God
God பற்றிக் குறிப்பிடும் வசனங்கள்
“உமக்கெதிராக உமது மக்கள் பாவம் செய்ததினால், வானங்கள் அடைக்கப்பட்டு, மழை இல்லாமல் போகும்போது, நீர் அவர்களைத் துன்புறுத்தியதால், இந்த இடத்தை நோக்கி அவர்கள் மன்றாடுவார்கள். அவ்வாறு அவர்கள் உமது பெயரை அறிக்கையிட்டு, தங்கள் பாவத்தைவிட்டு மனந்திரும்பி வேண்டும்போது,
நீர் பரலோகத்திலிருந்து கேட்டு, உமது அடியவர்களும், உமது மக்களுமான இஸ்ரயேலரின் பாவத்தை மன்னியும். அவர்கள் வாழ்வதற்கு சரியான வழியைக் கற்பியும். நீர் உமது மக்களுக்கு உரிமைச்சொத்தாகக் கொடுத்த நாட்டில் மழையை அனுப்பும்.
அப்பொழுது உமது மக்களாகிய இஸ்ரயேலர் எவராவது தன் வேதனைகளையும் துன்பங்களையும் உணர்ந்தவர்களாய், இந்த ஆலயத்தை நோக்கித் தங்கள் கைகளை விரித்து மன்றாட்டையோ விண்ணப்பத்தையோ செய்தால்,
உமது உறைவிடமாகிய பரலோகத்திலிருந்து கேட்டு மன்னியும். நீர் ஒவ்வொருவருடைய இருதயத்தை அறிந்திருக்கிறபடியால், அவனவன் செய்த செயல்களுக்குமேற்ப அவனவனுக்குச் செய்யும். மனிதரின் இருதயங்களை அறிந்திருக்கிறவர் நீர் மட்டுமே.
அதனால் நீர் எங்கள் முற்பிதாக்களுக்குக் கொடுத்த நாட்டில், அவர்கள் வாழும் காலமெல்லாம் உமக்குப் பயந்து, உமது வழியில் நடப்பார்கள்.
“உம்முடைய மக்களான இஸ்ரயேலரைச் சேராதவனும், தூரதேசத்திலிருந்து வந்த அந்நியன் உமது பெரிதான பெயரின் நிமித்தமும், உமது வலிமைமிக்க கரத்தின் நிமித்தமும், நீட்டிய புயத்தின் நிமித்தமும் தூரதேசத்திலிருந்து வந்த அவன் இந்த ஆலயத்தை நோக்கி மன்றாடும்போது,
நீர் உமது உறைவிடமாகிய பரலோகத்திலிருந்து அதைக்கேட்டு அந்த அந்நியன் உம்மிடம் கேட்பது எதுவானாலும் அதைச் செய்யும். அப்பொழுது பூமியில் எல்லா மக்களும் உமது பெயரை அறிந்து, உமது சொந்த மக்களாகிய இஸ்ரயேலர் நடப்பதுபோல் உமக்குப் பயந்து நடப்பார்கள். அத்துடன் நான் கட்டிய இந்த ஆலயத்தில் உமது பெயர் விளங்குகிறது என்றும் அறிவார்கள்.
“உமது மக்கள் தங்கள் பகைவர்களுக்கெதிராக போருக்குப் போகக்கூடும். அவ்வாறு நீர் அவர்களை எங்கே அனுப்பினாலும், நீர் தெரிந்துகொண்ட இந்தப் பட்டணத்தையும், உமது பெயருக்கு நான் கட்டிய இந்த ஆலயத்தையும் நோக்கி அவர்கள் மன்றாடும்போது,
பரலோகத்திலிருந்து அவர்களுடைய மன்றாட்டையும், வேண்டுதலையும் கேட்டு அவர்களுடைய சார்பாய் செயலாற்றும்.
“பாவம் செய்யாதவன் எவனும் இல்லை. அதனால் அவர்கள் உமக்கெதிராகப் பாவம் செய்வார்கள்; அப்பொழுது நீர் அவர்கள்மேல் கோபங்கொண்டு, அவர்களை அவர்களின் பகைவரிடம் ஒப்புக்கொடுத்தால், பகைவர்கள் அவர்களைத் தூரத்திலோ அருகிலோ உள்ள நாட்டிற்கு சிறைபிடித்துக்கொண்டு போவார்கள்.
அவர்கள் தாங்கள் கைதிகளாய் இருக்கும் நாட்டில் உணர்ந்து மனந்திரும்பி, ‘நாங்கள் பாவஞ்செய்து, தீமையான செயல்களைச் செய்து, கொடுமையாய் நடந்தோம்’ என்று சிறைபட்டுப்போன நாட்டிலே உம்மிடம் அவர்கள் கெஞ்சி,
அவர்கள் தாங்கள் சிறைப்பட்டிருக்கும் நாட்டில் இருந்து, தங்கள் முழு இருதயத்தோடும், முழு ஆத்துமாவோடும் உம்மிடத்தில் திரும்பி, நீர் அவர்களுடைய முற்பிதாக்களுக்குக் கொடுத்த நாட்டையும், நீர் தெரிந்துகொண்ட பட்டணத்தையும், நான் உமது பெயருக்கென கட்டிய ஆலயத்தையும் நோக்கி உம்மை நோக்கி அவர்கள் மன்றாடினால்,
நீர் குடியிருக்கும் இடமான பரலோகத்திலிருந்து அவர்கள் மன்றாட்டையும் கெஞ்சுதலையும் கேட்டு, அவர்கள் சார்பாய் செயலாற்றும். உமக்கெதிராகப் பாவஞ்செய்த உமது மக்களை மன்னியும்.
“என் இறைவனே, இந்த இடத்தில் செய்யப்படும் விண்ணப்பங்களுக்கு உமது கண்களும் காதுகளும் கவனமாகத் திறந்திருக்கட்டும்.
“இப்பொழுதும் இறைவனாகிய யெகோவாவே எழுந்திரும்,
இறைவனாகிய யெகோவாவே, நீர் அபிஷேகித்தவரை புறக்கணியாதேயும்.
சாலொமோன் ஜெபித்து முடித்தபோது, பரலோகத்திலிருந்து நெருப்பு கீழே இறங்கி தகன காணிக்கையையும், பலிகளையும் எரித்துப்போட்டது; யெகோவாவின் மகிமையும் ஆலயத்தை நிரப்பிற்று.
யெகோவாவின் மகிமை ஆலயத்தை நிரப்பியதனால் ஆசாரியர்களால் ஆலயத்திற்குள் போகமுடியவில்லை.
நெருப்பு கீழே இறங்கினதையும், யெகோவாவின் மகிமை ஆலயத்திற்கு மேலாய் இருப்பதையும் எல்லா இஸ்ரயேலரும் கண்டார்கள், அப்போது அவர்கள் நடைபாதையில் முழங்காலிட்டு முகங்குப்புற விழுந்து, “அவர் நல்லவர், அவர் அன்பு என்றென்றும் நிலைத்திருக்கிறது” என்று அவரை வழிபட்டு, யெகோவாவுக்கு நன்றி செலுத்தினர்.
பின்பு அரசனும் எல்லா மக்களும் யெகோவாவுக்கு முன்பாக பலிகளைச் செலுத்தினார்கள்.
அதோடு அரசன் சாலொமோன் இருபத்திரண்டாயிரம் மாடுகளையும், இலட்சத்திருபதாயிரம் செம்மறியாடுகளையும், வெள்ளாடுகளையும் பலியாகச் செலுத்தினான்; இவ்விதமாக அரசனும் எல்லா மக்களும் இறைவனின் ஆலயத்தை அர்ப்பணம் செய்தார்கள்.
ஆசாரியர்கள் தங்களுக்குரிய இடத்தில் நின்றார்கள். லேவியர்களும் யெகோவாவின் கீதவாத்திய கருவிகளை வைத்துக்கொண்டு நின்றார்கள். இவற்றைத் தாவீது அரசன் யெகோவாவைத் துதிப்பதற்காக செய்திருந்தான். “யெகோவாவின் அன்பு என்றென்றைக்கும் நிலைத்திருக்கிறது” என்று சொல்லி அவன் நன்றி செலுத்தும்போது, இவை பயன்படுத்தப்பட்டன. லேவியர்களுக்கு எதிராக ஆசாரியர்கள் நின்று அவர்களின் எக்காளங்களை ஊதினார்கள். எல்லா இஸ்ரயேல் மக்களும் நின்றுகொண்டிருந்தனர்.
சாலொமோன் அரசன் யெகோவாவின் ஆலயத்தின் முன்பக்கத்திலுள்ள முற்றத்தின் நடுப்பகுதியை அர்ப்பணித்தான். அங்கே அவன் தகன காணிக்கைகளையும் சமாதான காணிக்கைகளின் கொழுப்பையும் செலுத்தினான். ஏனெனில் அவன் செய்திருந்த வெண்கல பலிபீடம் தகன காணிக்கைகளையும், தானிய காணிக்கைகளையும், கொழுப்புப் பங்குகளையும் கொள்ளமுடியாதபடி சிறியதாயிருந்தது.
ஏழாம் மாதம் இருபத்துமூன்றாம் நாளில் சாலொமோன் மக்களை அவர்கள் வீட்டிற்கு அனுப்பிவிட்டான். தாவீதுக்கும், சாலொமோனுக்கும், தனது மக்களான இஸ்ரயேலருக்கும் யெகோவா செய்த எல்லா நன்மைகளுக்காகவும் மனதில் சந்தோஷமும், மகிழ்ச்சியும் கொண்டவர்களாய் தங்கள் வீடுகளுக்குப் போனார்கள்.
இவ்வாறு சாலொமோன் யெகோவாவின் ஆலயத்தையும், அரச அரண்மனையையும் கட்டிமுடித்தான். யெகோவாவின் ஆலயத்தையும், தனது அரண்மனையையும் எவ்வாறு கட்டவேண்டுமென மனதில் எண்ணியிருந்தானோ அவ்வாறே எல்லாவற்றையும் வெற்றிகரமாக செய்துமுடித்தான்.