Skip to content

Law பற்றிய பைபிள் வசனங்கள்

175 வசனங்கள் · 2 அம்சங்கள்

முக்கிய பைபிள் வசனங்கள்

புத்தகத்தின்படி வடிகட்டு
  1. ஒருவன் மோசேயின் சட்டத்தைச் சரியாகப் பயன்படுத்தினால் அது நல்லது என்று நாம் அறிவோம்.

  2. மோசேயின் சட்டம் நீதிமான்களுக்காக அல்ல, சட்டத்தை மீறுபவர்களுக்காகவே ஆக்கப்பட்டது என்பதையும், நாம் அறிவோம். கலகக்காரர், பக்தியில்லாதவர், பாவம் செய்பவர், பரிசுத்தம் இல்லாதவர், நம்பிக்கை இல்லாதவர், தங்கள் தகப்பனையும் தாயையும் கொலைசெய்பவர், கொலைகாரர்,

  3. விபசாரம் செய்வோர், ஆண்புணர்ச்சியில் ஈடுபடுவோர், அடிமை வியாபாரம் செய்வோர், பொய்யர், பொய் சத்தியம் செய்வோர் ஆகியோருக்காகவும், நலமான போதனைக்கு மாறாக எது உள்ளதோ, அவற்றை வெளிப்படுத்தவுமே மோசேயின் சட்டம் ஆக்கப்பட்டிருக்கிறது.

  4. அவர் பூமியில் இருந்திருந்தால், ஒரு ஆசாரியனாய் இருந்திருக்கமாட்டார். ஏனெனில், மோசேயின் சட்டத்தில் குறிப்பிட்டிருக்கிறபடி, காணிக்கைகளைச் செலுத்துகிற ஆசாரியர்கள் ஏற்கெனவே இருக்கிறார்கள்.

  5. அவர்கள் பரலோகத்திலுள்ள, உண்மையான பரிசுத்த இடத்தின் மாதிரியாகவும், நிழலாகவும் இங்கே இருக்கின்ற ஒரு பரிசுத்த இடத்திலேயே ஊழியம் செய்கிறார்கள். இதனாலேயே மோசே, அந்த இறைசமுகக் கூடாரத்தை அமைக்கத் தொடங்குமுன், அவனுக்கு இறைவன்: “மலையின்மேல் உனக்குக் காண்பிக்கப்பட்ட அந்த மாதிரியின்படியே எல்லாவற்றையும் செய்யும்படி நீ கவனமாயிரு” என்று எச்சரிக்கை கொடுத்தார்.

  6. இயேசு பெற்றுக்கொண்ட ஊழியம் முந்தைய ஆசாரியர்களின் ஊழியத்தைவிட மேன்மையானது. ஏனெனில், இயேசுவை நடுவராகக் கொண்ட புதிய உடன்படிக்கை, மேன்மையான வாக்குத்தத்தங்களைக் கொண்டு ஏற்படுத்தப்பட்டது, அதினால், அது பழைய உடன்படிக்கையைப் பார்க்கிலும் சிறந்ததாயிருக்கிறது.

  7. ஏனெனில், முதலாவது உடன்படிக்கை குறையற்றதாய் இருந்தால், இரண்டாவது உடன்படிக்கைக்கு அவசியம் ஏற்பட்டிருக்காது.

  8. ஆனால், இறைவனோ மக்களில் குறைபாட்டைக் கண்டதினாலேயே: “கர்த்தர் அறிவிக்கிறதாவது, இஸ்ரயேல் குடும்பத்தோடும், யூதா குடும்பத்தோடும் நான் புதிய உடன்படிக்கையைச் செய்துகொள்ளும் நாட்கள் வருகிறது.

  9. நான் அவர்களுடைய முற்பிதாக்களை என்னுடைய கரத்தினால் எகிப்திலிருந்து வெளியே வழிநடத்திக் கொண்டுவந்தபோது, நான் அவர்களுடன் செய்த உடன்படிக்கையைப்போல் இருப்பதில்லை; ஏனெனில், அவர்கள் என் உடன்படிக்கையில் நிலைத்திருக்கவில்லை. அதனால் நான், அவர்கள்மேல் கவனம் செலுத்தாமல் இருந்தேன், என்று கர்த்தர் அறிவிக்கிறார்.

  10. அந்த நாட்களுக்குப்பின்பு, நான் இஸ்ரயேல் குடும்பத்துடன் செய்துகொள்ளும் உடன்படிக்கை இதுவே என்று கர்த்தர் அறிவிக்கிறார். நான் எனது சட்டங்களை அவர்களுடைய மனங்களில் வைப்பேன். அவற்றை அவர்களுடைய இருதயங்களில் எழுதுவேன். நான் அவர்களுடைய இறைவனாய் இருப்பேன். அவர்கள் எனது மக்களாய் இருப்பார்கள்.

  11. இனிமேல் ஒருவன் தன் அயலானுக்கோ, அல்லது தன் சகோதரனுக்கோ, ‘கர்த்தரை அறிந்துகொள்’ என்று போதிக்க வேண்டியிருக்காது. ஏனெனில், சிறியவர்களிலிருந்து பெரியவர்கள்வரை எல்லோரும் என்னை அறிந்துகொள்வார்கள்.

  12. நான் அவர்களுடைய அநியாயங்களை மன்னிப்பேன். அவர்களுடைய பாவங்களை ஒருபோதும் ஞாபகத்தில் வைத்திருக்கமாட்டேன்.”

  13. இந்த உடன்படிக்கையை “புதியது,” என்று சொல்கிறதினாலே, அவர் முதலாவது உடன்படிக்கையை பழமையாக்கினார். எனவே அது பழமையானதும், நாள்பட்டதும், மறைந்து போகிறதுமாயிற்று.

  14. முதலாவது இறைசமுகக் கூடாரம் இருக்கும்வரைக்கும், மகா பரிசுத்த இடத்திற்கான வழி இன்னும் திறக்கப்படவில்லை என்பதை பரிசுத்த ஆவியானவர் இதன்மூலம் காண்பிக்கிறார்.

  15. இந்தக் கூடாரம் தற்காலத்தைக் குறிப்பிட்டுக் காண்பிக்கின்ற ஒரு மாதிரியே. செலுத்தப்பட்ட காணிக்கைகளும் பலிகளும் வழிபடுகிறவர்களின் மனசாட்சியை தூய்மையடையச் செய்ய இயலாதவை என்பதையே இவை தெளிவுபடுத்துகின்றன.

  16. இவை உண்பது பற்றியும், குடிப்பது பற்றியும், பல்வேறுபட்ட பாரம்பரிய சுத்திகரிப்புகள் பற்றியும் கொடுக்கப்பட்ட வெளியான சடங்கு விதிமுறைகளே. புதிய முறை ஏற்படுத்தப்படும் காலம்வரைக்குமே இவை செல்லுபடியானதாய் இருந்தன.

  17. நமக்கு வரவிருக்கிற நன்மைகளைக் கொடுக்கிற பிரதான ஆசாரியராய் கிறிஸ்து வந்தபோது, அவர் மேலானதும், நிறைவானதும், மனிதனால் செய்யப்படாததும், அதாவது இவ்வுலகப் படைப்பின் ஒரு பகுதியாக இல்லாத இறைசமுகக் கூடாரத்தின் வழியாகவே சென்றார்.

  18. அவர் மகா பரிசுத்த இடத்திற்குள் வெள்ளாடுகள், இளங்காளைகள் ஆகியவற்றின் இரத்தத்தோடு செல்லாமல், தமது இரத்தத்துடனேயே ஒரேதரமாக அதற்குள் சென்று, நித்திய மீட்பை நமக்காகப் பெற்றுக்கொடுத்தார்.

  19. வெள்ளாடுகள், இளங்காளைகள் ஆகியவற்றின் இரத்தம் சடங்கு முறைப்படி அசுத்தமாயிருந்தவர்கள்மேல் தெளிக்கப்பட்டது. எரிக்கப்பட்ட கிடாரி பசுவின் சாம்பலும் அவர்கள்மேல் தூவப்பட்டது. இது அவர்களை வெளி அசுத்தத்திலிருந்து சுத்திகரித்தது.

  20. அப்படியானால், தம்மைத்தாமே நித்திய ஆவியானவர் மூலமாக, இறைவனுக்கு மாசற்றவராய் ஒப்புக்கொடுத்த கிறிஸ்துவின் இரத்தம் எவ்வளவு அதிகமாக நம்முடைய மனசாட்சிகளை மரண செயல்களிலிருந்து தூய்மைப்படுத்தி, நம்மை ஜீவனுள்ள இறைவனுக்கு ஊழியம் செய்யக்கூடியவர்களாக்கும்.

  21. ஆகையால் அழைக்கப்பட்டவர்கள் எல்லோருக்கும் இறைவனால் வாக்குப்பண்ணப்பட்ட நித்தியமான உரிமைச்சொத்தைப் பெற்றுக்கொள்ளும்படியே கிறிஸ்து புதிய உடன்படிக்கையின் நடுவராக இருக்கிறார். ஏனெனில், முதலாவது உடன்படிக்கையின்கீழ், மக்கள் செய்த பாவங்களிலிருந்து, அவர்களை மீட்கும்படியாகவே அவர் மரித்தார்.

  22. ஒரு மரணசாசனத்தைப் பொறுத்தவரையில், அதை ஏற்படுத்தியவர் இறந்துவிட்டார் என்பதை நிரூபிப்பது அவசியமாகும்.

  23. அதை எழுதியவர் உயிரோடிருக்கும்வரை அது நடைமுறைக்கு வருவதில்லை; அவர் இறந்தபின்பே, அது நடைமுறைக்கு வரும்.

  24. இதனாலேயே இரத்தத்தின் மூலம் அல்லாமல், முதல் உடன்படிக்கையும் செயல்படவில்லை.

  25. சட்டத்திலுள்ள எல்லாக் கட்டளைகளையும் மோசே இஸ்ரயேல் மக்களுக்கு அறிவித்தான். அதற்குப் பின்பு, அவன் இளங்காளைகள், வெள்ளாடுகள் ஆகியவற்றின் இரத்தத்தைத் தண்ணீருடன் கலந்து, அதை அந்தப் புத்தகச்சுருளின்மேலும், எல்லா மக்களின்மேலும் சிவப்புக் கம்பளித் துணியினாலும், ஈசோப்பு செடியினாலும் தெளித்தான்.