வெளிப்படுத்தல் 13:11-18
11
பின்பு பூமியிலிருந்து, இரண்டாவது மிருகம் வெளியே வருவதை நான் கண்டேன். அதற்கு ஆட்டுக்குட்டியின் கொம்புகளைப்போல் இரண்டு கொம்புகள் இருந்தன. ஆனால் இது இராட்சதப் பாம்பைப்போலவே பேசியது.
12
அவ்வாறு இது அந்த முதலாவது மிருகத்தின் சார்பாக, அதனுடைய முழு அதிகாரத்தையுமே தான் பிரயோகித்தது. இது பூமியையும் அதில் குடியிருக்கிறவர்களையும் அந்த முதல் மிருகத்தை வணங்கும்படி செய்தது. அந்த முதலாவது மிருகமே, சாவை விளைவிக்கக்கூடிய காயமடைந்து, குணமடைந்திருந்த மிருகமாகும்.
13
இந்த இரண்டாவது மிருகம், பெரிய அற்புத அடையாளங்களைச் செய்தது. எல்லா மனிதரும் காணும்படியாக, இது வானத்திலிருந்து பூமியின்மேல் நெருப்பு வரும்படியும் செய்தது.
14
முதலாவது மிருகத்தின் சார்பாக, அடையாளங்களைச் செய்துகாட்டும் வல்லமை இரண்டாவது மிருகத்திற்கு கொடுக்கப்பட்டதனால், அது பூமியின் மக்களை ஏமாற்றியது. வாளினால் காயமடைந்து, இன்னும் உயிருடன் இருக்கிற, அந்த முதல் மிருகத்தைக் கனம் பண்ணுவதற்காக, அதற்கு ஒரு உருவச்சிலையைச் செய்யும்படி, இரண்டாவது மிருகம் அவர்களுக்கு உத்தரவிட்டது.
15
முதலாவது மிருகத்தினுடைய உருவச்சிலைக்கு உயிர்கொடுக்கும் வல்லமை இந்த மிருகத்திற்குக் கொடுக்கப்பட்டது. இதனால் அந்த உருவச்சிலை, பேசும் ஆற்றலுடையதாய் இருந்தது. அந்த உருவச்சிலையை வணங்க மறுத்த எல்லோரையும் அது கொலை செய்யும்படி அனுமதி வழங்கியது.
16
அத்துடன், இந்த இரண்டாவது மிருகம் சிறியவர், பெரியவர், செல்வந்தர், ஏழைகள், குடியுரிமை பெற்றோர், அடிமைகள் எல்லோரையுமே தங்களுடைய வலதுகையிலோ, அல்லது தங்களுடைய நெற்றியிலோ, ஒரு அடையாளத்தைப் பெற்றுக்கொள்ளும்படி வற்புறுத்தியது.
17
இதனால், அந்த அடையாளத்தைப் பெறாமலிருந்த யாராலும் வாங்கவோ விற்கவோ முடியாதிருந்தது. அந்த மிருகத்தின் பெயர் அல்லது அதன் பெயருக்குரிய எண்தான் அந்த அடையாளம்.
18
இதை விளங்கிக்கொள்ள ஞானம் தேவை. யாராவது அறிவு ஆற்றல் உடையவனாய் இருந்தால், அவன் அந்த மிருகத்தின் எண்ணைக் கணக்குப் பார்க்கட்டும். ஏனெனில், அது மனிதனுக்குரிய எண்தான்; அந்த எண் 666 ஆகும்.
Settings