Lamentations பற்றிய பைபிள் வசனங்கள்
முக்கிய பைபிள் வசனங்கள்
ஆராம் நகராயிம், ஆராம் சேபா என்ற அரசுகளோடு தாவீது போர் செய்கையில் யோவாப் உப்புப் பள்ளத்தாக்கில் பன்னீராயிரம் ஏதோமியரை வெற்றிக்கொண்டபோது, “உடன்படிக்கையின் லீலிமலர்” என்ற இசையில் மிக்தாம் என்னும் சங்கீதத்தை போதனையாக தாவீது பாடி பாடகர் குழுத் தலைவனுக்கு ஒப்புவிக்கப்பட்ட சங்கீதம். இறைவனே, நீர் எங்களைப் புறக்கணித்துவிட்டீர், எங்களை சிதறடித்துவிட்டீர்; நீர் கோபமாயிருந்தீர்; மறுபடியும் எங்களிடம் திரும்பி வாரும்.
நீர் நாட்டை அதிரப்பண்ணி, அதைப் பிளந்து விட்டீர்; அசைந்து கொண்டிருக்கும் அந்த வெடிப்புகளைச் சரிப்படுத்தும்.
கடினமான காரியங்களை நீர் உமது மக்களை காணச்செய்தீர்; தடுமாறச் செய்யும் திராட்சை இரசத்தை எங்களுக்குக் குடிக்கக் கொடுத்திருக்கிறீர்.
“நீ இஸ்ரயேலரின் இளவரசர்களைக் குறித்துப் புலம்பு.
நீ சொல்லவேண்டியதாவது: “ ‘சிங்கங்களுக்கு நடுவில் உன் தாய் ஒரு பெண்சிங்கமாயிருந்தாள். அவள் இளஞ்சிங்கங்கள் மத்தியில் படுத்திருந்து தன் குட்டிகளை வளர்த்தாள்.
தன் குட்டிகளில் ஒன்றை அவள் வளர்த்தாள். அக்குட்டி ஒரு பலமுள்ள சிங்கம் ஆனான். அவன் இரையைக் கிழிக்கப்பழகி மனிதர்களை விழுங்கினான்.
நாடுகள் அவனைப்பற்றிக் கேள்விப்பட்டபோது, அவன் அவர்களுடைய குழியில் அகப்பட்டான். அவர்கள் அவனை விலங்கிட்டு எகிப்திற்கு நடத்திச்சென்றார்கள்.
“ ‘தன் நம்பிக்கை நிறைவேறவில்லையென்றும், தன் எதிர்பார்ப்பு சிதைந்தது என்றும் தாய்ச்சிங்கம் கண்டபோது, தன் குட்டிகளில் வேறொன்றை எடுத்து பலமுள்ள சிங்கமாக்கியது.
அது இப்பொழுது பாலசிங்கமானதால், சிங்கங்கள் மத்தியில் இரைதேடித் திரிந்தது. அது இரையைக் கிழிக்கப்பழகி மனிதரை விழுங்கியது.
அவர்களுடைய அரண்களை நொறுக்கி, நகரங்களை அழித்தது. நாடும் அதிலுள்ள அனைவரும் அதனுடைய கர்ஜனையைக் கேட்டுக் கலங்கினார்கள்.
அப்பொழுது எல்லாப் பக்கமும் சூழ்ந்திருக்கும் பிறநாடுகள், அதை எதிர்த்து வந்தன. அதன்மேல் தங்கள் வலையை வீசியபோது, அது அவர்களுடைய குழியில் அகப்பட்டது.
அவர்கள் அதனை விலங்கிட்டு கூண்டிலிட்டு, பாபிலோன் அரசனிடம் கொண்டுசென்று அங்கே சிறையிட்டார்கள். எனவே இஸ்ரயேலின் மலைகளில் அதனுடைய கர்ஜனை அதற்குப்பின் கேட்கவேயில்லை.
“ ‘உன் தாய் உன் திராட்சைத் தோட்டத்தில் தண்ணீரின் அருகே நாட்டப்பட்ட திராட்சைக்கொடியைப் போலிருந்தாள்! தண்ணீர் வளம் மிகுந்த காரணத்தால் கிளைகள் செழித்து பழங்களும் பெருகின.
அதன் கிளை உறுதியாய் இருந்ததினால் அரச செங்கோலுக்குத் தகுதியாயிற்று. அடர்ந்து வளர்ந்த மற்ற இலைகளுக்கு மேலாய் அது உயர்ந்து நின்றது. தன் உயரத்தாலும், பல கிளைகளாலும் அது சிறப்பாய்க் காட்சியளித்தது.
ஆனால், அந்தத் திராட்சைக்கொடி கடுங்கோபத்தோடு வேரோடு பிடுங்கப்பட்டுத் தரையில் எறியப்பட்டது. கீழ்க்காற்று அதனை வாடப்பண்ணி பழங்களும் உதிர்க்கப்பட்டன. அதன் பலத்த கிளைகள் வாடிப்போயின. நெருப்பு அவைகளை எரித்தது.
இப்பொழுது அது வறண்ட வளமற்ற பாலைவனத்தில் நாட்டப்பட்டுள்ளது.
முக்கிய கிளை ஒன்றிலிருந்து இருந்து நெருப்பு எழும்பி, அதன் பழத்தைச் சுட்டெரித்தது. அரச செங்கோலுக்குத் தகுதிபெற இனியொரு கிளையும் அதில் விடப்படவில்லை.’ இது ஒரு புலம்பல் புலம்பலாகவே, உபயோகிக்கப்பட வேண்டும்.”
“மனுபுத்திரனே, நீ தீருவின் அரசனைக் குறித்துப் புலம்பிச் சொல்லவேண்டியதாவது, ‘ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே. “ ‘நீ ஞானத்தால் நிறைந்து, அழகில் முழுநிறைவுபெற்று, முழுநிறைவின் மாதிரியாய்த் திகழ்ந்தாய்.
இறைவனின் தோட்டமாகிய ஏதேனில் நீ இருந்தாய். சிவப்பு இரத்தினம், புஷ்பராகம், வைரம், பளிங்கு, கோமேதகம், யஸ்பி, இந்திரநீலம், மரகதம், மாணிக்கம் ஆகிய அத்தனை விலைமதிப்புள்ள கற்களும் உன்னை அலங்கரித்தன. இவை எல்லாம் தங்க வேலைப்பாட்டுடன் அமைந்திருந்தன. நீ உண்டாக்கப்பட்ட நாளிலேயே அவை ஆயத்தம் செய்யப்பட்டிருந்தன.
நீ காவல்செய்யும் கேருபீனாக அபிஷேகம் செய்யப்பட்டாய். ஏனெனில் அப்படியே நான் உன்னை நியமித்தேன். இறைவனின் பரிசுத்த மலையில் நீ இருந்தாய். நெருப்புக்கனல் வீசும் கற்களிடையே நீ நடந்தாய்.
நீ உண்டாக்கப்பட்ட நாள் தொடங்கி, கொடுமை உன்னில் காணப்படுமட்டும் உன்னுடைய வழிகளில் நீ குற்றமற்றிருந்தாய்.
உன்னுடைய வியாபாரத்தின் மிகுதியினால், நீ கொடுமை நிறைந்தவனாகிப் பாவம் செய்தாய். ஆகவே, காவல்காக்கும் கேருபே, இவ்விதமாய் நான் உன்னை நெருப்புக்கனல் வீசும் கற்களினிடையிலிருந்து வெளியேற்றினேன். நான் உன்னை இறைவனின் மலையிலிருந்து அவமானத்தோடு துரத்திவிட்டேன்.
உன் அழகினிமித்தம் உன் இருதயம் பெருமைகொண்டது, உன் செல்வச் சிறப்பின் காரணத்தால் உன் ஞானத்தை சீர் கெடுத்துக்கொண்டாய். ஆதலால் உன்னைப் பூமியை நோக்கி எறிந்துவிட்டேன். அரசர்கள் முன் உன்னைக் காட்சிப் பொருளாக்கினேன்.
உன் அநேக பாவங்களாலும், அநீதியான வர்த்தகத்தினாலும் பரிசுத்த இடங்களின் தூய்மையை நீ கெடுத்தாய். ஆகையால் நான் ஒரு நெருப்பை உன்னிலிருந்து புறப்படச் செய்தேன். அது உன்னைச் சுட்டெரித்தது. மேலும், உன்னைப் பார்த்துக்கொண்டிருந்த எல்லோருடைய பார்வையிலும் பூமியிலே உன்னைச் சாம்பலாக்கினேன்.
உன்னை அறிந்திருந்த எல்லா நாடுகளும் உன்னைக் கண்டு திகைத்தார்கள். உனக்கு ஒரு பயங்கரமான முடிவு வந்துவிட்டது. நீ இனி ஒருபோதும் இருக்கமாட்டாய்.’ ”