்பிடுவதற்கு எங்களுக்கு இறைச்சி கிடைக்காதோ? எகிப்தில் நாங்கள் சந்தோஷமாய் இருந்தோமே என்று சொல்லி நீங்கள் அழுததை யெகோவா கேட்டார்!” இப்பொழுது யெகோவா உங்களுக்கு இறைச்சி தருவார். நீங்கள் அதைச் சாப்பிடுவீர்கள்.
19
நீங்கள் அதை ஒன்றிரண்டு நாட்களுக்கோ, ஐந்து பத்து இருபது நாட்களுக்கு மட்டுமோ சாப்பிடமாட்டீர்கள்.
20
ஒரு முழு மாதமும் சாப்பிடுவீர்கள். நீங்கள் அதை மூக்குமுட்ட தின்று, அதை அருவருக்கும்வரை சாப்பிடுவீர்கள். ஏனெனில், நீங்கள் உங்களோடிருக்கிற யெகோவாவைப் புறக்கணித்து, “நாங்கள் ஏன் எகிப்தைவிட்டு வந்தோம்?” என்று சொல்லி அவருக்கு முன்பாக அழுதிருக்கிறீர்கள் என்று சொல்’ ” என்றார்.
21
அதற்கு மோசே: “என்னுடன் ஆறு இலட்சம் மனிதர் இருக்கிறார்கள், ‘நீரோ ஒரு மாதத்திற்கு அவர்களுக்கு இறைச்சி தருவதாகச் சொல்கிறீர்!’
22
அவர்களுக்காக எங்களிடமுள்ள ஆட்டு மந்தைகளும், மாட்டு மந்தைகளும் வெட்டப்பட்டாலும் அவையும் போதாது? கடலிலுள்ள எல்லா மீன்களையும் பிடித்தாலும் அவையும் அவர்களுக்குப் போதாதே?” என்றான்.
23
அதற்கு யெகோவா மோசேயிடம், “யெகோவாவினுடைய கரம் குறுகியிருக்கிறதோ? நான் உனக்குச் சொன்னது உண்மையாய் நடக்குமோ, நடக்காதோ என இருந்து பார்” என்றார்.
24
யெகோவா சொன்னவற்றையெல்லாம் மோசே வெளியே போய் மக்களுக்குச் சொன்னான். அதன்பின் அவன் அவர்களில் எழுபது சபைத்தலைவர்களை ஒன்றுசேர்த்து சபைக் கூடாரத்தைச் சுற்றி நிறுத்தினான்.
25
அப்பொழுது யெகோவா மேகத்தில் இறங்கி, மோசேயுடன் பேசினார். பின் அவனில் இருந்த ஆவியானவரை அந்த சபைத்தலைவர்கள் எழுபதுபேர் மேலும் வைத்தார். ஆவியானவர் அவர்கள்மேல் வந்தவுடன், அவர்கள் இறைவாக்குரைத்தனர். ஆனால் அவர்கள் திரும்ப இறைவாக்கு உரைக்கவில்லை.
26
எல்தாத், மேதாத் என்னும் இரண்டு மனிதர்கள் தங்கள் முகாமிலேயே தங்கி இருந்தார்கள். அவர்களும் அந்தச் சபைத்தலைவர்களுடன் குறிக்கப்பட்டிருந்தார்கள். ஆனாலும் அவர்கள் சபைக் கூடாரத்திற்குப் போகவில்லை. அவர்கள்மேலும் அந்த ஆவியானவர் இறங்கியபோது, அவர்கள் தங்கள் முகாம்களுக்குள்ளே இறைவாக்கு உரைத்தனர்.
27
ஒரு வாலிபன் மோசேயிடம் ஓடிப்போய், “எல்தாத்தும், மேதாத்தும் முகாமில் இறைவாக்கு உரைக்கிறார்கள்” என்று சொன்னான்.
28
அப்பொழுது நூனின் மகனும் மோசேயின் உதவியாளனுமான யோசுவா என்னும் வாலிபன் மோசேயிடம், “என் ஆண்டவனே அவர்கள் பேசுவதை நிறுத்தும்!” என்றான்.
29
ஆனால் மோசேயோ, அவனிடம், “நீ எனக்காகப் பொறாமைகொண்டு இதைச் சொல்கிறாய்? யெகோவாவின் மக்கள் எல்லாம் இறைவாக்குரைப்போராய் இருக்கவேண்டும் என்றும், யெகோவா அவர்கள்மேல் தமது ஆவியானவரை வைக்கவேண்டும் என்றுமே நான் விரும்புகிறேன்!” என்றான்.
30
பின்பு மோசேயும் இஸ்ரயேலரின் சபைத்தலைவர்களும் முகாமுக்குத் திரும்பினார்கள்.
31
அப்பொழுது யெகோவாவிடமிருந்து ஒரு காற்றுப் புறப்பட்டு, கடலில் இருந்து காடைகளை அடித்துக்கொண்டு வந்தது. அவை முகாமைச் சுற்றிலும் நிலத்திலிருந்து மூன்றடி உயரத்திற்குப் போடப்பட்டன. முகாமிலிருந்து எப்பக்கம் போனாலும் ஒரு நாள் பயணதூரம்வரை அவை கிடந்தன.
32
அன்று பகல் முழுவதும், இரவு முழுவதும், அடுத்தநாள் முழுவதும் மக்கள் வெளியே போய், காடைகளைச் சேர்த்தார்கள். பத்து ஓமருக்குக் குறைவாக ஒருவனுமே காடைகளைச் சேர்க்கவில்லை. அவர்கள் அவற்றை முகாமைச் சுற்றிப் பரப்பிவைத்தார்கள்.
33
அவர்கள் அந்த இறைச்சியை மென்று கொண்டிருக்கும்போதே, அதை விழுங்குவதற்கு முன்னே அவர்கள்மேல் யெகோவாவின் கோபம் மூண்டது. யெகோவா அவர்களை மிகக் கொடிய கொள்ளைநோயினால் வாதித்தார்.
34
மற்ற உணவில் அடங்கா ஆசைகொண்டதனால் செத்த மக்களை அங்கே புதைத்தார்கள்; அதனால் அந்த இடம் கிப்ரோத் அத்தாவா எனப் பெயரிடப்பட்டது.
வேதாகம உரை: Biblica® Open Indian Tamil Contemporary Version™, © 2005, 2020, 2022 Biblica, Inc. · CC BY-SA 4.0“Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc., used with permission.
Settings