Skip to content
2 சாமுயேல் 15:1-12

2 சாமுயேல் 15:1-12

1
சிறிது காலத்தின்பின் அப்சலோம் ஒரு தேரையும், குதிரைகளையும், தனக்கு முன்னால் செல்லத்தக்க ஐம்பது பேரையும் தேடிக்கொண்டான்.
2
மேலும் அப்சலோம் அதிகாலையில் எழுந்து பட்டண வாசலுக்குச் செல்லும் பாதையோரத்தில் நிற்பான். யாராவது தன் முறையீட்டுடன் அரசனிடம் தீர்ப்பைக் கேட்க வரும்போது அப்சலோம் அவனைக் கூப்பிட்டு அவனிடம், “நீ எந்த பட்டணத்தான்?” என்று கேட்பான். அவன், “உமது அடியவன் இஸ்ரயேல் கோத்திரத்தைச் சேர்ந்தவன்” என்பான்.
3
அப்பொழுது அப்சலோம் அவனிடம், “பார், உன் வழக்கு உண்மையும் தகுதியுமானது. ஆனால் உன் முறையீட்டை விசாரிக்க அரசனின் பிரதிநிதி ஒருவனும் இல்லையே.
4
மேலும் அப்சலோம், நான் இந்த நாட்டின் நீதிபதியாய் நியமிக்கப்பட்டால், வழக்கோ முறையீடோ உள்ள அனைவரும் என்னிடம் வரலாம். நான் அவனுக்கு நியாயம் வழங்கும்படி பார்த்துக்கொள்வேன்” என்பான்.
5
அத்துடன் யாராவது அப்சலோம் முன்வந்து வணங்கினால் அவன் தன் கையை நீட்டி அவனை அணைத்து முத்தமிடுவான்.
6
இவ்விதமாகவே அப்சலோம் அரசனிடம் நீதி கேட்டு வரும் இஸ்ரயேலர் அனைவருக்கும் செய்து, இஸ்ரயேல் மக்களின் மனதைக் கவர்ந்தான்.
7
நான்கு வருடங்களுக்குப் பின்பு அப்சலோம் அரசனிடம், “நான் யெகோவாவுக்குச் செய்துள்ள நேர்த்திக்கடனை நிறைவேற்றுவதற்கு எப்ரோனுக்குப் போவதற்கு என்னைப் போகவிடும்.
8
உமது அடியவன் சீரியாவிலுள்ள கேசூரில் இருக்கும்போது யெகோவா என்னை மறுபடியும் எருசலேமுக்குக் கொண்டுவந்தால், எப்ரோனிலே யெகோவாவை வழிபடுவேன் என்று இந்த நேர்த்திக்கடனைச் செய்தேன்” என்றான்.
9
தாவீது அரசன் அப்சலோமிடம், “சமாதானத்தோடே போய்வா” என்றான். எனவே அவன் எப்ரோனுக்குப் போனான்.
10
ஆனால் அப்சலோமோ இஸ்ரயேல் கோத்திரங்களுக்கெல்லாம் இரகசியமாய் தூதுவரை அனுப்பி, “எக்காள சத்தம் கேட்டவுடனே, நீங்கள், ‘அப்சலோமே எப்ரோனின் அரசன்’ என்று சத்தமிடுங்கள்” எனச் சொல்லியிருந்தான்.
11
எருசலேமிலிருந்து இருநூறுபேர் அப்சலோமோடு சென்றார்கள். அவர்கள் விருந்தாளிகளாய் அழைக்கப்பட்டிருந்தார்கள்; ஆனாலும் அப்சலோமின் சூழ்ச்சியைப்பற்றி ஒன்றுமே அறியாதவர்களாயிருந்தார்கள்.
12
அப்சலோம் பலிகளை செலுத்தும்போது, தாவீதின் ஆலோசகனான அகிதோப்பேல் என்னும் கீலொனியனை அவனுடைய சொந்தப் பட்டணமான கிலொவிலிருந்து வரும்படி ஆளனுப்பினான். அப்படியே சதித்திட்டமும் வலுவடைந்து, அப்சலோமின் ஆதரவாளர்களும் பெருகினார்கள்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Reading Width 45 chars

Options