Skip to content
2 நாளாகமம் 25:5-15

2 நாளாகமம் 25:5-15

5
அமத்சியா யூதாவின் மக்களை ஒன்றுகூட்டி முழு யூதாவுக்கும், பென்யமீனுக்குமான அவர்களின் குடும்பங்களின்படி ஆயிரம்பேரின் தளபதிகளையும், நூறுபேரின் தளபதிகளையும் நியமித்தான். அதன்பின் அவன் இருபது வயதும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களை ஒன்றுதிரட்டினான். அவர்களில் ஈட்டியும், கேடயமும் பயன்படுத்தத் தெரிந்தவர்களான, இராணுவ பணிக்கு ஆயத்தமான 3,00,000 மனிதர் இருப்பதைக் கண்டான்.
6
அத்துடன் அவன் இஸ்ரயேலில் இருந்தும் 1,00,000 இராணுவவீரர்களை நூறு தாலந்து வெள்ளி கொடுத்து கூலிக்கு அமர்த்தினான்.
7
ஆனால் இறைவனின் மனிதன் ஒருவன் அவனிடம் வந்து சொன்னதாவது: “அரசனே, இஸ்ரயேலின் இந்தப் படை உன்னோடு யுத்தத்திற்கு வரவே கூடாது. ஏனெனில் யெகோவா இஸ்ரயேலரோடு இல்லை. எப்பிராயீம் மக்கள் யாருடனும் இல்லை.
8
நீ யுத்தத்திற்கு போய், தைரியமாய் சண்டையிட்டாலும்கூட, இறைவனோ உங்கள் பகைவர்களுக்கு முன்பாக உங்களை முறியடிப்பார். ஏனெனில் உதவிசெய்யவும், தோற்கடிக்கவும் இறைவனுக்கு வல்லமை உண்டு” என்றான்.
9
அதற்கு அமத்சியா இறைவனின் மனிதனிடம், “இந்த இஸ்ரயேல் படைக்கு நான் செலுத்திய நூறு தாலந்து வெள்ளி என்னாவது?” என்று கேட்டான். அதற்கு இறைவனின் மனிதன், “யெகோவாவினால் இதற்கும் அதிகமாகக் கொடுக்கமுடியும்” என்றான்.
10
எனவே அமத்சியா தன்னிடம் எப்பிராயீமிலிருந்து வந்த படையை வெளியேற்றி அவர்கள் வீடுகளுக்கு அனுப்பிவிட்டான். அவர்கள் யூதாவின்மேல் கடுங்கோபத்துடனும், மிக ஆத்திரத்துடனும் அவ்விடத்தைவிட்டு தங்கள் வீடுகளுக்குப் போனார்கள்.
11
அமத்சியா தனது பெலத்தைத் திரட்டிக்கொண்டு இராணுவத்தை உப்புப் பள்ளத்தாக்கிற்கு நடத்திச்சென்று, அங்கே அவன் சேயீர் மனிதரில் 10,000 பேரைக் கொன்றான்.
12
அத்துடன் யூதாவின் இராணுவமும் 10,000 மனிதரை உயிருடன் பிடித்து, அவர்களை ஒரு செங்குத்தான மலை உச்சிக்கு கொண்டுபோய் அங்கேயிருந்து கீழே தள்ளிவிட்டனர். அவர்கள் மோதுண்டு விழுந்து நொறுங்கினார்கள்.
13
இதேவேளையில் யுத்தத்தில் தங்களோடு வரவேண்டாமென அமத்சியா திருப்பி அனுப்பிய இராணுவவீரர்கள், சமாரியா தொடங்கி பெத் ஓரோன் வரையிலுமுள்ள யூதாவின் நகரங்களை திடீரெனத் தாக்கினார்கள். அவர்கள் 3,000 பேரைக் கொலைசெய்து அதிக அளவிலான கொள்ளைப்பொருட்களையும் கொண்டுபோனார்கள்.
14
அமத்சியா ஏதோமியரை முறியடித்துவிட்டு திரும்பும்போது, சேயீர் மக்களின் தெய்வங்களையும் கொண்டுவந்தான். அவன் அவற்றைத் தனது சொந்தத் தெய்வங்களாக வைத்து வணங்கி, அவற்றிற்குத் தகன காணிக்கைகளையும் செலுத்தினான்.
15
யெகோவாவின் கோபம் அமத்சியாவுக்கு எதிராகப் பற்றியெரிந்தது. அவர் அவனிடத்திற்கு ஒரு இறைவாக்கினனை அனுப்பினார். அவன், “நீ ஏன் இந்த மக்களின் தெய்வங்களிடம் ஆலோசனை கேட்கிறாய். அவைகளால் தனது சொந்த மக்களை உன்னுடைய கையிலிருந்து காப்பாற்ற முடியவில்லையே” என்று கேட்டான்.

வேதாகம உரை: Biblica® Open Indian Tamil Contemporary Version™, © 2005, 2020, 2022 Biblica, Inc. · CC BY-SA 4.0“Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc., used with permission.

Settings

Reading style

Typeface

Font size 19px

Reading width 75 chars

Options