Skip to content

Olive Tree பற்றிய பைபிள் வசனங்கள்

26 வசனங்கள் · 9 அம்சங்கள்

முக்கிய பைபிள் வசனங்கள்

புத்தகத்தின்படி வடிகட்டு
  1. அன்று மாலையில் அந்தப் புறா அவனிடத்தில் திரும்பிவந்தபோது, அதன் அலகில் புதிதாகக் கொத்தியெடுத்த ஒலிவ இலையொன்று இருந்தது. அதனால் பூமியில் தண்ணீர் வற்றிவிட்டது என்று நோவா அறிந்துகொண்டான்.

  2. ஆனால் ஏழாவது வருடமோ, நிலமானது உழப்படாமலும் பயன்படுத்தப்படாமலும் விட்டுவிட வேண்டும். உங்கள் மத்தியிலுள்ள ஏழைகள் அதிலிருந்து வளரும் தானியங்களை உணவாகப் பெற்றுக்கொள்ளலாம். அவர்கள் விட்டதைக் காட்டு மிருகங்கள் தின்னலாம். உங்கள் திராட்சைத் தோட்டத்திற்கும், ஒலிவத்தோப்பிற்கும் அப்படியே செய்யுங்கள்.

  3. நீங்கள் சேகரிக்காத பல வகையான நல்ல பொருட்களால் நிறைந்த வீடுகளும், நீங்கள் வெட்டாத கிணறுகளும், நீங்கள் நடாத திராட்சைத் தோட்டங்களும் ஒலிவத்தோப்புகளும் இருக்கின்றன. நீங்கள் அங்கு சாப்பிட்டுத் திருப்தியடைவீர்கள்.

  4. அது கோதுமையும் வாற்கோதுமையும், திராட்சைத் தோட்டங்களும், அத்திமரங்களும், மாதுளம்பழங்களும், ஒலிவ எண்ணெயும், தேனும் நிறைந்த நாடு.

  5. ஒலிவப்பழங்களைப் பறிப்பதற்காக நீங்கள் உங்கள் மரங்களை உலுக்கிய பின்பு, இரண்டாம் முறையும் பழங்களைப் பறிப்பதற்காக கிளைகளில் தேடவேண்டாம். அதில் மீதியாய் உள்ளவற்றை அந்நியர்களுக்கும், தந்தையற்றவர்களுக்கும், விதவைகளுக்கும் விட்டுவிடுங்கள்.

  6. நாடெங்கும் ஒலிவமரங்கள் நிற்கும். ஆனால் உங்கள் தேவைக்கு எண்ணெய் இராது. ஏனெனில் ஒலிவக்காய்கள் உதிர்ந்துவிடும்.

  7. ஒரு நாள் மரங்களெல்லாம் தங்களுக்குள் ஒரு அரசனை நியமிக்கப் போயின. அதன்படி அவை ஒலிவமரத்தைப் பார்த்து, ‘நீ எங்கள் அரசனாயிரு’ என்றன.

  8. உட்புற பரிசுத்த இடத்திலே இரண்டு கேருபீன்களின் உருவத்தைச் செதுக்கி வைத்தான். அவை ஒவ்வொன்றும் பத்துமுழ உயரமுடையதாக ஒலிவ மரத்தினால் செய்யப்பட்டவை.

  9. உட்புற பரிசுத்த இடத்தின் வாசலுக்கு ஒலிவ மரத்தினால் செய்யப்பட்ட கதவுகளையும், ஐங்கோண வடிவமுள்ள பக்க நிலைகளையும் அமைத்தான்.

  10. அந்த இரண்டு ஒலிவமரக் கதவுகளிலும் கேருபீன்களையும், பேரீச்ச மரங்களையும், விரிந்த பூக்களையும் செதுக்கினான். செதுக்கிய கேருபீன்களையும், பேரீச்ச மரங்களையும் அடித்த தங்கத்தகட்டால் மூடினான்.

  11. இவ்விதமாய் அவன் பிரதான மண்டபத்தின் வாசலிலும் ஒலிவ மரத்தால் நாற்கோண வடிவ பக்கநிலைகளைச் செய்துவைத்தான்.

  12. அத்துடன் எழுதியிருக்கிறபடி மக்கள் மலைநாட்டிற்குப் போய் ஒலிவமரம், காட்டொலிவமரம், மிருதுச்செடி, பேரீட்சைமரம், அத்திமரம் ஆகியவற்றின் மரக்கொப்புகளை எடுக்கவேண்டும் எனவும், அவற்றினால் கூடாரங்களை அமைக்கும்படி எல்லா பட்டணங்களிலும், எருசலேமிலும் பகிரங்கமாக அறிவிக்கவேண்டும் எனவும் அறிந்துகொண்டார்கள்.

  13. அவன் பழுக்கும் முன்னமே பழம் உதிர்ந்துபோன திராட்சைக் கொடியைப்போலவும், பூக்கள் உதிர்கின்ற ஒலிவமரத்தைப் போலவும் இருப்பான்.

  14. ஆயினும், இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா அறிவிக்கிறதாவது: “ஒலிவ மரத்தை உலுக்கி பழம் பறித்தபின், அதன் உச்சிக் கொப்புகளில் இரண்டு மூன்று பழங்கள் விழாமல் மீதமிருப்பதுபோலவும், பழம் நிறைந்த கொப்புகளில் நாலைந்து பழங்கள் விழாமல் மீந்திருப்பது போலவும் ஒரு சிலர் மீதமிருப்பார்கள்.”

  15. அவன் என்னிடம், “நீ காண்பது என்ன?” என்று கேட்டான். அதற்கு நான், “முழுவதும் தங்கத்தினாலான குத்துவிளக்கினைக் காண்கிறேன், அதன் உச்சியில் ஒரு கிண்ணமும், ஏழு அகல் விளக்குகளும், அந்த விளக்குகளுக்கான ஏழு குழாய்களும் இருக்கின்றன என்றேன்.

  16. மேலும் அதன் அருகில் இரண்டு ஒலிவமரங்கள் இருக்கின்றன. ஒன்று கிண்ணத்தின் வலதுபக்கத்திலும், மற்றொன்று அதன் இடது பக்கத்திலும் இருக்கின்றன என்றேன்.”

  17. என்னுடன் பேசிய தூதனிடம் நான், “ஐயா, இவை என்ன?” என்று கேட்டேன்.

  18. அதற்கு அவன், “இவைகள் என்ன என்பது உனக்குத் தெரியாதா?” என்று கேட்டான். நான், “தெரியாது ஐயா” என்றேன்.

  19. எனவே அவன் என்னிடம், “செருபாபேலுக்கு வந்த யெகோவாவின் வார்த்தை இதுவே: உன் வலிமையினாலும் அல்ல; உன் வல்லமையினாலும் அல்ல. என்னுடைய ஆவியானவராலேயே ஆகும்” என சேனைகளின் யெகோவா சொல்கிறார்.

  20. “மாபெரும் மலையே, நீ எம்மாத்திரம்? செருபாபேலின் முன்பாக நீ சமனான தரையாவாய். அவன்முன் ஒன்றும் தடையாயிருக்காது. அதன்பின், ‘இறைவன் ஆசீர்வதிப்பாராக! இறைவன் ஆசீர்வதிப்பாராக!’ என்ற மக்களின் ஆர்ப்பரிப்புடன் செருபாபேல் ஆலயத்தின் தலைக்கல்லைக் கொண்டுவந்து கட்டிடத்தை முடிப்பான் என்றான்.”

  21. அப்பொழுது யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது:

  22. “செருபாபேலின் கைகளே இந்த ஆலயத்தின் அஸ்திபாரத்தைப் போட்டன; அவனுடைய கைகளே இதைக் கட்டியும் முடிக்கும். அப்பொழுது சேனைகளின் யெகோவாவே என்னை உங்களிடம் அனுப்பினார் என்பதை நீங்கள் அறிந்துகொள்வீர்கள்.

  23. “இது சிறிய செயல்களின் நாளாய் இருந்தாலும் அதை அவமதிக்க வேண்டாம், ஏனெனில் இறைவன் தமது வேலையின் ஆரம்பத்திலும் மகிழ்ச்சிகொள்கிறார். செருபாபேலின் கையில் தூக்குநூலைக் காணும்போது மனிதர் யாவரும் அகமகிழ்வார்கள். நீ கண்ட இந்த ஏழு கண்களும் பூமியைச் சுற்றிப் பார்த்துக் கண்காணிக்கிற யெகோவாவின் கண்களாகும் என்றான்.”

  24. அப்பொழுது நான் அந்தத் தூதனிடம், “குத்துவிளக்கின் வலதுபக்கத்திலும், இடது பக்கத்திலும் இருக்கும் ஒலிவமரங்கள் இரண்டும் எதைக் குறிக்கின்றன?” என்று கேட்டேன்.

  25. திரும்பவும் நான் அவனிடம், “தங்க நிறமான எண்ணெயை வடியவிடும் தங்கக் குழாய்கள் இரண்டினுடைய அருகில் காணப்படும் ஒலிவமரக் கிளைகள் இரண்டும் எதைக் குறிக்கின்றன?” என்றும் கேட்டேன்.