மாற்கு 6:1-12
1
இயேசு அங்கிருந்து புறப்பட்டு, தமது சொந்தப் பட்டணத்திற்குச் சென்றார். அவருடைய சீடர்களும் அவருடன் சென்றார்கள்.
2
ஓய்வுநாளிலே, அவர் அவர்களுக்கு ஜெப ஆலயத்தில் போதிக்கத் தொடங்கினார். இயேசு சொன்னதைக் கேட்ட அநேகர் வியப்படைந்தார்கள். அவர்கள், “இவன் இந்தக் காரியங்களை எங்கிருந்து பெற்றான்? இவனுக்குக் கொடுக்கப்பட்ட இந்த ஞானம் எப்படிப்பட்டது? இவன் செய்யும் அற்புதங்கள் என்ன?
3
இவன் தச்சன் அல்லவா? இவன் மரியாளின் மகன் அல்லவா? யாக்கோபு, யோசேப்பு, யூதா, சீமோன் ஆகியோரின் சகோதரன் அல்லவா? இவனுடைய சகோதரிகளும் நம்முடன் இருக்கிறார்களே” என்றார்கள். எனவே அவர்கள் அவர்மேல் கோபமடைந்தார்கள்.
4
இயேசு அவர்களிடம், “ஓர் இறைவாக்கினன் அவனது சொந்தப் பட்டணத்திலும், அவனது உறவினர்கள் மத்தியிலுமேயன்றி வேறெங்கும் மதிப்பு பெறுவான்” என்றார்.
5
வியாதியுடையவர்கள் சிலர்மேல் தமது கைகளை வைத்து குணமாக்கினார், வேறு அற்புதங்களை அவரால் அங்கு செய்ய முடியவில்லை.
6
அவர்கள் விசுவாசத்தில் குறைவாயிருப்பதைக் கண்டு, அவர் வியப்படைந்தார். பின்பு இயேசு கிராமம் கிராமமாகச் சுற்றிப்போய் போதித்தார்.
7
அவர் பன்னிரண்டு சீடர்களையும் தம்மிடம் அழைத்து, அவர்களை இரண்டிரண்டுபேராக அனுப்பத் தொடங்கினார்; அசுத்த ஆவிகளைத் துரத்தவும் அவர்களுக்கு அதிகாரத்தைக் கொடுத்தார்.
8
இயேசு அவர்களுக்கு அறிவுறுத்திச் சொன்னதாவது: “ஒரு ஊன்றுகோலைத் தவிர, உங்கள் பயணத்திற்கென்று உணவையோ, பையையோ, உங்கள் மடிப்பையில் பணத்தையோ எதையும் எடுத்துச்செல்ல வேண்டாம்.
9
உங்கள் பாதரட்சைகளைப் போட்டுக்கொண்டு போங்கள். ஆனால், மாற்று உடையையோ கொண்டுபோக வேண்டாம்.
10
நீங்கள் போகும் பட்டணங்களில் ஒரு வீட்டிற்குள் போனால், அந்தப் பட்டணத்தைவிட்டுப் புறப்படும்வரை அங்கேயே தங்கியிருங்கள்.
11
எந்த இடத்திலுள்ளவர்களாவது உங்களை வரவேற்காமலோ, நீங்கள் சொல்வதைக் கேட்காமலோ இருந்தால், நீங்கள் அங்கிருந்து புறப்படும்போது, உங்கள் கால் தூசியை அங்கே உதறிவிட்டுப் போங்கள். அது அவர்களுக்கு எதிரான சாட்சியாய் இருக்கும்.”
12
சீடர்கள் புறப்பட்டுப்போய், மக்கள் பாவத்திலிருந்து மனந்திரும்ப வேண்டும் என்று பறைசாற்றினார்கள்.
Settings