நியாயாதிபதிகள் 4:11-24
11
கேனியனான ஏபேர் மற்ற கேனியர்களை விட்டுப் பிரிந்திருந்தான், கேனியர் மோசேயின் மைத்துனனான ஒபாபின் சந்ததியில் வந்தவர்கள், அவன் கேதேசிற்கு அருகிலுள்ள சானாயிமில் இருக்கிற பெரிய மரத்தடியில் குடியிருந்தான்.
12
அபினோமின் மகன் பாராக், தாபோர் மலைக்குமேல் போயிருக்கிறான் என்று சிசெராவுக்குச் சொல்லப்பட்டது.
13
அப்பொழுது சிசெரா தன்னிடமிருந்த தொளாயிரம் இரும்பு ரதங்களையும், தன்னுடன் இருந்த எல்லா மனிதர்களையும் ஒன்றுசேர்த்துக்கொண்டு அரோஷேத் ஹகோயீமிலிருந்து கீசோன் ஆற்றருகே வந்தான்.
14
தெபோராள் பாராக்கிடம், “நீ போ! இதுவே சிசெராவை யெகோவா உன் கையில் தரும் நாள், உனக்கு முன்னே யெகோவா போகவில்லையா?” என்றாள். எனவே பாராக்கும் அவனுடனிருந்த பத்தாயிரம் போர்வீரர்களும் தாபோர் மலையை விட்டு கீழே இறங்கினார்கள்.
15
பாராக் முன்னேறுகையில் யெகோவா சிசெராவையும், அவனுடைய ரதங்களையும், அவனுடைய இராணுவத்தையும் வாளினால் முறியடித்தார். அப்பொழுது சிசெரா தன் தேரைக் கைவிட்டு ஓடித் தப்பினான்.
16
ஆனால் பாராக் ரதங்களையும், இராணுவத்தையும் அரோஷேத் ஹகோயிம் வரைக்கும் துரத்திச்சென்றான். சிசெராவின் எல்லாப் படைகளும் வாளுக்கு இரையாகின. ஒருவனும் மிஞ்சவில்லை.
17
ஆயினும் சிசெரா கேனியனான ஏபேரின் மனைவி யாகேலுடைய கூடாரத்திற்குள் ஓடினான். ஏனெனில் ஆத்சோரின் அரசன் யாபீனுக்கும் கேனியனான ஏபேரின் வம்சத்துக்கும் சிநேகபூர்வமான உறவு இருந்தது.
18
அப்பொழுது யாகேல் வெளியில் சென்று சிசெராவைச் சந்தித்து அவனிடம், “வாரும் ஐயா! என் கூடாரத்திற்குள் வாரும். பயப்படவேண்டாம்” என்றாள். எனவே அவன் கூடாரத்திற்குள் சென்றான். அப்பொழுது அவள் அவனை ஒரு போர்வையால் மூடிவிட்டாள்.
19
அவன், “நான் தாகமாயிருக்கிறேன். தயவுசெய்து தண்ணீர் தா” என்றான். அவள் பாலுள்ள தோல் குடுவையைத் திறந்து அவனுக்குக் குடிக்கக்கொடுத்து அவனை மூடிவிட்டாள்.
20
“அவ்வேளை சிசெரா அவளிடம், நீ கூடாரவாசலில் நின்றுகொள். யாராவது வந்து, ‘இங்கு யாரேனும் இருக்கிறார்களா?’ என்று கேட்டால், ‘இல்லை’ என்று சொல் என்றான்.”
21
ஆனால் ஏபேரின் மனைவி யாகேல் சிசெரா களைத்துப்போய் ஆழ்ந்த நித்திரையில் இருக்கும்போது, ஒரு கூடார முளையையும், சுத்தியலையும் எடுத்துக்கொண்டு சத்தமில்லாமல் சென்று அவனுடைய நெற்றியில் முளையை வைத்து அடித்தாள். அது அவனுடைய மூளையைத் துளைத்துக்கொண்டு தரைவரை சென்றது. எனவே அவன் இறந்தான்.
22
சிசெராவை துரத்திவந்த பாராக் அப்போது அங்கு வந்துசேர்ந்ததும், யாகேல் சென்று அவனைச் சந்தித்தாள். “வாரும் நீர் தேடும் மனிதனை உமக்குக் காட்டுகிறேன்” என்றாள். எனவே அவன் அவளுடன் உள்ளே சென்று பார்த்தபோது அவனுடைய நெற்றியில் கூடார முளை அடிக்கப்பட்டு, இறந்திருக்கக் கண்டான்.
23
அந்த நாளில் இறைவன் இஸ்ரயேலர் முன்பாக கானானிய அரசன் யாபீனை அடக்கினார்.
24
அதோடு இஸ்ரயேலரின் கரம் கானானிய அரசன் யாபீனை அழிக்கும்வரை மென்மேலும் வலிமையடைந்தது.
வேதாகம உரை: Biblica® Open Indian Tamil Contemporary Version™, © 2005, 2020, 2022 Biblica, Inc. · CC BY-SA 4.0“Biblica” is a trademark registered in the United States Patent and Trademark Office by Biblica, Inc., used with permission.
Settings