வெளிப்படுத்தல் 13:1-10
1
அந்த இராட்சதப் பாம்பு கடற்கரையில் காத்து நின்றது. ஒரு மிருகம் கடலில் இருந்து வெளியேறுவதை நான் கண்டேன். அதற்குப் பத்துக் கொம்புகளும், ஏழு தலைகளும் இருந்தன. அதன் பத்துக் கொம்புகள் மேலும், பத்து கிரீடங்கள் இருந்தன. அதனுடைய ஒவ்வொரு தலையின்மேலும், இறைவனை அவமதிக்கும் ஒரு பெயர் எழுதப்பட்டிருந்தது.
2
நான் கண்ட அந்த மிருகம், ஒரு சிறுத்தையைப்போல் காணப்பட்டது. ஆனால் அதன் கால்களோ, கரடிகளின் கால்கள் போலவும், அதன் வாய், சிங்கத்தின் வாயைப் போலவும் காணப்பட்டது. அந்த இராட்சதப் பாம்பு தனது வல்லமையையும், தனது அரியணையையும், தனது பெரிதான அதிகாரத்தையும், அந்த மிருகத்திற்குக் கொடுத்தது.
3
அந்த மிருகத்தினுடைய தலைகளில் ஒன்றில், மரணத்துக்குரிய ஒரு காயம் ஏற்பட்டிருந்ததுபோல் காணப்பட்டது. ஆனால், அந்தக் காயம் குணமடைந்திருந்தது. முழு உலகமும் வியப்படைந்து, அந்த மிருகத்தைப் பின்பற்றியது.
4
அந்த இராட்சதப் பாம்பு மிருகத்திற்கு அதிகாரத்தைக் கொடுத்திருந்ததால், மக்கள் அந்த இராட்சதப் பாம்பை வணங்கினார்கள். அவர்கள் அந்த மிருகத்தையும் வணங்கி, “இந்த மிருகத்திற்கு ஒப்பானவன் யார்? இந்த மிருகத்தை எதிர்த்து, யுத்தம் செய்ய யாரால் முடியும்?” என்று கேட்டார்கள்.
5
அந்த மிருகத்திற்கு பெருமை பேச்சுகளையும், இறைவனை அவமதித்து பேசவும், ஒரு வாய் கொடுக்கப்பட்டது. நாற்பத்திரெண்டு மாதங்களுக்கு, எதையும் செய்வதற்கு அதற்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது.
6
அது இறைவனை அவமதித்துப் பேசுவதற்காகவும், அவருடைய பெயரையும், அவருடைய வாசஸ்தலத்தையும், பரலோகத்தில் வாழ்கிறவர்களையும் தூசிப்பதற்காகவும் தன் வாயைத் திறந்தது.
7
பரிசுத்தவான்களை எதிர்த்து யுத்தம்செய்து, அவர்களை வெற்றிகொள்வதற்கும், அதற்கு வல்லமை கொடுக்கப்பட்டது. ஒவ்வொரு கோத்திரத்தின்மேலும், மக்கள்மேலும், மொழியினர்மேலும், நாட்டினர்மேலும் அதற்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது.
8
உலகம் படைக்கப்பட்டதிலிருந்து, ஆட்டுக்குட்டியானவருக்குச் சொந்தமான ஜீவப் புத்தகத்தில், பெயர் எழுதப்படாமல் இருந்த எல்லோருமே, அந்த மிருகத்தை வணங்குவார்கள்.
9
கேட்பதற்கு காதுள்ளவன் கேட்கட்டும். ஏனெனில்,
10
“யாராவது சிறைப்பட்டுப்போக குறிக்கப்பட்டிருந்தால், அவர்கள் சிறைப்பட்டே போவார்கள். யாராவது வாளினால் கொல்லப்பட குறிக்கப்பட்டிருந்தால், அவர்கள் வாளினால் கொல்லப்படுவார்கள்.” ஆகவே பரிசுத்தவான்களைப் பொறுத்தமட்டில், அவர்கள் மனந்தளராமல் இருக்கவேண்டும். அவர்கள் தங்கள் பொறுமையையும், விசுவாசத்தையும் அப்பொழுது காட்டவேண்டும்.
Settings