God
God பற்றிக் குறிப்பிடும் வசனங்கள்
யெகோவா மோசேயிடம் சொன்னதாவது:
“கன்றுக்குட்டியோ, செம்மறியாட்டு குட்டியோ அல்லது வெள்ளாட்டு குட்டியோ பிறக்கும்போது அது தன் தாயுடன் ஏழு நாட்கள் தொடர்ந்து இருக்கவேண்டும். எட்டாம் நாளிலிருந்து யெகோவாவுக்கு நெருப்பினால் செலுத்தப்படும் காணிக்கையாக அது ஏற்றுக்கொள்ளப்படும்.
“நீங்கள் யெகோவாவுக்கு நன்றிக் காணிக்கை ஒன்றைப் பலியிடும்போது, அது உங்கள் சார்பாக ஏற்றுக்கொள்ளப்படும் விதத்தில் அதைப் பலியிடுங்கள்.
அந்த நாளிலேயே நீங்கள் அதைச் சாப்பிடவேண்டும். காலைவரை ஒன்றையும் விட்டுவைக்கவேண்டாம். நானே யெகோவா.
“என் கட்டளைகளைக் கைக்கொண்டு அவற்றைப் பின்பற்றுங்கள். நானே யெகோவா.
என் பரிசுத்த பெயரை அசுத்தமாக்க வேண்டாம். இஸ்ரயேலரால் நான் பரிசுத்தர் என்று அங்கீகரிக்கப்பட வேண்டும். உங்களைப் பரிசுத்தமாக்குகிற யெகோவா நானே.
உங்கள் இறைவனாயிருக்கும்படி நானே உங்களை எகிப்து நாட்டிலிருந்து கொண்டுவந்தேன். நானே யெகோவா” என்றார்.
யெகோவா மோசேயிடம்,
“இஸ்ரயேலருடன் நீ பேசி, அவர்களுக்கு சொல்லவேண்டியதாவது: இவை நியமிக்கப்பட்ட எனது பண்டிகைகள். யெகோவாவுக்குரிய நியமிக்கப்பட்ட பண்டிகைகள் இவையே. இவைகளை நீங்கள் பரிசுத்த சபை கூட்டங்களாகப் பிரசித்தப்படுத்த வேண்டும்.
“ ‘நீங்கள் ஆறுநாட்கள் வேலை செய்யலாம். ஆனால் ஏழாம்நாளோ இளைப்பாறுதலுக்குரிய ஒரு ஓய்வுநாள். அது பரிசுத்த சபைக்கூடும் நாள். அந்த நாளில் நீங்கள் எந்த ஒரு வேலையையும் செய்யக்கூடாது. நீங்கள் எங்கு வாழ்ந்தாலும் அது யெகோவாவுக்குரிய ஓய்வுநாளாகும்.
“ ‘யெகோவாவினால் நியமிக்கப்பட்ட பண்டிகைகள் இவையே: அவைகளுக்காக நியமிக்கப்பட்ட காலங்களில், நீங்கள் அவைகளைப் பரிசுத்த சபை கூடுதல்களாகப் பிரசித்தப்படுத்த வேண்டும்.
முதலாம் மாதம் பதினான்காம் நாள் பொழுதுபடும் வேளையில் யெகோவாவின் பஸ்கா பண்டிகை ஆரம்பமாகும்.
அதே மாதம் பதினைந்தாம் நாளில் யெகோவாவின் புளிப்பில்லாத அப்பப்பண்டிகை ஆரம்பமாகும். ஏழுநாட்களுக்கு நீங்கள் புளிப்பில்லாமல் செய்யப்பட்ட அப்பங்களைச் சாப்பிடவேண்டும்.
யெகோவாவுக்கு நெருப்பினால் செலுத்தப்படும் காணிக்கையை ஏழுநாட்களுக்குக் கொண்டுவர வேண்டும். ஏழாம்நாளில் பரிசுத்த சபையைக் கூட்டவேண்டும். அந்த நாளில் வழக்கமான வேலைகள் எதையும் செய்யக்கூடாது’ ” என்றார்.
யெகோவா மோசேயிடம்,
“நீ இஸ்ரயேல் மக்களிடம் பேசி, அவர்களிடம் சொல்லவேண்டியதாவது: ‘நான் உங்களுக்குக் கொடுக்கப்போகும் நாட்டிற்குள் நீங்கள் போய், அதன் விளைச்சலை அறுவடை செய்யும்போது, உங்கள் அறுவடையின் முதலாவது தானியக் கதிர்க்கட்டை ஆசாரியனிடம் கொண்டுவர வேண்டும்.
அது உங்கள் சார்பாக ஏற்றுக்கொள்ளப்படும்படி ஆசாரியன் அந்தக் கதிர்க்கட்டை யெகோவாவுக்கு முன்பாக அசைவாட்டவேண்டும். ஓய்வுநாளுக்கு அடுத்தநாள் ஆசாரியன் அதை அசைவாட்டவேண்டும்.
அந்தக் கதிர்க்கட்டை அசைவாட்டும் அந்நாளிலே ஒரு வயதுடைய குறைபாடற்ற செம்மறியாட்டுக் குட்டியை யெகோவாவுக்குத் தகன காணிக்கையாகப் பலியிடவேண்டும்.
அதனுடன் அதற்குரிய தானியக் காணிக்கையாக, ஒரு எப்பாவின் பத்தில் இரண்டு பங்கு அளவு எண்ணெய்விட்டுப் பிசைந்த சிறந்த மாவாக அதைச் செலுத்தவேண்டும். அது மகிழ்ச்சியூட்டும் நறுமணமாக யெகோவாவுக்கு நெருப்பினால் செலுத்தப்படும் காணிக்கையாகும். அத்துடன் நான்கில் ஒரு பங்கு ஹின் அளவான திராட்சை இரசத்தை, அதற்குரிய பானகாணிக்கையாகவும் செலுத்தவேண்டும்.
நீங்கள் உங்கள் இறைவனுக்கு முதற்பலனில் இக்காணிக்கையைக் கொண்டுவரும் அந்த நாள்வரை, அதிலிருந்து எந்தவொரு அப்பத்தையோ, வறுத்த தானியத்தையோ, பச்சைத் தானியத்தையோ சாப்பிடக்கூடாது. நீங்கள் எங்கே வாழ்ந்தாலும், தலைமுறைதோறும் இது உங்களுக்கு நிரந்தர நியமமாய் இருக்கவேண்டும்.
ஏழாவது ஓய்வுநாளுக்கு அடுத்தநாளான ஐம்பதாவது நாள்வரை எண்ணுங்கள். அதன்பின் யெகோவாவுக்குப் புதிய தானியக் காணிக்கையைக் கொண்டுவாருங்கள்.
நீங்கள் எங்கு வாழ்ந்தாலும் பத்தில் இரண்டு எப்பா அளவான சிறந்த மாவினால் புளிப்பூட்டப்பட்டுத் தயாரிக்கப்பட்ட இரண்டு அப்பங்களை, யெகோவாவுக்கான முதற்பலன்களின் அசைவாட்டும் காணிக்கையாகக் கொண்டுவாருங்கள்.
இந்த அப்பத்துடன், ஏழு செம்மறியாட்டுக் கடாக்குட்டிகளைக் கொண்டுவர வேண்டும். ஒவ்வொன்றும் ஒரு வயதுடையதும், குறைபாடற்றதுமாய் இருக்கவேண்டும். அவற்றுடன் ஒரு காளையையும், இரண்டு செம்மறியாட்டுக் கடாக்களையும் கொண்டுவாருங்கள். இவை அவர்களுடைய தானியக் காணிக்கைகளோடும், பானகாணிக்கைகளோடும் யெகோவாவுக்குரிய தகன காணிக்கையாக இருக்கும். இது யெகோவாவுக்கு மகிழ்ச்சியூட்டும் ஒரு நறுமணமாக நெருப்பினால் செலுத்தப்படும் காணிக்கையாகும்.
ஆசாரியன் இந்த இரண்டு செம்மறியாட்டுக் குட்டிகளையும் முதற்பலன்களின் அப்பத்துடன் யெகோவாவின் முன்னிலையில் அசைவாட்டும் காணிக்கையாக அசைவாட்டவேண்டும். யெகோவாவுக்குப் பரிசுத்தமான இந்தக் காணிக்கை பொருட்கள் ஆசாரியனுக்குச் சொந்தமாகும்.
“ ‘நீங்கள் உங்கள் நிலத்தில் அறுவடை செய்யும்போது, வயலின் ஓரங்களில் உள்ளவைகளை அறுவடை செய்யாமலும், அறுவடையில் சிந்தியதைப் பொறுக்காமலும் விட்டுவிடுங்கள். இவைகளை ஏழைகளுக்கும், பிறநாட்டினருக்கும் விட்டுவிடுங்கள். உங்கள் இறைவனாகிய யெகோவா நானே’ ” என்றார்.