Skip to content
மீகா 6:1-8

மீகா 6:1-8

1
யெகோவா சொல்கிறதைக் கேளுங்கள்: “எழுந்து, மலைகள் முன் உங்கள் வழக்கை வாதாடுங்கள்; குன்றுகள் எல்லாம் நீங்கள் சொல்லப்போவதைக் கேட்கட்டும்.
2
“மலைகளே, யெகோவாவின் குற்றச்சாட்டைக் கேளுங்கள்; பூமியின் நிலையான அஸ்திபாரங்களே, செவிகொடுங்கள். தம் மக்களுக்கெதிரான வழக்கொன்று யெகோவாவுக்கு உண்டு. இஸ்ரயேலுக்கு எதிராக அவர் ஒரு குற்றச்சாட்டைக் கொண்டுவருகிறார்.
3
“யெகோவா சொல்கிறதாவது: என் மக்களே, நான் உங்களுக்கு என்ன செய்தேன்? நான் எவ்விதம் உங்கள்மேல் பாரத்தைச் சுமத்தினேன்? எனக்குப் பதில் சொல்லுங்கள்.
4
எகிப்திலிருந்து நான் உங்களை வெளியே கொண்டுவந்தேன். அடிமைத்தன நாட்டிலிருந்து மீட்டு வந்தேன். உங்களை வழிநடத்த மோசேயுடன், ஆரோனையும் மிரியாமையும் அனுப்பினேன்.
5
என் மக்களே, மோவாபிய அரசன் பாலாக் என்ன ஆலோசனை செய்தான் என்பதையும், பேயோரின் மகன் பிலேயாம் என்ன பதிலைக் கொடுத்தான் என்பதையும் நினைத்துப் பாருங்கள். யெகோவா உங்களுக்குச் செய்த நீதியான செயல்களை நீங்கள் அறிந்துகொள்ளும்படி, சித்தீமிலிருந்து கில்காலுக்குப் போன உங்கள் பயணத்தை நினைத்துப் பாருங்கள்.”
6
இஸ்ரயேல் மக்கள் சொல்கிறதாவது: “யெகோவாவிடம் நாங்கள் எதைக் கொண்டுவருவோம். மேன்மையான இறைவனுக்கு முன்பாக எதனுடன் தலைகுனிந்து வழிபடுவோம்? அவர் முன்பாக ஒரு வயதுக் கன்றுக்குட்டிகளைத் தகன காணிக்கையாகக் கொண்டுவருவோமா?
7
ஆயிரக்கணக்கான செம்மறியாட்டுக் கடாக்களிலும், பதினாயிரக் கணக்கான எண்ணெய் ஆறுகளிலும் யெகோவா விருப்பமாயிருப்பாரோ? என் மீறுதலுக்காக என் முதற்பேறான பிள்ளையைக் காணிக்கையாகச் செலுத்தட்டுமா? என் ஆத்துமாவின் பாவங்களுக்காக என் கர்ப்பக்கனியை நான் கொடுக்கட்டுமா?”
8
மனிதனே, நல்லது என்ன என்பதை அவர் உனக்குக் காட்டியிருக்கிறாரே; யெகோவா உன்னிடம் எதைக் கேட்கிறார்? நீதியாய் நடந்து, இரக்கத்தை நேசித்து, உன் இறைவனுடன் தாழ்மையாய் நடக்கும்படி தானே கேட்கிறார்.
Settings

Reading style

Typeface

Font size 19px

Reading width 90 chars

Options