Skip to content
எரேமியா 49:7-22

ஏதோமுக்கு எதிரான தீர்ப்பு

எரேமியா 49:7-22
7
ஏதோமைப் பற்றியது: சேனைகளின் யெகோவா கூறுவது இதுவே: “தேமானிலே ஞானம் இல்லையோ? விவேகமுள்ளவர்களிடமிருந்து ஆலோசனை இல்லாமல் போயிற்றோ? அவர்களுடைய ஞானம் சிதைந்து போயிற்றோ?
8
தேதானில் குடியிருப்பவர்களே! திரும்பி தப்பியோடுங்கள். பள்ளங்களின் நடுவிலே ஒளிந்துகொள்ளுங்கள். ஏனெனில் ஏசாவை நான் தண்டிக்கும் காலத்தில் அவன்மேல் பேராபத்தைக் கொண்டுவருவேன்.
9
திராட்சைப் பழங்களை பறிக்கிறவர்கள் உன்னிடத்தில் வந்தால், சில பழங்களை விட்டுச்செல்லமாட்டார்களோ? இரவுவேளையில் திருடர்கள் வந்தால், தங்கள் மனம் விரும்பிய அளவு மட்டும் கொள்ளையடிப்பார்கள் அல்லவா?
10
ஆனால் நானோ ஏசாவை வெறுமையாக்குவேன். அவன் தன்னை மறைத்துக் கொள்ளமுடியாத அளவுக்கு அவனுடைய மறைவிடங்களை வெளிப்படுத்துவேன். அவனுடைய பிள்ளைகளும், உறவினர்களும், அயலவர்களும் அழிந்துபோவார்கள். அவனும் இல்லாமற்போவான்.
11
‘நீ உன் அநாதைகளை விட்டுவிடு; நான் அவர்களைப் பாதுகாப்பேன். உன்னுடைய விதவைகளும் என்னில் நம்பிக்கையாய் இருக்கலாம்.’ ”
12
யெகோவா கூறுவது இதுவே: “தண்டனையின் பாத்திரத்தில் குடிக்க வேண்டியதல்லாதவர்களும், அதில் கட்டாயமாய் குடிக்க வேண்டியிருக்கும்போது, நீ மட்டும் தண்டனையின்றி தப்பலாமோ? நீ தண்டிக்கப்படாமல் விடப்படமாட்டாய்; நீ கண்டிப்பாக குடிக்கவேண்டும்.
13
போஸ்றா பாழாக்கப்பட்டு, பயங்கரத்திற்கும், நிந்தைக்கும், சாபத்திற்கும் உள்ளாகும். அதன் பட்டணங்கள் யாவும் என்றும் பாழாகவே கிடக்கும் என்று நான் என்னைக்கொண்டு ஆணையிடுகிறேன்” என்று யெகோவா அறிவிக்கிறார்.
14
நான் யெகோவாவிடமிருந்து ஒரு செய்தியைக் கேள்விப்பட்டேன். ஜனங்களிடம் ஒரு தூதுவன், “அதைத் தாக்குவதற்கு நீங்கள் ஒன்றுகூடுங்கள்! யுத்தம் செய்ய எழும்புங்கள்!” என்று சொல்லுவதற்காக அனுப்பப்பட்டான்.
15
இப்பொழுது நான் உன்னை நாடுகளுக்குள்ளே சிறியதும், மனிதரால் அவமதிக்கப்பட்டதுமாக்குவேன்.
16
கற்பாறை பிளவுகளில் வாழ்ந்து, மேடுகளின் உயரங்களில் இடம்பிடித்துக்கொண்டிருக்கிற உன்னை, நீ விளைவிக்கும் பயங்கரமும், உன் இருதயத்தின் அகந்தையும் உன்னை மோசம்போக்கியது. நீ கழுகின் கூட்டைப்போல் உன் கூட்டை மிக உயரத்தில் கட்டினாலும், அங்கிருந்தும் நான் உன்னை கீழே விழத்தள்ளுவேன் என்று யெகோவா அறிவிக்கிறார்.
17
ஏதோம் ஒரு பாழான பொருளாகும். அதைக் கடந்துபோகிற யாவரும் பிரமித்து, அதற்கு ஏற்பட்ட எல்லா காயங்களைக் கண்டு ஏளனம் செய்வார்கள்.
18
சோதோமும், கொமோராவும் அவைகளுக்கு அடுத்திருந்த பட்டணங்களுடன் கவிழ்க்கப்பட்டதுபோல, அங்கு ஒருவனும் வாழ்வதுமில்லை. ஒரு மனிதனும் குடியிருப்பதுமில்லை என்று யெகோவா சொல்கிறார்.
19
யோர்தானின் புதர்களுக்குள்ளிருந்து ஒரு சிங்கம் செழிப்பான மேய்ச்சலிடத்திற்கு ஏறிவருவதுபோல நான் வந்து, ஏதோமை அதன் நாட்டிலிருந்து ஒரு நொடிப்பொழுதில் துரத்துவேன். அதற்கென நான் நியமிப்பதற்கு என்னால் தெரிந்துகொள்ளப்பட்டவன் யார்? என்னைப் போன்றவன் யார்? என்னை எதிர்க்கக் கூடியவன் யார்? எந்த மேய்ப்பன் எனக்கெதிராக நிற்பான்?
20
ஆகையால், யெகோவா ஏதோமுக்கு விரோதமாக வகுத்த திட்டங்களையும், தேமானில் வாழ்கிறவர்களுக்கு விரோதமான அவரது நோக்கங்களையும் கேளுங்கள். மந்தையில் இளமையானவை இழுத்துச் செல்லப்படும். அவைகளின் நிமித்தம் அவைகளின் மேய்ச்சல் நிலத்தை முற்றுமாய் அழித்துப் போடுவான்.
21
அவைகளின் விழுகையின் சத்தத்தால் பூமி நடுங்கும். அவைகளின் அழுகுரல் செங்கடல்வரை எதிரொலிக்கும்.
22
இதோ! ஒருவன் கழுகைப்போல உயரப் பறந்து, போஸ்றாவின் மேலாக தனது சிறகுகளை விரித்து, அதை தாக்கும்படி கீழே வருகிறான். அந்த நாளில் ஏதோமின் போர்வீரருடைய இருதயங்கள் பிரசவிக்கிற ஒரு பெண்ணின் இருதயத்தைப்போல் இருக்கும்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Reading Width 45 chars

Options