உள்ளடக்கத்திற்குச் செல்க

Public Prayer பற்றிய பைபிள் வசனங்கள்

128 வசனங்கள் · 21 அம்சங்கள்

முக்கிய பைபிள் வசனங்கள்

புத்தகத்தின்படி வடிகட்டு
  1. “பாவம் செய்யாதவன் எவனும் இல்லை. அதனால் அவர்கள் உமக்கெதிராகப் பாவம் செய்வார்கள்; அப்பொழுது நீர் அவர்கள்மேல் கோபங்கொண்டு, அவர்களை அவர்களின் பகைவரிடம் ஒப்புக்கொடுத்தால், பகைவர்கள் அவர்களைத் தூரத்திலோ அருகிலோ உள்ள நாட்டிற்கு சிறைபிடித்துக்கொண்டு போவார்கள்.

  2. அவர்கள் தாங்கள் கைதிகளாய் இருக்கும் நாட்டில் உணர்ந்து மனந்திரும்பி, ‘நாங்கள் பாவஞ்செய்து, தீமையான செயல்களைச் செய்து, கொடுமையாய் நடந்தோம்’ என்று சிறைபட்டுப்போன நாட்டிலே உம்மிடம் அவர்கள் கெஞ்சி,

  3. அவர்கள் தாங்கள் சிறைப்பட்டிருக்கும் நாட்டில் இருந்து, தங்கள் முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும் உம்மிடத்தில் திரும்பி, நீர் அவர்களுடைய முற்பிதாக்களுக்குக் கொடுத்த நாட்டையும், நீர் தெரிந்துகொண்ட பட்டணத்தையும், நான் உமது பெயருக்கென கட்டிய ஆலயத்தையும் நோக்கி உம்மை நோக்கி அவர்கள் மன்றாடினால்,

  4. நீர் குடியிருக்கும் இடமான பரலோகத்திலிருந்து அவர்கள் மன்றாட்டையும் கெஞ்சுதலையும் கேட்டு, அவர்கள் சார்பாய் செயலாற்றும். உமக்கெதிராகப் பாவஞ்செய்த உமது மக்களை மன்னியும்.

  5. “என் இறைவனே, இந்த இடத்தில் செய்யப்படும் விண்ணப்பங்களுக்கு உமது கண்களும் காதுகளும் கவனமாகத் திறந்திருக்கட்டும்.

  6. “இப்பொழுதும் இறைவனாகிய யெகோவாவே எழுந்திரும்,

  7. இறைவனாகிய யெகோவாவே, நீர் அபிஷேகித்தவரை புறக்கணியாதேயும்.

  8. எனது பெயரால் அழைக்கப்படும் என் மக்கள் தங்களைத் தாழ்த்தி மன்றாடி, என் முகத்தைத் தேடி, தங்கள் கொடிய வழிகளைவிட்டு விலகுவார்களேயானால், அப்பொழுது நான் பரலோகத்திலிருந்து கேட்டு அவர்கள் பாவத்தை மன்னித்து, அவர்கள் நாட்டைக் குணப்படுத்துவேன்.

  9. நான் என்றென்றைக்கும் என் பெயர் இந்த ஆலயத்திலிருக்கும்படி, அதைத் தெரிந்துகொண்டு, பரிசுத்தப்படுத்தியிருக்கிறேன். எனது கண்களும், எனது இருதயமும் எப்பொழுதும் அங்கிருக்கும்.

  10. அப்பொழுது யோசபாத் யெகோவாவின் ஆலயத்தில் புதிய முற்றத்திற்கு முன்னால் யூதாவிலிருந்தும், எருசலேமிலிருந்தும் வந்த மக்கள் சபையின் நடுவில் எழுந்து நின்றுகொண்டு

  11. அவன், “எங்கள் முற்பிதாக்களின் இறைவனாகிய யெகோவாவே, பரலோகத்தில் இருக்கும் இறைவன் நீரல்லவோ? நீரே நாடுகளின் அரசுகள் அனைத்தையும் ஆள்பவர். அதிகாரமும் வல்லமையும் உமது கரங்களிலேயே இருக்கின்றன. உம்மை எதிர்த்துநிற்க ஒருவராலும் முடியாது.

  12. எங்கள் இறைவனே, உமது மக்களான இஸ்ரயேலுக்கு முன்பாக இந்த நாட்டின் மக்களைத் துரத்தி, உமது சிநேகிதனான ஆபிரகாமின் சந்ததிகளுக்கு அதை என்றென்றைக்குமாகக் கொடுத்தீரல்லவா?

  13. அவர்கள் இங்கேயே குடியிருந்து, உமது பெயருக்கென ஒரு பரிசுத்த இடத்தையும் கட்டினார்களே.

  14. ‘நியாயத்தீர்ப்பின் வாள், கொள்ளைநோய், பஞ்சம் ஆகிய பேராபத்துக்கள் எங்கள்மேல் வந்தால், நாங்கள் உமது பெயர் விளங்கும் இந்த ஆலயத்தின் முன்பாக உமது முன்னிலையில் நின்று, எங்கள் துன்பத்தின் நிமித்தம் உம்மை நோக்கிக் கூப்பிடும்போது, எங்கள் சத்தத்தை நீர் கேட்டு எங்களை விடுவிப்பீர்’ என்று சொன்னீரே.

  15. “ஆனால் இப்பொழுது அம்மோனியர், மோவாபியர், சேயீர் மலைநாட்டினர் ஆகியோர் இங்கே வந்திருக்கிறார்கள். இஸ்ரயேலர் எகிப்திலிருந்து வந்தபோது, அவர்களுடைய பிரதேசத்தின் வழியாக படையெடுக்க நீர் இஸ்ரயேலரை அனுமதிக்கவில்லை. அதனால் இஸ்ரயேலர் அவர்களைவிட்டுத் திரும்பிப் போனார்கள்; அவர்களை அழிக்கவில்லை.

  16. அவர்கள் எங்களுக்கு எப்படிப் பதில் செய்கிறார்கள் என்று பாரும், இப்பொழுது நீர் எங்களுக்கு உரிமைச்சொத்தாகக் கொடுத்த எங்கள் நாட்டிலிருந்து எங்களைத் துரத்தி விடுவதற்காக வந்திருக்கிறார்கள்.

  17. எங்கள் இறைவனே, நீர் அவர்களை நியாயந்தீர்க்கமாட்டீரோ? எங்களைத் தாக்க வந்திருக்கும் இந்த மிகப்பெரிய இராணுவத்தை எதிர்கொள்ள எங்களுக்கு வலிமை இல்லை. என்ன செய்வதென்றும் எங்களுக்குத் தெரியாது. ஆனால் எங்கள் கண்கள் உம்மையே நோக்கியிருக்கின்றன” என்று மன்றாடினான்.

  18. யூதாவின் எல்லா மனிதர்களும், அவர்களின் மனைவியர்களுடனும், குழந்தைகளுடனும், சிறியவர்களுடனும்கூட யெகோவாவுக்கு முன்பாக நின்றார்கள்.

  19. இஸ்ரயேல் மக்கள் அதே மாதமாகிய ஏழாம் மாதம் இருபத்து நான்காம் நாளில், உபவாசித்துத் துக்கவுடை உடுத்தித் தங்கள் தலைகளில் புழுதியைப் போட்டுக்கொண்டு, ஒன்றுகூடி வந்தார்கள்.

  20. இஸ்ரயேலரின் சந்ததிகள் அந்நியரிலிருந்தும், தங்களை வேறுபிரித்துக் கொண்டார்கள். அவர்கள் எழுந்து நின்று தங்கள் பாவங்களையும், தங்கள் முற்பிதாக்களின் கொடுமையையும் அறிக்கை செய்தார்கள்.

  21. அவர்கள் தாங்கள் நின்ற இடங்களிலேயே நின்றபடி, ஒரு நாளில் கால்பங்கு நேரத்திற்கு தங்கள் இறைவனாகிய யெகோவாவின் சட்டப் புத்தகத்திலிருந்து வாசித்தார்கள். இன்னுமொரு கால்பங்கு நேரத்திற்குத் தங்கள் பாவங்களை அறிக்கையிட்டுத் தங்கள் இறைவனாகிய யெகோவாவை வழிபட்டார்கள்.

  22. படிக்கட்டுகளில் யெசுவா, பானி, கத்மியேல், செபனியா, புன்னி, செரெபியா, பானி, கெனானி ஆகிய லேவியர்கள் நின்று தங்கள் இறைவனாகிய யெகோவாவை நோக்கிப் பலத்த சத்தமாய் வழிபட்டார்கள்.

  23. அதன்பின் லேவியரான யெசுவா, கத்மியேல், பானி, ஆசாப்நெயா, செரெபியா, ஒதியா, செபனியா, பெத்தகியா ஆகியோர் மக்களைப் பார்த்து, “நீங்கள் எழுந்து நின்று, நித்தியத்திலிருந்து நித்தியம்வரை இருக்கிற உங்கள் இறைவனாகிய யெகோவாவைத் துதியுங்கள்” என்றார்கள். அப்பொழுது அவர்கள் எழுந்து நின்று சொன்னதாவது: “மகிமையுள்ள உமது பெயர் துதிக்கப்படுவதாக; அது எல்லா ஆசீர்வாதத்திற்கும், துதிக்கும் மேலாய் உயர்த்தப்படுவதாக.

  24. நீர் ஒருவரே யெகோவா; நீர் வானங்களையும், வானங்களுக்கு மேலான வானங்களையும், நட்சத்திரக் கூட்டங்களையும், பூமியையும், அதில் உள்ளவற்றையும், கடல்களையும் அவற்றிலுள்ள எல்லாவற்றையும் படைத்தீர். அவை யாவற்றுக்கும் நீரே உயிரையும் கொடுத்திருக்கிறீர். வானத்தின் சேனை யாவும் உம்மை வழிபடுகின்றன.

  25. “ஆபிராமைத் தெரிந்தெடுத்து, கல்தேயரின் தேசமாகிய ஊர் பட்டணத்திலிருந்து அவனைக் கொண்டுவந்து, அவனுக்கு ஆபிரகாம் என்ற பெயரைக் கொடுத்த இறைவனாகிய யெகோவா நீரே.