Skip to content
யோவான் 16:1-18

யோவான் 16:1-18

1
“நீங்கள் விசுவாசத்தைவிட்டு விலகிப் போகாதபடி இதை எல்லாம் நான் உங்களுக்குச் சொல்கிறேன்.
2
சிலர் உங்களை ஜெப ஆலயங்களிலிருந்து வெளியே துரத்துவார்கள்; உண்மையாகவே ஒரு காலம் வருகிறது, உங்களைக் கொலைசெய்கிறவர்களுங்கூட தாங்கள் இறைவனுக்கு பணிசெய்வதாகவே எண்ணுவார்கள்.
3
பிதாவையோ என்னையோ அவர்கள் அறியாததன் நிமித்தம் இப்படிப்பட்ட காரியங்களைச் செய்வார்கள்.
4
அந்தக் காலம் வருகிறபோது, நான் அதைக்குறித்து உங்களை எச்சரித்ததை நீங்கள் நினைவில் கொள்வதற்கே இதை நான் உங்களுக்கு முன்னதாகவே சொல்லியிருக்கிறேன். நான் உங்களுடனேகூட இருந்ததினாலே இதை உங்களுக்கு ஆரம்பத்திலேயே சொல்லவில்லை.
5
இப்பொழுது நான் என்னை அனுப்பிய பிதாவினிடத்திற்குப் போகிறேன். ஆனால், ‘நீர் எங்கே போகிறீர்’ என்று உங்களில் ஒருவனும் என்னிடத்தில் கேட்கவில்லை.
6
நான் இவைகளைச் சொன்னதினாலே நீங்கள் துக்கம் நிறைந்தவர்களாய் இருக்கிறீர்கள்.
7
ஆனால் நான் உங்களுக்கு உண்மையைச் சொல்கிறேன்: உங்கள் நன்மைக்காவே நான் உங்களைவிட்டுப் போகிறேன். ஏனெனில் நான் போனாலேயன்றி உதவியாளர் உங்களிடத்தில் வரமாட்டார்; நான் போனால் அவரை உங்களிடத்தில் அனுப்புவேன்.
8
உதவியாளர் வரும்பொழுது, பாவம், நீதி, நியாயத்தீர்ப்பு ஆகியவற்றைக் குறித்து உலகத்தினரை கண்டித்து உணத்துவார்:
9
அவர்கள் என்னில் விசுவாசம் வைக்காதிருப்பதினால் பாவத்தைக் குறித்தும்,
10
இனிமேல் நீங்கள் என்னைக் காணாதபடிக்கு பிதாவின் இடத்திற்கு நான் போகிறபடியால் நீதியைக் குறித்தும்,
11
இந்த உலகத்தின் அதிபதி இப்பொழுது நியாயத் தீர்ப்புக்குள்ளாகி இருப்பதனால், நியாயத்தீர்ப்பைக் குறித்தும் கண்டித்து உணர்த்துவார்.
12
“நான் உங்களுக்குச் சொல்வதற்கோ இன்னும் அதிகமாய் இருக்கிறது. இதை எல்லாம் இப்பொழுது உங்களால் தாங்கிக் கொள்ளமுடியாது.
13
ஆனால் சத்திய ஆவியானவர் வரும்போது, அவர் உங்களை எல்லா சத்தியத்திற்குள்ளும் வழிநடத்துவார். அவர் தம்முடைய சுயவிருப்பத்தின்படி எதையும் பேசமாட்டார்; தாம் கேட்கிறதை மாத்திரமே அவர் பேசுவார். வரப்போகும் காரியங்களை அவர் உங்களுக்குச் சொல்லிக் கொடுப்பார்.
14
அவர் எனக்குரியதிலிருந்து எடுத்து அதை உங்களுக்கு வெளிப்படுத்துவார். இதனால் அவர் எனக்கே மகிமையைக் கொண்டுவருவார்.
15
பிதாவுக்கு உரியவைகள் எல்லாம் என்னுடையவைகளாய் இருக்கின்றன. அதனாலேயே ஆவியானவர் எனக்குரியதிலிருந்து எடுத்து உங்களுக்கு அதை வெளிப்படுத்துவார் என்று சொன்னேன்.
16
“இன்னும் கொஞ்சம் காலத்தில் நீங்கள் என்னைக் காணமாட்டீர்கள். மீண்டும் கொஞ்சக் காலத்திலே நீங்கள் என்னைக் காணுவீர்கள்.”
17
அவர்களுடைய சீடர்களில் சிலர் ஒருவரையொருவர் பார்த்து, “ ‘இன்னும் கொஞ்சக்காலத்தில் நீங்கள் என்னைக் காணமாட்டீர்கள்’ என்றும், ‘மீண்டும் கொஞ்சக்காலத்திற்குப் பின் என்னைக் காண்பீர்கள்’ என்றும், ‘நான் என் பிதாவினிடத்திற்கு போகிறேன்’ என்றும் சொல்கிறாரே, அதன் அர்த்தம் என்ன?” என்று ஒருவரோடொருவர் பேசிக்கொண்டார்கள்.
18
“இவர், ‘கொஞ்சக்காலம்’ என்று சொல்வதன் அர்த்தம் என்ன? இவர் சொல்வது நமக்கு விளங்கவில்லையே” என்றும் பேசிக்கொண்டார்கள்.
Settings

Reading style

Typeface

Font size 19px

Reading width 75 chars

Options