Skip to content
எரேமியா 27:1-15

எரேமியா 27:1-15

1
யூதாவின் அரசன் யோசியாவின் மகன் யோயாக்கீமினுடைய ஆட்சியின் ஆரம்பத்தில், எரேமியாவுக்கு யெகோவாவிடமிருந்து இந்த வார்த்தை வந்தது.
2
யெகோவா என்னிடம், “நீ உனக்குக் கயிறுகளையும் நுகங்களையும், உண்டாக்கி, அவைகளை உன் கழுத்தில் போட்டுக்கொள்.
3
பின்பு யூதாவின் அரசன் சிதேக்கியாவிடம் எருசலேமுக்கு வந்திருக்கும் தூதுவர்கள் மூலமாக, ஏதோம், மோவாப், அம்மோன், தீரு, சீதோன் ஆகிய நாடுகளின் அரசர்களுக்கு ஒரு செய்தி அனுப்பு.
4
அவர்களுடைய அரசர்களுக்கு ஒரு செய்தி அனுப்பவேண்டிய செய்தியாவது: ‘இஸ்ரயேலின் இறைவனாகிய சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: “இதை உங்களுடைய அரசர்களுக்குப் போய்ச் சொல்லுங்கள்.
5
எனது மகா வலிமையாலும் நீட்டப்பட்ட புயத்தாலும் பூமியையும், அதிலுள்ள மனிதரையும், மிருகங்களையும் நான் படைத்தேன். எனக்கு விருப்பமானவனுக்கே நான் அவைகளைக் கொடுக்கிறேன்.
6
இப்பொழுது உங்கள் நாடுகள் எல்லாவற்றையும், பாபிலோன் அரசனும் எனது பணியாளனுமான நேபுகாத்நேச்சாரின் கையில் கொடுப்பேன். காட்டு மிருகங்களையும் அவனுக்குக் கீழ்ப்படுத்துவேன்.
7
அவனுடைய நாட்டிற்கான காலம் வரும்வரை எல்லா நாடுகளும் அவனுக்கும், அவன் மகனுக்கும், அவனுடைய பேரனுக்கும் பணிசெய்வார்கள். அதன்பின் அநேக நாடுகளும், பெரிய அரசர்களும், அவனை தங்களுக்குக் கீழ்ப்படுத்துவார்கள்.
8
“ ‘ “ஆயினும், எந்த நாடாகிலும் அரசாகிலும் பாபிலோன் அரசன் நேபுகாத்நேச்சாருக்குப் பணிசெய்யாமலும், அவனுடைய நுகத்தின் கீழே தன் கழுத்தை வைக்காமலும் போனால், அந்த நாட்டை நான் தண்டிப்பேன். அந்த நாட்டை அவனுடைய கையால் நான் அழித்துத் தீர்க்கும்வரை நான் வாளினாலும், பஞ்சத்தினாலும், கொள்ளைநோயினாலும் தண்டிப்பேன் என்று யெகோவா அறிவிக்கிறார்.
9
ஆகையால், ‘நீங்கள் பாபிலோன் அரசனுக்குப் பணி செய்யமாட்டீர்கள்’ என்று சொல்லுகிற இறைவாக்கினருக்கும், குறிசொல்லுகிறவர்களுக்கும், கனவுகளுக்கு விளக்கம் கூறுவோருக்கும், செத்தவர்களின் ஆவியுடன் பேசுகிறவர்களுக்கும், சூனியக்காரருக்கும் நீங்கள் செவிசாய்க்க வேண்டாம்.
10
ஏனெனில் உங்கள் நாடுகளிலிருந்து உங்களைத் தூரமான இடத்திற்கு அகற்ற உதவும் பொய்களையே அவர்கள் உங்களுக்கு இறைவாக்காகச் சொல்கிறார்கள். நான் உங்களை நாடுகடத்துவேன். நீங்கள் அழிவீர்கள்.
11
ஆனால் எந்த நாடாவது பாபிலோன் அரசனின் நுகத்திற்குத் தங்களைக் கீழ்ப்படுத்தி அவனுக்குப் பணிசெய்தால், நான் அந்த நாட்டை அதன் சொந்த நாட்டிலேயே தங்கச்செய்து, நிலத்தைப் பண்படுத்தி அங்கே வாழவிடுவேன் என்று யெகோவா அறிவிக்கிறார்.” ’ ”
12
நான் யூதாவின் அரசன் சிதேக்கியாவுக்கும் இதே செய்தியைக் கூறினேன். நான் அவனிடம், “நீங்கள் உங்களைப் பாபிலோன் அரசனின் நுகத்திற்குக் கீழ்ப்படுத்தி, அரசனுக்கும், அவனுடைய மக்களுக்கும் பணிசெய்யுங்கள்; அப்பொழுது நீங்கள் பிழைப்பீர்கள்.
13
நீயும் உன் மக்களும் வாளினாலும், பஞ்சத்தினாலும், கொள்ளைநோயாலும் ஏன் சாகவேண்டும்? பாபிலோன் அரசனுக்குப் பணி செய்யாத எந்த நாட்டையும் இவைகளால் அழிப்பதாக யெகோவா எச்சரித்திருக்கிறாரே.
14
ஆகையால் ‘நீங்கள் பாபிலோன் அரசனுக்குப் பணி செய்யமாட்டீர்கள்’ என்று சொல்கிற இறைவாக்கினருக்குச் செவிகொடுக்க வேண்டாம். ஏனெனில் அவர்கள் பொய்களையே இறைவாக்காகக் கூறுகிறார்கள்.
15
‘நான் அவர்களை அனுப்பவில்லை’ என்று யெகோவா அறிவிக்கிறார். ‘அவர்கள் என் பெயரில் பொய்களையே இறைவாக்காகக் கூறுகிறார்கள். எனவே நான் உங்களை நாடுகடத்துவேன். நீங்களும் உங்களுக்கு இறைவாக்கு கூறுகிற இறைவாக்கினரும் அழிவீர்கள் என்று சொன்னேன்.’ ”
Settings

Reading style

Typeface

Font size 19px

Reading width 90 chars

Options