2 சாமுயேல் 20:15-22
15
யோவாபுடன் இருந்த வீரர்கள் வந்து ஆபேல் பெத்மாக்காவாகிய சேபாவை முற்றுகையிட்டார்கள். பட்டணத்துக்கு எதிரே ஒரு முற்றுகை கொத்தளத்தைக் கட்டினார்கள். அது வெளி அரணுக்கு எதிரே இருந்தது. பட்டணத்து மதிலை வீழ்த்தும்படி அதை இடித்துக் கொண்டிருக்கும்போது,
16
ஒரு ஞானமுள்ள பெண் பட்டணத்திலிருந்து சத்தமிட்டுக் கூப்பிட்டு, “கேளுங்கள், கவனியுங்கள்; நான் யோவாபுடன் பேசும்படி அவரை இங்கே வரச்சொல்லுங்கள்” என்றாள்.
17
எனவே யோவாப் அவளிடம் வந்தபோது அவள், “நீர்தானா யோவாப்?” என்று கேட்டாள். அதற்கு யோவாப், “நானேதான்” என்றான். அப்பொழுது அப்பெண், “உமது அடியாள் சொல்வதைக் கேளும்” என்றாள். அதற்கு அவன், “கேட்கிறேன்” என்றான்.
18
தொடர்ந்து அவள், “வெகுகாலத்திற்குமுன் மக்கள், ‘ஆபேலில் ஆலோசனையைக் கேளுங்கள்’ எனச் சொல்வது வழக்கம். அவ்வாறே மக்கள் தங்கள் வழக்குகளைத் தீர்த்தார்கள்.
19
இஸ்ரயேலில் நாங்கள் சமாதானமும், உண்மையுமுள்ளவர்கள்; இஸ்ரயேலருக்கு ஒரு தாய்போல் இருக்கும் இப்பட்டணத்தை நீங்கள் அழிக்க விரும்புகிறீர்கள்; யெகோவாவினுடைய உரிமைச்சொத்தை ஏன் நீங்கள் விழுங்கப் பார்க்கிறீர்கள்?” என்றாள்.
20
அதற்கு யோவாப், “அப்படிப்பட்ட எண்ணம் எனக்கில்லை. அதை அழித்து ஒழிக்கும் எண்ணம் எனக்கு இல்லவே இல்லை.
21
அது எங்களுடைய நோக்கமல்ல; எப்பிராயீம் மலைநாட்டைச் சேர்ந்த பிக்கிரியின் மகனான சேபா என்பவன் அரசனுக்கு எதிராக, தாவீதுக்கு எதிராகத் தன் கையை ஓங்கியிருக்கிறான். அந்த ஒரு மனிதனை எங்களிடத்தில் ஒப்படைத்தால் நாங்கள் பட்டணத்தைவிட்டுப் போய்விடுவோம்” என்றான். அப்பொழுது அப்பெண் யோவாபிடம், “அவனுடைய தலை மதிலுக்கு மேலாக உன்னிடத்தில் எறியப்படும்” என்றாள்.
22
அதன்படியே அந்தப் பெண் எல்லா மக்களிடமும் ஞானமாய் பேசியதால், அவர்கள் பிக்கிரியின் மகன் சேபாவின் தலையை வெட்டி யோவாபிடம் எறிந்துவிட்டார்கள். அப்பொழுது யோவாப் எக்காளம் ஊதினன். படைவீரர் அனைவரும் பட்டணத்தைவிட்டு கலைந்து ஒவ்வொருவரும் அவரவர் வீடுகளுக்குப் போனார்கள். யோவாபும் எருசலேமுக்கு அரசனிடம் போனான்.
Settings