Skip to content
ரோமர் 8:18-30

ரோமர் 8:18-30

18
தற்காலத்தில் நாம் அனுபவிக்கும் கஷ்டங்கள் நம்மில் வெளிப்படப்போகின்ற அந்த மகிமையோடு, ஒப்பிடத்தக்கதல்ல என்றே நான் எண்ணுகிறேன்.
19
இறைவனுடைய மகன்கள் வெளிப்படுவதைக் காண படைக்கப்பட்டவை எல்லாமே ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கின்றன.
20
படைக்கப்பட்டவை அழிந்துபோகிறது. ஆனால், தங்கள் சொந்த விருப்பத்தினால் அல்ல, இறைவனின் சித்தத்தின்படியே அப்படி இருக்கின்றன;
21
இப்படி படைக்கப்பட்டவை எல்லாம் அழிவை ஏற்படுத்தும் அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்டு இறைவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுதந்திரத்திற்குள் பங்குகொள்ளும் நம்பிக்கையுடன் இருக்கிறது.
22
இன்றுவரைக்கும் படைக்கப்பட்டவை எல்லாம் பிரசவ வேதனையால், புலம்பிக்கொண்டே இருக்கின்றன என்பதை நாம் அறிவோம்.
23
அதுமாத்திரமல்ல, பரிசுத்த ஆவியானவரின் முதற்பலனைப் பெற்றிருக்கின்ற நாமும்கூட, பிள்ளைகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டதன் பூரணத்துவத்தை, அதாவது உடலிலிருந்து மீட்புப் பெறுவதற்கு, ஆவலாகக் காத்திருக்கும்போது உள்ளான வேதனையில் தவித்துக் கொண்டிருக்கிறோம்.
24
இந்த எதிர்பார்ப்பில்தான் நாம் இரட்சிக்கப்பட்டோம். நாம் எதிர்பார்த்திருக்கும் காரியத்தை நாம் இப்போது காண்போமானால், அது எதிர்பார்ப்பு அல்ல. யார்தான் தம்மிடம் ஏற்கெனவே இருக்கும் ஒன்றை எதிர்பார்த்திருப்பார்கள்?
25
ஆனால் நாம் நம்மிடம் இன்னும் இல்லாத ஒன்றை எதிர்பார்த்தால், அதற்காக நாம் பொறுமையோடு காத்திருப்போம்.
26
அவ்வேளையில் பரிசுத்த ஆவியானவர் நமது பலவீனத்தில் நமக்கு உதவி செய்கிறார். நாம் எப்படி மன்றாட வேண்டும் என்று நாம் அறியாதிருக்கிறோம். ஆனால் பரிசுத்த ஆவியானவர் தாமே வார்த்தைகளால் விவரிக்க முடியாத தவிப்போடு, நமக்காகப் பரிந்து வேண்டுகிறார்.
27
நமது இருதயத்தை ஆராய்கின்ற இறைவன், பரிசுத்த ஆவியானவருடைய மனதையும் அறிவார். ஏனெனில் பரிசுத்த ஆவியானவர் இறைவனுடைய சித்தத்திற்கு ஏற்றபடி, பரிசுத்தவான்களுக்காகப் பரிந்துவேண்டுதல் செய்கிறார்.
28
இறைவனின் நோக்கத்தின்படியே அழைக்கப்பட்டு, அவரில் அன்பாயிருக்கிறவர்களுக்கு அவர் எல்லாக் காரியங்களிலும் நன்மையுண்டாகும்படியே செயலாற்றுகிறார் என்பது நமக்குத் தெரியும்.
29
இறைவன் தாம் முன்னறிந்தவர்கள், தம்முடைய மகனின் தன்மையை ஒத்திருக்க வேண்டும் என முன்குறித்திருக்கிறார். பல சகோதரர் மத்தியிலே கிறிஸ்து முதற்பேறானவராய் இருக்கும்படியே அவர் இப்படிச் செய்தார்.
30
இறைவன் முன்குறித்தவர்களை அவர் அழைத்தும், தம்மால் அழைக்கப்பட்டவர்களை, நீதிமான்களாக்கியும், நீதிமான்களாய் ஆக்கப்பட்டவர்களை தன்னுடன் மகிமைப்படுத்தியும் இருக்கிறார்.
Settings

Reading Style

Typeface

Font Size 19px

Options